திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சி பாஜகவோடு ரகசிய உடன்பாடு வைத்துள்ளது என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் மம்தாவின் பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ”இந்தியாவின் ஒரு மூத்த அரசியல்வாதி, மூன்று முறை மேற்குவங்கத்தின் மாண்புமிகு முதலமைச்சர் திருமிகு.மம்தா பானர்ஜி அவர்கள் இப்படி கொஞ்சமும் பொறுப்பில்லாமல், உண்மைக்குப் புறம்பாக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் ,திமுக கட்சிகளை பாஜகவோடு ரகசிய உடன்பாடு வைத்துள்ளார்கள் என்று பேசுவது அபத்தமானது மட்டுமல்ல கடுமையான கண்டனத்திற்குரியது.
தமிழ்நாட்டில் நாங்கள் பாஜகவிற்கு எதிராக ஒவ்வொரு தினமும் யுத்தம் நடத்திக் கொண்டுள்ளோம். எமது மொழி, இனம், பண்பாடு ,வளர்ச்சி அனைத்திற்கும் எதிராக உள்ள பாஜகவை இந்தத் தேர்தலில் தோற்கடிப்பதே எங்கள் இலக்கு. அஇஅதிமுக முகமூடி அணிந்து கூட பாஜக தமிழ்நாட்டில் கால்பதித்து விடக்கூடாது என்பதில் எமது தமிழினம் உறுதியோடு உள்ளது.
எமது தலைவர்,மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல்காந்தி அவர்கள் அச்சமற்று அயராது மோடி அரசிற்கும்,பாஜகவிற்கும் எதிராக சமரசமற்ற போராட்டத்தை நடத்திவருகிறார். தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக மாண்புமிகு முதலமைச்சர் திமுகவின் தலைவர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் பாஜகவோடு சமரசமற்று போராடிவருகிறார். தேசிய அளவில் நாடாளுமன்றத்தில் நாங்கள் பாஜக அரசை எதிர்த்து நடத்தும் போராட்டத்தில் திமுக எப்பொழுதும் எங்கள் பக்கம் நிற்கிறது.
ஆனால் திரிணமுள் காங்கிரஸ் பல நேரங்களில் அப்படிச் செயவதில்லை. ஆனாலும் உங்கள் மீது எந்த அவதூறுகளையும் நாங்கள் பரப்பியதில்லை. ஏனென்றால் பாஜகவிற்கு எதிரான யுத்தத்தில் ,நாட்டின் நலன்கருதி எதிர்கட்சிகள் ஒன்றாகவே பயணிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.நீங்களும்.அந்த நிலைப்பாட்டிலேயே நில்லுங்கள். அதுதான் மேற்குவங்கத்திற்கும்,இந்தியாவிற்கும் நல்லது.

நீங்கள் 15 ஆண்டுகாலம் செய்த சாதனைகளைச் சொல்லி வாக்குக்கேளுங்கள். மக்கள் உங்கள் பக்கம் நிற்பார்கள். கூட்டணிக் கட்சிகளை அவதூறு செயவதன் மூலம் நீங்கள் அடையக்கூடியது ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டில் மட்டுமல்ல கேரளம்,புதுச்சேரி,அஸ்ஸாம் ,மேற்குவங்கம் உள்ளிட்ட எந்த மாநிலத்திலும் பாஜக வெல்லக் கூடாது என்பதே எமது நிலைப்பாடு.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடித்து ,இந்தியாவைப் பாதுகாக்க எமது தலைவர் ராகுல் காந்தி தலைமையேற்று நடத்தும் போராட்டத்தில் நீங்கள் பங்கேற்காவிட்டாலும் பரவாயில்லை. பலவீனப்படுத்த முயற்சி செய்யாதீர்கள். இந்த தேசம் உங்களை மன்னிக்காது” என்று விமர்சித்திருக்கிறார்
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
