Sorting by

×

கரூரில் கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் ஆண்டாங் கோவில் புதூரைச் சேர்ந்த ரமேஷ் மகன் அஸ்வின் (12).அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் மகன் விஷ்ணு (11), இளங்கோ மகன் மாரிமுத்து (11). அஸ்வின் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பும், ஸ்ரீ விஷ்ணு எட்டாம் வகுப்பும், மாரிமுத்து ஆறாம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்நிலையில் திங்கள்கிழமை காலை 3 பேரும் விளையாட செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றுள்ளனர். ஆனால் மாலை நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீட்டுப் பகுதியில் மற்றும் உறவினர் வீடுகளிலும் தேடி உள்ளனர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இரவு 11 மணி அளவில் அதே பகுதியில் உள்ள ரவிச்சந்திரன் என்பவர் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது கிணற்றின் அருகே மூன்று பேரின் காலணிகளும் கிடந்துள்ளன.இதனால் சந்தேகம் அடைந்த மாணவர்களின் உறவினர்கள் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று பேரின் உடல்களையும் இரவு 12 மணியளவில் மீட்டனர். மேலும் இது குறித்து தகவல் இருந்த கரூர் நகர காவல் நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் மூன்று மாணவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *