Sorting by

×

(`முதல் களம்’ – தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு தலைவர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்படியான தலைவர்களின் முதல் தேர்தலும் அதனை சுற்றி நடந்த முக்கிய சம்பவங்களும் சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பும் தான் `முதல்’ எனும் தொடர்.)

அது 1922-ஆம் ஆண்டு. மதராஸ் காங்கிரஸ் அலுவலகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு பகல் பொழுது. 24 வயதுடைய இளைஞன் ஒருவன் உள்ளே அடியெடுத்து வைத்தான். அப்போது அந்த இளைஞனுக்குத் தெரியாது, ஒரு நாள் நாம் இந்த மாநிலத்தின் முதலமைச்சராக ஆவோம் என. அந்த இளைஞர் வேறு யாருமல்ல முன்னாள் முதலமைச்சர் எம்.பக்தவத்சலம் தான். 

வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கி, காங்கிரஸில் இணைந்து, தமிழ்நாட்டு அரசியலில் அழியா முத்திரை பதித்த பக்தவத்சலத்தின் நாற்பது ஆண்டுக்கால பொது வாழ்க்கை பயணத்துக்கான தொடக்கப் புள்ளிக்கு வித்திட்ட நிகழ்வு என்ன? காங்கிரஸ் இயக்கத்தில் அவர் அடைந்த கிடுகிடு வளர்ச்சிக்கான காரணம், மூத்த தலைவர்களின் நம்பிக்கையைப் பெற்றது எப்படி, போட்டியிட்ட முதல் தேர்தல் தொடங்கி முதலமைச்சர் பதவியை எட்டியது வரையிலான பக்தவத்சலத்தின் அரசியல் பயணத்தின் ஃப்ளாஷ்பேக் இங்கே… 

1897 அக்டோபர் 9 அன்று மயிலாப்பூரில் பிறந்த பக்தவத்சலம், பின்னர் கோயம்புத்தூர் மாவட்டத்தின் கிராமத்துச் சூழலில் வளர்ந்தார். இந்திய விடுதலைப் போராட்டம் இளைஞர்களின் மனதில் புரட்சித்தீயைப் பற்ற வைத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் அவரது பள்ளிப்பருவம் அமைந்தது.

தொடக்க கல்வியை கோவையிலும், பட்டப்படிப்பை சென்னை மாநிலக் கல்லூரியிலும் பயின்ற அவர், பின்னர் சட்டம் பயின்று 1923-ஆம் ஆண்டில், உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார். கல்லூரி காலத்தில் இராஜாஜி, எஸ். சத்தியமூர்த்தி, அன்னி பெசன்ட் போன்ற தலைவர்கள் பேசிய பொதுக்கூட்டங்களில் பங்கேற்ற அனுபவமும், அவர்கள் ஆற்றிய உரையும், அவர்களுடனான சந்திப்பும் காங்கிரஸ் இயக்கத்தின்பால் அவரை ஈர்த்தன. 

உயர் நீதிமன்றத்தில் சட்டப் பயிற்சி மேற்கொண்டபோது சந்தித்த தேசபக்த சட்ட நிபுணர்கள் உடனான உரையாடல்கள், அவரது சிந்தனையைத் தேசியவாதத்தை நோக்கி அழைத்துச் சென்றன. 

1920-களின் தொடக்ககால மதராசில் சத்தியாகிரகப் பேரணிகள், போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் ஆகியவை தினசரி நிகழ்வாக இருந்தன. இந்த நேரத்தில் வழக்கறிஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இளைஞரான பக்தவத்சலம், காந்தியின் ஒத்துழையாமை இயக்கம், சத்தியாகிரக போராட்டங்கள்,  வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் எனப் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று, காவல்துறையினரின் தாக்குதலுக்கு உள்ளானார். பல ஆண்டுக் காலம் சிறையிலும் அடைக்கப்பட்டார். 

1920-களின் தொடக்கத்திலேயே மெட்ராஸ் மாகாண காங்கிரஸ் கமிட்டியில் இடம்பெற்ற அவர், பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்ற காங்கிரஸ் தொண்டர்களின் வழக்குகளை ஏற்று நடத்தி, அவர்களது விடுதலைக்கு உதவி செய்தார். இதன் காரணமாக, கட்சியின் நகராட்சி அமைப்புகளிலும் உள்ளூர் அமைப்புகளிலும் பொறுப்புகள் அவரைத் தேடி வந்தன. சட்டப் பயிற்சி, பொதுத் தொடர்பு, அடிமட்ட அமைப்புப் பணி என பல்வேறு தளங்களிலும் அவர் சுற்றிச் சுழன்றார். இவை அவரை இராஜாஜி, சரோஜினி நாயுடு, எஸ். சத்தியமூர்த்தி உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் நெருக்கமாக்கியது. 

1935 -ல் அப்போதைய ஆங்கிலேயர் அரசு, மாகாண சுயாட்சிக்கான ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தது. அதனைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் இந்தியாவில் முதல் பெரும் மாகாணத் தேர்தல்கள் 1937 -ஆம் ஆண்டு, பிப்ரவரியில் நடைபெற்றன. இந்தத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் பக்தவத்சலத்தை நிறுத்த காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்தனர். அங்கிருந்த சமூக சமநிலை, கல்வியறிவு பெற்ற நடுத்தர வர்க்க வாக்காளர்கள், மேலும் தேசிய இயக்கத்துக்கான அதிகமான ஒத்துழைப்பு போன்ற அனைத்தும் காங்கிரஸின் வலிமையை உறுதிப்படுத்தும் வகையில் இருந்ததால், திருவள்ளூர் தொகுதியை, காங்கிரஸ் தலைவர்கள் மிக முக்கியமானதாக கருதினர். 

பக்தவத்சலத்தின் உறுதியான பேச்சாற்றல், அமைப்புத் திறன் மற்றும் அவரது தொடர்ச்சியான தன்னார்வச் செயல்பாடுகளால், ஏற்கனவே மக்களிடம் பரிச்சயமான முகமாக இருந்த பக்தவத்சலத்தை அந்தத் தொகுதியில் நிறுத்த தீர்மானித்தனர். தேர்தல் பிரசாரம் பெரும்பாலும் நேரடி மக்கள் சந்திப்பாகவே இருந்தது. கிராமங்களுக்கு நேரில் சென்று, உப்பு சட்டம் முதல் கல்வி சீர்திருத்தம்வரை காங்கிரஸ் வாக்குறுதிகளை எளிய மொழியில் விவரித்து மக்களின் நம்பிக்கையைப் பெற்றார் பக்தவத்சலம். இராஜாஜி மற்றும் சத்தியமூர்த்தி போன்ற தலைவர்களும் அவருக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்டனர். இவையெல்லாம் சேர்ந்து, திருவள்ளூர் வாக்காளர்களிடையே அவருக்கென்று ஒரு தனிச் செல்வாக்கை உருவாக்கி, தேர்தலில் வெற்றியைத் தேடித்தந்தது.

பக்தவத்சலத்தின் இந்த முதல் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, இராஜாஜி தலைமையிலான அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சருக்கான நாடாளுமன்றச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதன் மூலம்,  1937 தேர்தல் வெற்றி அவருக்கு மூன்று முக்கிய வாய்ப்புகளைத் திறந்தது. அதில் முதலாவது, சட்டமன்றத்தில் நிர்வாக அனுபவம். அதாவது வாய்ப்புகள் கிடைக்கும் முன்பே நிர்வாகத்துக்கு ஏற்புடையவர் என்கிற மதிப்பு அவருக்கு கிடைத்தது. அடுத்ததாக உயர்மட்ட தலைவர்களிடம் ஏற்பட்ட நம்பிக்கை. அதுதான், பின்னாளில் இராஜாஜி அவரை முக்கிய அமைச்சகப் பொறுப்புகளுக்குப் பரிந்துரைக்கவும், முதலமைச்சராகவும் காரணமாக அமைந்தது. 

மூன்றாவதாக, காங்கிரஸ் அமைப்பை நிர்வகிக்கும் வாய்ப்பு. 1940–50-களில் காங்கிரஸின் மாநில அமைப்பு முழுவதும் அவரின் செயல்பாடுகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டே இயங்கியது. அந்த வகையில், 1937 தேர்தலில் பக்தவத்சலத்துக்கு கிடைத்த வெற்றி, வெறும் தொகுதி அடிப்படையிலான வெற்றியாக மட்டும் அல்லாமல், புதிய தலைமுறை காங்கிரஸ் தலைவர்கள் உருவாவதற்கான தருணத்தையும் உருவாக்கியது. 

தேர்தல் வெற்றியின் மூலம் அவரது அரசியல் பிணைப்புகள் விரிவாகின. சட்டமன்ற உறுப்பினராகவும், இளநிலை அமைச்சராகவும் பொறுப்பில் இருந்ததால், மூத்த காங்கிரஸ் தலைவர்கள், உயரதிகாரிகள், செல்வாக்கு மிக்க பிரபலங்களுடனான தொடர்புகள் அதிகரித்தன. இந்தத் தொடர்புகள் அவர் மீது நம்பிக்கையையும் பரஸ்பர கடமையையும் சேர்ந்தே உருவாக்கின. கட்சியின் உயர் பதவிகளுக்கு நம்பிக்கைக்குரியவர்களைத் தேர்வு செய்யும் பொறுப்பும் அவருக்கு அமைந்தது. சட்டமன்றப் பணி, பொதுமேடை பேச்சுகள், நகராட்சி-கிராமப்புறங்களில் அவர்  மேற்கொண்ட பணிகள் போன்றவை கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் வாக்காளர்கள் மத்தியிலும் அவரது செல்வாக்கை உயர்த்தின. சுருக்கமாக சொல்வதென்றால், திருவள்ளூர் தொகுதி தேர்தல் வெற்றி, அவரை மாநில அளவிலான நம்பிக்கைக்குரிய அரசியல்வாதியாகவும் தலைவராகவும் உயர்த்தியது.

பின்னர் தொடர்ச்சியாக மாகாண அமைச்சரவைகளில் பொதுப்பணித் துறை, தகவல், உள்ளாட்சித் துறை போன்ற இலாகாக்களில் அமைச்சராகவும் பணியாற்றியதுடன், அவருக்கு நிர்வாகத் திறன்மிக்கவர் என்கிற பெயரையும் பெற்றுக்கொடுத்தது. உள்கட்டமைப்புத் திட்டங்கள், நகராட்சி சீர்திருத்தங்கள் போன்றவற்றில் அவர் மேற்கொண்ட பணிகள், அவரது திறமைக்கான ஆதாரமாக அமைந்தன.

சுதந்திர இயக்கப் பின்னணி மற்றும் நிர்வாகத் திறன் ஆகிய இரண்டையும் காங்கிரஸ் மதித்த காலம் அது என்பதால், பக்தவத்சலம் உயர்ப் பொறுப்புகளுக்கான நம்பிக்கைக்குரிய தலைவராக உயர்ந்தார். அந்த வகையில், அவரது முதல் தேர்தல் வெற்றி, அவரைத் தேர்தல் அரசியலில் நிலைத்திருக்க உதவியது. 

சுதந்திரத்திற்குப் பிறகு அரசியல் நிர்ணய சபை உள்ளிட்ட தேசிய அமைப்புகளில் பங்கேற்றார். 1950-களிலும் 1960-களின் தொடக்கத்திலும் பக்தவத்சலம் மெட்ராஸ் (பின்னர் தமிழ்நாடு) காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தார். காமராஜர், 1963 அக்டோபர் மாதம், தான் வகித்த முதலமைச்சர் பதவியைத் துறந்து தேசிய அளவில், அமைப்புப் பணிக்குச் செல்ல (கே பிளான்) முடிவு செய்தபோது, காமராஜரின் பரிந்துரையின்பேரில் பக்தவத்சலமே மாநிலத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு, 1963-ஆம் ஆண்டு, அக்டோபர் 2-ஆம் தேதி, தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். 

அந்தவகையில், தமிழக அரசியல் வரலாற்றில், ஒரு இளைஞரின் முதல் தேர்தல் வெற்றியே ஒருதலைமுறையின் வரலாற்றைத் தீர்மானிக்க முடியும் என்பதற்கான  மிகச்சிறந்த உதாரணமாக திகழ்கிறார் பக்தவத்சலம்!

(தொடரும்)

Loading…

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *