ஒருவரின் உடல்நலம் எப்படி இருக்கிறது என்பதை அவரது விரல் நகங்களே சொல்லிவிடும். ஆனால், அந்த மொழியை புரிந்துகொண்டு அதுசொல்வதைக் கேட்பதுதான் நமது கடமை. விட்டுவிட்டால் ஆபத்துதான்.
உங்கள் விரல் நகரங்களைப் பாருங்கள். அது ஒழுங்காக ஒன்றுபோல வளர்கிறதா? இல்லையா? அப்போது உங்கள் உடலில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்பதைத்தான் அது சொல்கிறது என்று புரிந்துகொள்ளுங்கள்.
கைப்புண்ணுக்கு கண்ணாடியா என்பார்கள். அதுபோலத்தான், உங்கள் உடல்நலனை விரல் நகங்களே காட்டும்போது அதை புறக்கணிக்கலாமா?
விரல் நகத்தில் வெள்ளைக் கோடு, நீலத் திட்டு, வளையும் நகம் ஆகியவை உங்கள் உடல்நலன் பிரச்னையைத்தான் காட்டுகின்றன.
நகத்தின் நிறம், வடிவம், விரிசல், நிறம் மாறுதல், பள்ளம், வரி வரியாக கோடுகள் விழுதல் போன்றவையும் பல நோய்களின் அறிகுறிகளே. எனவே, நகத்தில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும் அது உங்களுக்குக் கொடுக்கும் சிக்னல்தான். உஷாராகுங்கள்.
உங்கள் தோலின் ஒரு பகுதியே நகங்கள். அது புரோட்டின் கெரட்டினால் ஆனது. உடலின் பழைய செல்கள் இறந்து புதிய செல்கள் உருவாகும். பழைய செல்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கடினமான நகரமாக மாறி விரல் நுனிகள் வழியே வெளியேறுகின்றன என்கிறார்கள் மருத்துவர்கள்.
எனவே, உங்கள் உடலில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அங்கிருந்து வரும் செல்களும் பாதிக்கப்பட்டு, நகமாக மாறி வெளியேறும்போது அந்த பாதிப்பு ஏதேனும் ஒரு வகையில் வெளிப்படுகிறது.
அதனால்தான், நோயாளிகளின் விரல் நகங்களைப் பார்த்தே, அவர்களுக்கு எந்தவிதமான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் அல்லது எந்தவிதமான சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்பதை பல அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் கண்டறிந்துவிடுவார்களாம்.