Sorting by

×

கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மத்திய அரசின் தேயிலை வாரியத்தில் டெபுடி சேர் பெர்சனாகப் பணிபுரிந்து வருபவர் சி.முருகன் ஐ.ஏ.எஸ்.

சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கும் மேற்கு வங்கத்தில் அரசியல் களத்திலும் சரி, மீடியா வட்டாரத்திலும் சரி கடந்த சில மாதங்களாகவே இவர் தான் ஹாட் டாபிக்.

தமிழ் நாட்டுக்காரரான இவரை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜி ஆகியோரது தொகுதிகளின் எஸ்.ஐ.ஆர் கண்காணிப்பு அதிகாரியாக தேர்தல் ஆணையம் நியமித்ததிலிருந்தே, ‘கெரோ’, ‘போராட்டம்’, ‘கோ பேக் கோஷம்’ என இவருக்கு எதிராக ரவுண்டு கட்டத் தொடங்கிய‌து திரிணாமுல் காங்கிரஸ்.

மம்தா பானர்ஜி ஆக்ஸ்போர்டு உரையின்போது
மம்தா பானர்ஜி ஆக்ஸ்போர்டு உரையின்போது

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹூபா மொய்த்ரா ‘குயிக் கன் முருகன்’ பட போஸ்டரைத் தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து, ‘உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் செயல்படும் முருகனைத் தயவு செய்து கட்டுப்படுத்துங்கள்’ எனத் தேர்தல் ஆணையத்தை டேக் செய்தார்.

‘அந்தப் படத்தில் சித்தரிக்கப்பட்ட அளவுக்கு என்னிடம் துப்பாக்கிகள் இல்லை. இருந்தாலும் தமிழ்நாட்டில் நாலரை ஆண்டுகள் காவல்துறையில் இருந்தபோது பல ரக துப்பாக்கிகளைக் கையாள பயிற்சி பெற்றிருப்பதுடன், சட்டபூர்வமாகத் திறம்பட அவற்றைப் பயன்படுத்தியும் இருக்கிறேன்’ என அவருக்குப் பதில் தந்தார் முருகன்.

பரபரப்பான தேர்தல் பணியிலிருந்தவரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.
”என்னுடைய ஊர் சாத்தூர் பக்கம் கத்தாள‌ம்பட்டி. அப்பா சின்ன கோவிந்தன் தீவிர திமுககாரர். அம்மா அப்பா நான், தங்கைனு அளவான குடும்பம். மகிழ்ச்சியா போயிட்டிருந்த என் பால்யத்தைப் புரட்டிப் போட்டது சாத்தூரில் நிகழ்ந்த ஜாதிக் கலவரம்.

கலவரத்தில் அப்பா உயிர் போயிடுச்சு. அப்ப 10வது படிச்சிட்டிருந்த நான் குலதெய்வக் கோவிலுக்குப் போயிருந்ததால் அன்னைக்கு நான் தப்பிச்சேன். இல்லாட்டி அன்னைக்கே என்னையும் கொலை செய்திருப்பாங்க. ஏன்னா அப்பெல்லாம் கவுன்ட் காட்ட கொலை பண்ணிட்டிருந்தாங்க. அப்பாவும் முன்னாடி அரிவாள் தூக்கினவர்தான்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

இருந்த இடத்தைச் சுத்தி கலவரம், கொலைன்னு பார்த்துப் பார்த்து வளர்ந்ததுல பயம் போயிடுச்சு. ஆனா ‘இதுதான் வாழ்க்கையா’ங்கிற கேள்வி எழ, படிச்சு பெரிய பதவிகளுக்குப் போனாதான் குடும்பச் சூழலை மாத்த முடியும்கிற ஒரு வைராக்கியம் மனசுக்குள் வந்தது. போட்டித் தேர்வுகள் பக்கம் கவனம் செலுத்த தொடங்கினேன்.

கல்லூரிப் படிப்பு முடியறதுக்குள்ளாகவே ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் வங்கியில் புரபஷனரி ஆபீஸர் பணிக்குத் தேர்வானேன். கேரளாவில் முதல் வேலை. வேலையையும் பார்த்துகிட்டே மீதிப் படிப்பையும் முடிக்க கல்லூரி நிர்வாகம் அனுமதிச்சது. பிறகு தமிழ்நாட்டுக்குப் போகலாம்னு டி.என்.பி.எஸ்.சி எழுதினேன்.

குரூப் 1 க்ளியர் ஆகி, காவல்துறைப் பணி கிடைக்க வங்கி வேலையை விட்டுட்டு சென்னை வந்து ஆவடி டி.எஸ்.பி. ஆனேன். அந்தச் சமயத்தில் தவறே செய்யாம உயரதிகாரிகள் ரெண்டு பேர் முன்னாடி குற்றவாளி போல நிக்க வேண்டிய சம்பவம் ஒண்ணு நிகழ்ந்தது.

அந்த ரெண்டு அதிகாரிகளும் நேரடி ஐ.பி.எஸ் அதிகாரிகள். அன்னைக்குத்தான் சிவில் சர்வீஸ் எழுதணுங்குற உந்துதல் உண்டாச்சு. சம்பளமில்லா விடுப்பு எடுத்துகிட்டு டெல்லி போய் யு.பி.எஸ்.சி-க்குத் தயார் செய்ததுக்குப் பலன் கிடைச்சது. மேற்கு வங்க கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியா 2007ம் ஆண்டு பணியைத் தொடங்கினேன்” என்றவரிடம்,

முருகன் ஐஏஎஸ்
முருகன் ஐஏஎஸ்

முதல்வர் மம்தா பானர்ஜியுடனான மோதல் போக்கு குறித்துக் கேட்டோம்.
“நான் பணியில் சேர்ந்த 4 வது வருஷம் அவங்க முதல்வரானாங்க. தொடர்ந்து மூணு முறை அவங்க ஆட்சிதான். நான் எந்தக் கட்சிக்கும் ஆதரவானவன் இல்லை. ஆனா நேர்மையா சட்டப்படி நான் எடுத்த சில நடவடிக்கைகள் என்னை அவருக்கு எதிரியாக்கிடுச்சுனு நினைக்கேன். அதனால எங்காச்சும் என்னைப் பார்த்தால், நான் வணக்கம் வச்சாக் கூட பதிலுக்கு வணக்கம் சொல்ல மாட்டாங்க.

முக்கியத்துவம் இல்லாத துறைகளையே ஒதுக்குவாங்க. மோதல் போக்கின் உச்சமா ஒரு விஷயம் நடந்தது. என் மகனுக்கு ஆட்டிசம் பிரச்னை ப்ளஸ் பேச்சு சரியா வராம இருந்தது. தாய்மொழி புழங்குகிற இடத்துல இருந்து சிகிச்சை தந்தா சரியாகும்னு அங்க இருக்கிற டாக்டர்கள் பரிந்துரைச்சாங்க. ‘தமிழ்நாட்டுக்கு  டெபுடேஷனில் போய் வர்றேன்’னு கேட்டேன்.

அனுமதி தரலை. ஒரு ஐஏஎஸ் அதிகாரியா இருந்தும் மகனுக்குத் தேவைப்படுகிற ஒரு சிகிச்சையைத் தரமுடியாமப் போச்சேங்கிற அந்தக் குற்ற உணர்ச்சி எனக்கு இப்பவும் இருந்துட்டே இருக்கு” என்கிறார்.

மேற்கு வங்கம்
மேற்கு வங்கம்

‘பாஜக மம்தாவுக்கு எதிராக உங்களைப் பயன்படுத்துவதாகச் சிலர் சொல்கிறார்களே?’ எனக் கேட்டதற்கு, “தேர்தல் நேரத்துல ஆளுங்கட்சிக்குச் சாதகமா நடக்கிற அதிகாரிகள், நடுநிலையோட செயல்படுகிற அதிகாரிகள்னு பட்டியல் தயார் செய்து அதனடிப்படையில்தான் தேர்தல் கமிஷன் பணி ஒதுக்கும்.

தேர்தல் கமிஷன் போட்ட உத்தரவை பா.ஜ.க கட்சியோட தொடர்பு படுத்தி நான் பார்க்கலை. நான் சரியா வேலையைச் செய்வேன்னு நம்பி தந்தாகவே நினைக்கிறேன். நாளை பாஜகவே இங்க ஆட்சிக்கு வந்தாலும் அப்ப நான் மாநிலப் பணியில இருந்தா அவங்களுக்கும் ஆகாத ஆளாகவே இருப்பேன்னுதான் நினைக்கிறேன். இந்திய ஆட்சிப் பணியில் இது சாதாரணம்” என்றார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *