பட்டுக்கோட்டை தொகுதி திமுக எம்.எல்.ஏ அண்ணாதுரை, கட்சியில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவரது செயல்களில் அதிருப்தியடைந்த திமுக நிர்வாகிகள், அண்ணாதுரை குறித்து தலைமைக்கு புகார் அனுப்பி வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் அண்ணாதுரை மீது வரும் புகார்கள் குறித்து தலைமையில் விவாதித்துள்ளனர். இது தொடர்பாக தலைமைக்கு நெருக்கமாக உள்ள சில நிர்வாகிகள் மூலம் அண்ணாதுரை குறித்து விசாரித்துள்ளனர். இதில் அண்ணாதுரை மீது வரும் புகார்கள் உண்மை என்பதை அறிந்து அவரை மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கி விட்டு வேறு ஒரு நிர்வாகிக்கு கொடுக்க இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது.
பட்டுக்கோட்டை அண்ணாதுரை எம்.எல்.ஏ
இது குறித்து திமுக தரப்பில் சிலரிடம் பேசினோம், “வடக்கு, தெற்கு என இரண்டாக இருந்த தஞ்சாவூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்தது மத்திய மாவட்டத்தை உருவாக்கியது திமுக தலைமை. பின்னர் எம்.எல்.ஏவாக இருந்த அண்ணாதுரை தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் எம்.எல்.ஏ ஆனதால் ஆரம்பத்தில் சரியாக நடந்து கொண்டார் அண்ணாதுரை. பின்னர் அவரின் செயல்களில் மாற்றம் ஏற்பட்டது குறிப்பாக கட்சி நிர்வாகிகளை மதிக்காமல் தன்னிச்சையாக நடந்து கொள்ள தொடங்கினார்.
தனக்கென ஆதரவாளர்கள் கூட்டத்தை உருவாக்கி கொண்டார். பாரம்பர்யமான திமுக குடும்பத்தை சேர்ந்த இராம. குணசேகரனுக்கு எதிராக அவரது செல்வாக்கை குறைப்பதற்காக அதிராம்பட்டினம் நகரத்தை இரண்டாக பிரித்து தன்னுடைய ஆதரவாளரான அஸ்லாம் என்பவருக்கு நகரச்செயலாளர் பதவி வழங்கினார். இது குணசேகரன் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உண்டாக்கியது. தெற்கு மாவட்டத்தில் 200 சார்பு அணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். இதில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 150 பேருக்கு பதவி வழங்கினார். பேராவூரணியை புறக்கணித்து 50 பேருக்கு மட்டும் பதவி வழங்கி ஒருதலை பட்சமாக நடந்து கொண்டார்.
பேராவூரணி எம்.எல்.ஏ அசோக்குமார்
கட்சியில் உறுப்பினராக இல்லாதவர்களுக்கு பதவி வழங்கி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார். முன்னாள் தெற்கு மாவட்ட செயலாளரான ஏ.வி.சுப்ரமணியன் மகன் திராவிட செல்வனுக்கு சார்பு அணியில் பதவி வழங்கவில்லை. பட்டுக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் பார்த்திபனின் சொந்த ஊரான தாமரங்கோட்டையில் அவருடைய பரிந்துரை இல்லாமல், அவரிடம் ஆலோசனை செய்யாமல் விதி மீறலாக ஐந்து பேருக்கு சார்பு அணியில் பதவி வழங்கினார். இதற்கு முன்பு மாவட்ட செயலாளர்களாக இருந்தவர்கள் ஒரு ஒன்றியத்தில் மூன்று பதவிகள் மட்டுமே வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிளை கழகம், ஒன்றியத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சிலருக்கு எல்லோர் எதிர்ப்பையும் மீறி மாவட்ட அளவில் பதவி கொடுத்துள்ளார். டாஸ்மாக் பார்களை அ.தி.மு.கவினருக்கு கொடுத்து அக்கட்சிக்கு விசுவாசமாக செயல்படுகிறார். தூர் வாருதல், சாலைப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை சாத்தூரை சேர்ந்த அ.தி.மு.க பிரமுகருக்கு தொடர்ந்து வழங்கியுள்ளார்.
நகரச்செயலாளர்கள், ஒன்றியச்செயலாளர்கள், மாவட்ட பிரதி நிதிகளை மதிக்காமல் ஒன் மேன் ஷோவாக நடந்து கொண்டார். கட்சியின் வளர்ச்சிக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை, கட்சியையும், பதவியையும் வைத்து பணம் சம்பாதிப்பதையே பிராதானமாக கொண்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு கூட முறையாக செலவு செய்யவில்லை. கட்சி நிர்வாகிகள் பணம் கேட்டதற்கு நடிகர் வடிவேலு பாணியில் கை விரித்து விட்டார். இது தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், நேரு உள்ளிட்ட பலருக்கு புகார்கள் சென்றது. விசாரணையில் அவை உண்மையென என அறிந்து கொண்டது தலைமை. இதையடுத்து, வாக்கு எண்ணிக்கைக்கு பிறகோ அல்லது அதற்கு முன்னதாகவோ அண்ணாதுரையின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்படலாம்.
பட்டுக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் பார்த்திபன், பேராவூரணி எம்.எல்.ஏ அசோக்குமார், முன்னாள் மாவட்ட செயலாளர் ஏனாதி பாலசுப்ரமணியன், மதுக்கூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ ஆகியோருக்கிடையே மாவட்ட செயலாளர் பதவியை பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது. சட்டமன்ற தேர்தலின் போது பட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளராக பார்த்திபன் பெயர் பலமாக அடிப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அண்ணாதுரை வேட்பாளர் ஆனார். அதே போல் தற்போதும் பார்த்திபன் பெயர் பலமாக அடிபடுகிறது” என்றனர்.
இது குறித்து அண்ணாதுரையிடம் பேசினோம், “என் மீது தலைமைக்கு சென்றுள்ள புகார்கள் குறித்து எனக்கு தெரியவில்லை. கட்சி தலைமை என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நான் முழுமையாக கட்டுப்படுவேன். மற்றபடி இதில் எந்த கருத்தும் என்னால் சொல்ல முடியாது” என முடித்துக் கொண்டார்.
