Sorting by

×

போராட்டங்கள் அரசியலின் உயிர்நாடி என்றால், அதை முன்னெடுப்பவர்களின் சிறைவாசம் என்பது அவர்கள் தங்களை களத்தில் நிரூபிக்க, ஒரு தலைவனாக தன்னை மக்களிடம் கொண்டு சேர்க்கக் கூடிய மார்க்கம். ‘நமக்காக ஒருவன் சிறை செல்கிறான் என்றால் அவனல்லவா நமக்கான குரலாக மக்கள் மன்றங்களில் ஒலிக்கக் கூடியவன்’ என்ற நம்பிக்கையைப் பாய்ச்சக்கூடிய மகா அஸ்திரம்.

‘நானும் ரவுடி தான்’ என்ற பாணியில் இன்று அரசியலுக்கு வருவோர் அதிகரித்துவிட்டனர். அவர்களிடம் ‘மக்கள் பிரச்சினைக்காக சிறைக்குச் செல்லத் தயாரா?’ என்று கேட்டாலே அவர்களின் வண்டவாளங்கள் தண்டவாளங்கள் மட்டுமல்ல, கப்பல்கூட ஏறும். இந்தப் பின்னணியில், சிறைவாசம் அரசியலில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைப் பற்றி அலசுவோம்.

அந்த வரிசையில் பெரியார், அண்ணா தொட்டு கருணாநிதி, வைகோ, ஸ்டாலின், சீமான் என்று கைதாகி தங்கள் அரசியல் பயணத்தில் தனி அத்தியாயங்களை எழுதியவர்களைப் பற்றி பார்ப்போம்.

தமிழக அரசியல் வரலாற்றில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி பேசித் தீராது. போராட்ட வியூகத்திலும் பேசினோம், இப்போது சிறைவாச வியூகத்திலும் பேசாமல் கடந்துவிட இயலாது.

1937ம் ஆண்டு, சென்னை மாகாணத்தில் ஆட்சியைப் பிடித்த ராஜாஜி, பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை இந்தி கற்பது கட்டாயம் என்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து பெரியார் போராட்டம் அறிவிக்க, அதில் அண்ணாவும் கலந்து கொண்டார். இந்தப் போராட்டம் தொடர பெரியார், அண்ணா ஆகியோர் 1938-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். அண்ணாவுக்கு 4 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பெரியாருக்கு ஓராண்டு சிறை என்று உறுதியானது.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் இரண்டாவது கட்டமாக நடைபெற்றபோதும், அண்ணா தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது. இந்தியை ஆட்சி மொழியாக அறிவிக்கும் 17-வது பிரிவை நீக்கவேண்டும் என வலியுறுத்தி 17 நவம்பர் 1963-ல் தொடங்கி 26 ஜனவரி 1965 வரை இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடர்ச்சியாக நடத்தப்படும் என அறிவித்தார் அண்ணா.

அந்த வகையில், 1965 ஜனவரி 26 குடியரசு நாளை துக்க நாளாக அனுசரிக்க முடிவு செய்தார் அண்ணா. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திமுகவினர் அனைவரும் ஜனவரி 25-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

அதேபோல், 1962-ம் ஆண்டு விலைவாசி உயர்வு எதிர்ப்புப் போராட்டத்தில் அண்ணா கைது செய்யப்பட்டார். அவர் விடுதலையானபோது அவரை வரவேற்க வேலூரில் இருந்து சென்னை வரை பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த வரவேற்பு குறித்து சுதேசமித்ரன் இதழ், ஜூலியஸ் சீசர் ரோம் நகரம் வந்தபோது அவருக்கு தரப்பட்ட வரவேற்பினையும், ஐரோப்பாவை வெற்றி கண்ட நெப்போலியன் பாரீஸ் திரும்பியபோது தரப்பட்ட வரவேற்பையும் ஒப்பிட்டு எழுதியது குறிப்பிடத்தக்கது.

அரசியல் ரீதியில் சிறை செல்வது மக்கள் மத்தியில் தலைவர்களுக்கு தேர்தல் கள மதிப்பை எப்படி உயர்த்தும் என்பதற்கு அண்ணாவின் சிறை அத்தியாயங்கள் நல்லதொரு எடுத்துக்காட்டு எனலாம்.

இந்தி எதிர்ப்பு, விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு என மக்கள் பிரச்சினைகளுக்காக போராடியது, சிறை சென்றதும் திமுகவை பலப்படுத்த அதன் விளைவாக 1967-ல் அக்கட்சி தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. பெரியார், அண்ணா மட்டுமல்ல சிறை சென்று மக்கள் மனங்களில் அன்புச் சிறைவாசத்தை அடைந்தவர்களில் கருணாநிதியும் குறிப்பிடத்தக்கவர்.

அண்ணா, பெரியார்

பாளையங்கோட்டை சிறையினிலே…

கருணாநிதியின் சிறைவாசம் பற்றிப் பேசினால் இரண்டு சம்பவங்கள் தவிர்க்க இயலாதவை. முதலாவது சம்பவம் 1965-ம் ஆண்டு கருணாநிதி கைது செய்யப்பட்டது. அப்போது, இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்காக கருணாநிதி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பிப்.16, 1965-ல் கைது செய்யப்பட்ட அவர், 6 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னாளில் கருணாநிதியின் சிறைவாசம் பற்றி எடுத்துரைக்க

‘பாளையங்கோட்டை சிறையினிலே

பாம்புகள் பல்லிகள் நடுவினிலே

அஞ்சாமல் இருந்தவர் யாரு,

கலைஞர் கருணாநிதி பாரு!’ என்ற திரைப்பாடல் உருவாக்கப்பட்டது இங்கே நினைவுகூரத்தக்கது.

ஆனால், 1965-க்கு முன்னரே இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்காக கருணாநிதி கைது செய்யப்படிருக்கிறார் என்பதும் இங்கே தவறவிடக் கூடாதது.

1957 ஆண்டு திமுகவினர் இந்தி எதிர்ப்பு நாளை கடைபிடித்தனர். அந்நாளில், இந்தி திணிப்பை எதிர்த்து நடைபெற்ற சட்ட எரிப்பு போராட்டத்தில் அவர் பங்கேற்றார். அதன் காரணமாக கருணாநிதி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் 4 மாதங்கள் அடைக்கப்பட்டார்.

கலைஞர் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது
கலைஞர் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது

அதேபோல், கல்லக்குடி போராட்டமும் கைதும், கருணாநிதியின் சிறை அரசியலில் மிகவும் முக்கியமானது. 1953-ம் ஆண்டு ஜூலை 15-ம் நாள் கல்லக்குடியில் போராட்டம் நடத்த திட்டமிட்டார் கருணாநிதி.

திருச்சியில் உள்ள கல்லக்குடி கிராமத்தை டால்மியாபுரம் என்ற பெயரால் அழைக்கக் கூடாது என்பதற்காகப் போராட்டம் நடந்தது. பெயர்ப்பலகையில் டால்மியாபுரத்தை மறைத்து பேப்பர் ஒட்டப்பட்டதோடு, தண்டவாளத்தை மறித்து கருணாநிதி உள்ளிட்டோர் படுத்தனர். ரயில்வே அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையிலும் கூட எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால், கருணாநிதி கைது செய்யபட்டார்.

6 மாதங்கள் அவர் சிறையில் இருந்தது மறக்கமுடியாத அரசியல் நிகழ்வு. அதற்காக அவருக்கு அபராதமும் விதிக்கப்பட அதை செலுத்த மறுத்து சிறையிலேயே இருந்தார் கருணாநிதி. அந்தப் போராட்டத்தை நினைவுகூரும் வகையில்தான் ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி புகழ் வாழ்கவே…’ என்ற நாகூர் ஹனீஃபாவின் கனீர் குரலில் இன்றளவும் திமுக கூட்டங்களில் பாடல் ஒலிக்கிறது.

முந்தைய கைது நடவடிக்கைகளைப் பற்றியெல்லாம் புத்தகம் பேசுகின்றன, ஆனால் 2001-ல் கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவம் தொலைக்காட்சியிலேயே நேரலையில் ஒளிபரப்பாகின. கடந்த 2001 ஆண்டு ஜூன் 30-ம் தேதி அதிகாலையில் கருணாநிதி கைது செய்யப்பட்டார். மேம்பால கட்டுமான ஊழல் தொடர்பாக அப்போதைய அதிமுக அரசு அவரைக் கைது செய்தது. அவரது கைதுடன் அவர் கைது செய்யப்பட்ட விதமும் பேசுபொருளானது.

நள்ளிரவில் வீடுபுகுந்த போலீஸார் கருணாநிதியை லுங்கியுடன் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். அதன் பின்னர், அவரை எங்கு கொண்டு செல்கிறோம் என்று குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் அலைக்கழித்தனர். இவையெல்லாம் திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அடுத்தநாள் காலையில் சென்னை மத்திய சிறை முன்னாள் அவர் அணிந்திருந்த லுங்கியுடன் துண்டு மட்டும் மேலே போர்த்திக் கொண்டு தர்ணாவிலும் ஈடுபட்டார்.

கருணாநிதியின் சிறைவாசங்கள் அத்தனையுமே அவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் மட்டுமல்ல திமுகவுக்கான அசைக்க முடியாத அடையாளங்கள் என்றே சொல்லலாம்.

வைகோ

வைகோ 30+ சிறைவாசம்…

அண்ணா, கருணாநிதியின் கைதுப் படலங்களைப் போல் வைகோவின் கைதுப் படலங்களும் தமிழக அரசியலில் முக்கியமானவை. தனது அரசியல் வாழ்வில், வைகோ 30 முறைக்கும் மேல் கைது செய்யப்பட்டு, சுமார் நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். திராவிட இயக்கத்தின் தலைவர்களிலேயே அதிக காலம் சிறைவாசம் அனுபவித்தவர் வைகோ என்று சில புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.

அண்ணாவால் ஈர்க்கப்பட்டவர் வைகோ. 1964-ஆம் ஆண்டு அண்ணா முன்னிலையில் பேசி, வைகோ தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக 1965-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டார். பின்னாளில், திமுக மாணவர் அணியில் இணைந்தார். 1978-ல் திமுக தொண்டரணியை அமைத்து, 1981 வரை அதன் தலைவராக இருந்து நான்கு முறை தொண்டர்படை முகாம்களை நடத்தியிருக்கிறார். திமுகவில் இருந்தபோது பல்வேறு போராட்டங்களுக்காக அவர் கைது நடவடிக்கைகளை சந்தித்துள்ளார்.

மதுரை திருமங்கலத்தில் 2002-ம் ஆண்டு ஜூன் 29-ல் மதிமுக பொதுக் கூட்டம் நடந்தது. இதில், கலந்துகொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, நாடாளுமன்றத்தில் விடுதலைப் புலிகளின் மீதான நிலைப்பாடு குறித்து சுப்பிரமணியன் சுவாமியின் கேள்விக்கு பதில் அளித்து பேசியது குறித்து விளக்கினார்.

அப்போது, ‘விடுதலைப் புலிகளை நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன்’ என்றார். இதையடுத்து, தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக பேசியதாக வைகோ, ஈரோடு கணேசமூர்த்தி, பூமிநாதன் உள்ளிட்ட 9 பேர் மீது ‘பொடா’ சட்டத்தின்கீழ் க்யூ பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

ஜூலை 11-ம் தேதி அமெரிக்காவில் இருந்து திரும்பிய வைகோவை, சென்னை விமான நிலையத்தில் வைத்தே போலீஸார் கைது செய்தனர். அவரை திருமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். சுமார் 19 மாத சிறை வாசத்துக்குப் பிறகு 2004 பிப்ரவரி 7-ம் தேதி வைகோ விடுதலையானார்.

மிசாவில் கைது செய்யப்பட்டபோது அடைக்கப்பட்ட சிறை அறையில் ஸ்டாலின்

ஸ்டாலினும் மிசாவும்:

இந்தியாவில் நெருக்கடி நிலை, 25 ஜூன் 1975 முதல் 23 மார்ச் 1977 வரை சுமார் 21 மாதங்கள் நீடித்தது. அப்போதைய பிரதமரான இந்திரா காந்தியின் வழிகாட்டுதலின் படி, குடியரசுத் தலைவராக இருந்த பக்ருதின் அலி அகமது அரசியலமைப்புச் சட்ட விதி 352-ன்படி நெருக்கடி நிலை நாடு முழுவதும் கொண்டுவர கையொப்பமிட்டார். இன்றளவும் நெருக்கடி நிலை அல்லது பரவலாக அறியப்படும் வார்த்தையில் எமர்ஜென்சி காலமென்பது இந்தியாவின் இருண்ட காலம் என்று வர்ணிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நெருக்கடிநிலை இரு கட்டமாகச் செயல்பட்டது எனலாம். ஜூன் 1975 முதல் ஜனவரி 1976 வரை முதல் கட்டம். அப்போது, தமிழகத்தில் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி நடைபெற்றது. அவரது அரசை மத்திய அரசு காரணம் ஏதுமின்றி கலைத்தது.

பிப்ரவரி 1, 1976 முதல் மார்ச் 1977 வரை இரண்டாவது கட்டம் என்று கருத்தில் கொள்ளலாம். அந்தக் காலகட்டத்தில் தான் ஸ்டாலின் உட்பட திமுக தலைவர்கள் பலரும் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

1971-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் கொண்டுவரப்பட்டது The Maintenance of Internal Security Act எனும் மிசா சட்டம். இது உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக என்று கொண்டுவரப்பட்டச் சட்டம். ஆனால், நெருக்கடி அமலான காலத்தில் தான் அச்சட்டம் தனது வேறொரு முகத்தைக் காட்டத் தொடங்கியிருந்தது.

எமர்ஜென்சியை எதிர்ப்போரை எல்லாம் மிசாவில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பதே டெல்லியின் உத்தரவு. அந்த உத்தரவின் பேரில் நாடு முழுவதுமே ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிறைகளில் அடைக்கப்பட்டனர் என்று சில புத்தகக் குறிப்புகள் கூறுகின்றன.

தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த திமுக, நெருக்கடி நிலைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றி கண்டனக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தது. திமுக ஆட்சிக் காலத்தில் மத்திய அரசு கட்டளையை ஏற்று மிசா சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் நெருக்கடி நிலை காலத்தில் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த வரலாறு உண்டு.

மிசா

மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இது குறித்து ஸ்டாலின் ஒரு பத்திரிகை பேட்டியில் எழுதியது இங்கே சுட்டிக் காட்டத்தக்கது. “அது நெருக்கடி நிலை அமலில் இருந்த காலம். அப்போது நான் மதுராந்தகத்தில் திமுக இளைஞரணி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தேன். அந்த வேளையில் என்னைத் தேடி போலீஸார் என் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

மிசா சட்டத்தின் கீழ் என்னை கைது செய்ய வந்திருப்பதாக கூறியுள்ளனர். என் தந்தையோ நான் மதுராந்தகம் சென்றிருப்பதாகவும் சென்னை திரும்பியவுடன் ஒப்படைப்பதாகவும் வாக்குறுதி அளிதார். அதன்படி நான் சென்னை திரும்பியதும் கைது செய்யப்பட்டேன். பிப்ரவரி 1-ம் தேதி சென்னை காவல் ஆணையரிடம் என்னை என் தந்தை ஒப்படைத்தார்.

அதன்பின்னர் நான் அனுபவித்த சிறை வாழ்க்கை எனக்கு மிகப் பெரிய அரசியல் பாடங்களை கற்றுக் கொடுத்தது. ஆனால், அதற்காக நான் மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது. ஆம், சிறையில் நான் இரக்கமின்றி அடித்து துன்புறுத்தப்பட்டேன். என்னை காப்பதற்காக முயற்சித்த மேயர் சிட்டிபாபு படுகாயமடைந்தார்” என்று நினைவுகூர்ந்திருந்தார்.

மிசா சிறைவாசம் எப்படியிருந்தது என்பது குறித்து மேயர் சிட்டிபாபு எழுதிய டைரிக் குறிப்புகள் தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமானது. மிசா சிறைவாசம் ஸ்டாலினை புடம் போட்ட அரசியல்வாதியாக மாற்றியது என்று திமுகவினர் இன்றளவும் சிலாகிப்பதை நாம் அறிவோம்.

ஊழலுக்காக சிறை…

தமிழக அரசியல் தலைவர்கள் சிறைவாசங்களில் முக்கியமான ஒன்று ஜெயலலிதாவின் சிறைவாசம். ஊழல் வழக்கில் ஒரு முதல்வர் கைதாவது முதன்முறை என்று சொல்லும் அளவுக்கு அவரது கைது அமைந்தது. வருவாய்க்கு அதிகமான சொத்துச் சேர்த்த வழக்கில் (Disproportionate Assets Case) 2014 செப்டம்பர் 27-ல் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தால் 4 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா. 2000-ல் டான்சி நிலபேர வழக்கிலும் அவர் கைதாகி, பின் விடுவிக்கப்பட்டார். மக்கள் பிரச்சினைகளுக்காக அல்லாது ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக ஜெயலலிதா சிறைசென்று வந்தார்.

சீமானும் சிறைவாசமும்:

தமிழ்த் தேசியம் தான் எங்களது கொள்கை என்று முழங்கி இன்றளவும் அரசியல் செய்துவரும் சீமான், ஈழத் தமிழர்களுக்காக மேற்கொண்ட போராட்டங்களால் தமிழக மக்கள் மத்தியில் கவனம் பெற்றார். இன்றளவும் மேடைகளில் அவர் ஈழத் தமிழர்கள் பற்றி பேசித்தான் வருகிறார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம், இலங்கை உள்நாட்டுப் போரில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சீமான் கைது செய்யப்பட்டார். காலாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

அதேபோல், 2011-ம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்தார். சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் போது சீமான் கைது செய்யப்பட்டு. அப்போது 5 மாதங்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த இரண்டு முக்கிய சிறைப் படலம் போக, அவ்வப்போது மக்கள் பிரச்சினைகள் பலவற்றை முன்னிறுத்தி சீமான் சிறை செல்வது புதிய கதை அல்ல.

அரசியல் செய்வதும் ஒரு கலையே. அதை சுயலாபத்துக்காக செய்பவம் அரசியல்வாதி ஆகிறான். பொதுநல சிந்தையோடு செய்பவன் தலைவனாகிறான். இது தேர்தல் காலம் என்பதால், தன்னலமற்ற தலைவர்களே நாட்டுக்கு அவசியம்.!

(தொடரும்)

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *