Sorting by

×

இந்தியாவிலேயே அதிக மக்களவைத் தொகுதிகளை கொண்ட மாநிலம் உத்தரபிரதேசம். மத்தியில் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் உ.பி-யில் உள்ள 80 தொகுதிகள் யாருக்கு கைக்கொடுக்கப் போகிறது? மோடி மற்றும் ராகுலின் காரசார பிரசாரம் தேர்தல் களத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்தெல்லாம் விரிவாக விசாரித்தோம்.

ராகுல் காந்தி – பிரதமர் மோடி – அகிலேஷ் யாதவ்

கடந்த 2022-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 403 சட்டமன்ற தொகுதிகளில் 273 தொகுதிகளை கைப்பற்றியது பா.ஜ.க கூட்டணி, 125 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சியின் கூட்டணியும், காங்கிரஸ் 2 மற்றும் , மயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 1 தொகுதியையும் பெற்றது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் 62 இடங்களையும் வென்றிருந்தது பா.ஜ.க. முன்னர் பிரிந்துநின்ற நிலையில் 2024-ல் காங்கிரஸும் சமாஜ்வாடி கட்சியும் `இந்தியா` கூட்டணியாக இணைந்து நிற்பது குறிப்பிடதக்கது. 62-ல் சமாஜ்வாடியும் 17-ல் காங்கிரஸும் என தொகுதி பங்கீடு செய்யப் பட்டிருக்கிறது. சமீபகாலமாக வலுவிழந்து காணப்படும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. மொத்தமுள்ள 80 எம்.பி தொகுதிகளில் 26 தொகுதிகளுக்கான தேர்தல் 4-ம் கட்ட தேர்தலின்போது நிறைவடைந்துள்ளது.

பிரசார பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி `உத்தரபிரதேசத்தில் `இந்தியா’ புயல் வீசுகிறதென` பேசினார். பிரதமர் மோடியோ “இந்தியா’ கூட்டணிக்கு வாக்களிப்பதே வீண்’’ என பேசிவருகிறார். “அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க வெல்லும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் அமித் ஷா, “பா.ஜ.க-வின் வாக்குறுதிகள் அனைத்தும் பொய் என அம்பலமாகிவிட்டதால், மக்கள் மோடியை புறக்கணிப்பார்கள்” என சாடுகிறார் சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ்.

காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தியும் உ.பி-யில் தீவிர பிரசாரத்தில் இருப்பது இந்தியா கூட்டணிக்கு ப்ளஸ். `இந்தியா` கூட்டணி மற்றும் பா.ஜ.க இடையே வார்த்தைபோர் முற்றியிருக்கும் சூழலில், உத்திரபிரதேச களம் யாருக்கு எப்படி இருக்கிறது என்ற கேள்வி தேசிய கவனம் பெற்றுள்ளது.

பிரியங்கா காந்தி

பா.ஜ.க ஆதரவாளரகள் சிலர், “உத்தரபிரதேசம் பா.ஜ.க-வின் கோட்டையாகி 7-8 ஆண்டுகள் ஆகிவிட்டன. அங்கே காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சியெல்லாம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாத நிலையை அடைந்துவிட்டார்கள். சமாஜ்வாடி கட்சியோ, கடந்த நாடாளுமன்ற தேர்தலை போல வென்ற 5 சீட்டுகளை தக்க வைக்கலாம் அவ்வளவுதான். மற்றபடி உத்தரபிரதேசத்தில் பிரதமர் மோடி போட்டியிட தொடங்கியதில் இருந்தே பா.ஜ.க அலை வீசுகிறது.

ராகுல் காந்தி

அந்த அலையில் `இந்தியா கூட்டணி’ காணாமல் போகப் போகிறது. பிரதமராக விரும்புபவர் எந்த தொகுதியில் நின்றாலும் வெற்றிபெறும் சூழல் இருக்க வேண்டும், ஆனால் 2019-ல் ராகுல் அமேதியில் தோற்றுப் போனார், இம்முறை வயநாட்டில் தோற்க இருப்பதாலே, ரேபரேலியில் போட்டியிடுகிறார். ஒரு தொகுதியை வெல்ல அல்லாடும் ராகுல் ‘உ.பி-யையும், இந்தியாவையும் வெல்வார் எனப் பேசுவதெல்லாம் பகல் கனவு.எனவே உ.பி மீண்டும் பா.ஜ.க-வுக்குதான்” என்றனர்

மோடி வேட்புமனு தாக்கல்

அரசியல் விமர்சகர்கள் சிலர், “தேர்தல் ஆரம்பிக்கும்போது உ.பி பா.ஜ.க-வுக்குத்தான் என்ற கருத்தே நிலவியது. ஆனால் காங்கிரஸ் சமாஜ்வாடி கூட்டணி அமைந்ததும், தேசிய அளவில் `இந்தியா` கூட்டணியின் எழுச்சியும் சந்தேகங்களை கிளப்புகிறது. மோடிக்கு எதிரியே இல்லையென பேசிவந்த பா.ஜ.க. தற்போது `மோடி VS ராகுல்’ என பேச ஆரம்பித்திருக்கிறது. உ.பி பிரசார களத்தில் கடுமையான உழைப்பை `இந்தியா’ கூட்டணி செலுத்துவதால் உ.பி-யில் பெரு வெற்றியை இந்தியா கூட்டணி பெறாது என்றாலும் பழைய வெற்றியை பா.ஜ.க தக்க வைக்குமா என்பது ஜுன் 4-ம் தேதிதான் தெரியும்” என்றார்

இறுதியாக பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் பிரமுகர் இனியன் ராபர்ட், “உ.பி-யில் இந்தியா கூட்டணியை சமூக நீதி கூட்டணியாக பார்க்கிறார்கள். அம்மாநிலத்தின் நீண்ட கால கோரிக்கையான சாதிவாரி கணக்கெடுப்புதான் எங்கள் தேர்தல் முழக்கம். 2014 முதல் பா.ஜ.க மேற்கொண்ட சாதி, மத அரசியல் பா.ஜ.க-வுக்கு வினையாக அமைந்திருக்கிறது. அதனால்தான் `இந்து – முஸ்லீம் பிரிவினை குறித்து பேச மாட்டேன்’ என பல்டி அடித்திருக்கிறார். உ.பி-யில் நடந்துமுடிந்த 26 தொகுதிகள் மட்டுமல்ல 250-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தோல்வி காத்திருப்பது தெரிந்ததால்தான் மோடி பேச்சில் பதற்றமும், அரசியல் வியூகங்களில் மாற்றமும் செய்திருக்கிறது பா.ஜ.க. உ.பி `இந்தியா’ கூட்டணி 50 தொகுதிகளை தாண்டுவோம். அதனை பார்க்கத்தான் போகிறீர்கள்” என்றார் அதீத நம்பிக்கையில்…

இனியன் ராபர்ட்

உ.பி-யில் மீதமுள்ள 54 எம்.பி தொகுதிகளில் ஜூன் 1-ம் தேதி வரை மூன்று கட்டங்களாக வாக்குபதிவு நடைபெறுகிறது. இடைபட்ட இந்த 15 நாட்களில் நடக்கும் பிரசாரங்களும் இரு தரப்பின் அரசியல் நகர்வுகளுமே தேர்தல் முடிவுகளில் அதீத பங்குவகிக்கும்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *