Sorting by

×

தமிழக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2026-27-ம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட்டை, “மக்களை ஏமாற்றும் வெற்று அறிவிப்பு” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தமிழக மக்களை ‘திராவிட மாடல்’ என்ற பெயரில் ஏமாற்றி வரும் தி.மு.க அரசு, தனது கடைசி பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளது.

இந்த அரசு மக்களுக்கு எந்த அளவுக்குக் காது குத்துகிறது என்பதை விளக்கும் வகையில், ‘மாபெரும் காதுகுத்தும் விழா’ அழைப்பிதழை இன்று நாங்கள் சட்டமன்றத்தில் வழங்கினோம். இது பட்ஜெட் அல்ல, மக்களை ஏமாற்றும் வெறும் வார்த்தை ஜால அறிக்கை.

அதிமுக காதுகுத்து விழா
அதிமுக காதுகுத்து விழா

2021 தேர்தலின் போது 525 அறிவிப்புகளை வெளியிட்டார்கள். அதில் நான்கில் ஒரு பங்குகூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) வழங்கப்படும் என்றார்கள், ஆனால் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தையே தொடர்கிறார்கள். சத்துணவு அமைப்பாளர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரையும் இந்த அரசு வஞ்சித்துவிட்டது.

தமிழகமே இன்று போராட்டக் களமாக மாறியுள்ளது. மாநிலத்தின் சொந்த வருவாய் 2.58 லட்சம் கோடி என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது 2.32 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. சுமார் 26,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 2024-25-ல் 96,000 கோடியாக இருந்த நிதிப் பற்றாக்குறை, தற்போது 1.24 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும்.

ரகுராம் ராஜன் தலைமையில் நிதி மேலாண்மை குழு அமைத்து நிதிநிலையைச் சீர் செய்வோம் என்றார்கள். ஆனால், அந்தக் குழு அமைத்த பிறகுதான் கடன் அளவு வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. ஸ்டாலின் ஒரு பொம்மை முதலமைச்சர், இது நிதி நிர்வாகத் திறனற்ற அரசு என்பது நிரூபணமாகியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

விவசாயிகளை ஏமாற்ற வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் 5 மணி நேரம் அமைச்சர்கள் உரை நிகழ்த்தினார்கள். ஆனால் அதில் உருப்படியாக எதுவும் இல்லை. நீர்வளம், மீன்வளம், கால்நடை என ஏற்கனவே இருக்கும் துறைகளை ஒன்றாகக் கோர்த்து விவசாயிகளைத் திசைதிருப்புகிறார்கள். இந்த பட்ஜெட் பார்ப்பதற்கு அத்திப்பழம் போல வெளியே அழகாக இருக்கும், ஆனால் புட்டுப் பார்த்தால் உள்ளே சொத்தையாக இருக்கும்.

கரிக்கோழி வளர்க்கும் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடி வருகிறார்கள். ஆனால் இந்த அரசு விவசாயிகளைக் கவலைப்படாமல், பெரும் நிறுவனங்களுக்குத் தான் உதவியாக இருக்கிறது. எதைப்பற்றியும் கவலைப்படாத ஒரு அரசாங்கம் இருக்குமென்றால் அது தி.மு.க அரசாங்கம் தான்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

சட்டமன்ற நேரலையில், நான் பேசும்போது கேமரா இணைப்பு கொடுக்க மாட்டார்கள். நாங்கள் கேட்கும் கேள்விகள் மக்களுக்குத் தெரியக்கூடாது என்பதில் அரசு குறியாக இருக்கிறது. இதற்காக நீதிமன்றம் வரை சென்றும் இன்னும் விடிவு காலம் பிறக்கவில்லை. இந்தக் கூட்டத்தொடரோடு இந்த ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். அ.தி.மு.க தலைமையில் வலுவான கூட்டணி அமைத்துள்ளோம். வரும் சட்டமன்றத் தேர்தலில் அண்ணா தி.மு.க மீண்டும் ஆட்சி அமைக்கும்.” என உறுதியுடன் தெரிவித்தார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *