தேர்தல் பணிகளை முடக்கும் நோக்கத்தில் தன்னை பாஜக சிறையில் அடைத்ததாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் இன்று (செப். 29) தெரிவித்தார்.
மாநில நலனுக்காக மேற்கொள்ளும் வேலையை நிறுத்தவும், நேர்மையற்றவர் என்பதை நிரூபிப்பதற்காகவும் திட்டமிட்டு சிறையில் அடைத்ததாகவும் குற்றம் சாட்டினார்.
ஹரியாணா மாநிலத்தில் அக்டோபர் 5ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹரியாணாவில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சதீஷ் யாதவை ஆதரித்து அரவிந்த் கேஜரிவால் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிரசாரத்தில் மக்கள் மத்தியில் கேஜரிவால் பேசியதாவது,
”தில்லி மக்கள் நலனுக்காக ஆம் ஆத்மி செய்யும் செயல்களை பிரதமர் நரேந்திர மோடி கவனித்து வருகிறார். தில்லியில் ஆம் ஆத்மி முதலில் வெற்றி பெற்றது. பின்னர் பஞ்சாபில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
இது தொடர்ந்தால் ஹரியாணா மற்றும் குஜராத்திலும் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்று அதனை நிறுத்துவதற்காகவே பாஜக என்னை சிறையில் அடைத்தது. மாநில நலனுக்கான என் வேலைகளை நிறுத்துவதற்கும், நேர்மையற்றவன் என நிறுவதற்கும் என்னை சிறையில் அடைத்தது.
ஆம் ஆத்மி ஆட்சியில் பள்ளிகளின் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தனியார் பள்ளிகளில் இருந்து 4 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அதனால், ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள், உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை நாங்கள் உத்திரவாதம் அளிக்கிறோம்” என கேஜரிவால் குறிப்பிட்டார்.
படிக்க | சொல்லப் போனால்… செந்தில் பாலாஜியும் 4.34 லட்சம் விசாரணைக் கைதிகளும்!
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து செப். 13ஆம் தேதி ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்தார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI
