என்.சி.இ.ஆர்.டி பாட புத்தகத்தில் இந்திய நீதித்துறையில் ஊழல்கள் என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்றிருந்ததற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. `இதில் தொடர்புடையவர்கள் அத்தனை பேரும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்’ எனவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் எச்சரிக்கையை கொடுத்துள்ளார். ஆனால் மத்திய பாஜக அரசு மற்றும் நீதித்துறையின் இடையிலான இந்த மோதல் போக்கு என்பது பல ஆண்டுகளாக தொடர்ந்து நீடித்து வருகிறது..
இனி அது குறித்து விரிவாக காணலாம்…

இந்திய ஜனநாயகத்தின் தூண்களான நிர்வாகத் துறையும் (Executive) நீதித்துறையும் (Judiciary) கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஒரு தொடர்ச்சியான மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றன. குறிப்பாக, மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது முதல், நீதிபதிகள் நியமனம் மற்றும் தீர்ப்புகளில் தொடர் சர்ச்சைகள் இருந்து வருகிறது.
மோதலின் தொடக்கம்: NJAC விவகாரம் (2014-2015)
பாஜக அரசு ஆட்சிக்கு வந்தவுடன், செய்த முதல் முக்கிய சட்டத்திருத்தம் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் (NJAC) ஆகும்.
அதுவரை நீதிபதிகளே நீதிபதிகளை நியமிக்கும் ‘கொலீஜியம்’ (Collegium) முறையை ஒழித்துவிட்டு, அதற்கு மாற்றாக மத்திய அரசு அந்தப் பணியை மேற்கொள்ளும் வகையில் தேசிய நீதிபதிகள் தேர்வு ஆணையம் என்ற பெயரில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
2015-ல் உச்ச நீதிமன்றம் இந்தச் சட்டத்தை “அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது” என்று கூறி ரத்து செய்தது. இது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதுவே அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையிலான போரின் தொடக்கப்புள்ளி.
கொலீஜியம் முறை மீதான கடுமையான விமர்சனங்கள்:
மத்திய சட்ட அமைச்சர்களாக இருந்த ரவிசங்கர் பிரசாத் மற்றும் கிரண் ரிஜிஜு ஆகியோர் கொலீஜியம் முறையை பகிரங்கமாகத் தாக்கினர்.
“நீதிமன்றங்களே தங்களை நியமித்துக்கொள்ளும் முறை உலகில் எங்கும் இல்லை” என்றும், இது வெளிப்படைத்தன்மை அற்றது என்றும் மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்தனர்.
என்னதான் கொலிஜியம் அமைப்பு நீதிபதிகளை தேர்வு செய்தாலும், அதற்கான இறுதி ஒப்புதலை மத்திய அரசுதான் இறுதி செய்து, குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கும். எனவே அரசுக்கு உடன்பாடு இல்லாத நீதிபதிகளின் பெயர்களைப் பரிந்துரைக்கும்போது, மத்திய அரசு அந்தப் பரிந்துரைகளை அங்கீகரிக்காமல் மாதக்கணக்கில் அல்லது ஆண்டுகணக்கில் கிடப்பில் போடுவதை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தியது. இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் பல தருணங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் கண்டித்து இருக்கிறது.
நான்கு நீதிபதிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க செய்தியாளர் சந்திப்பு (2018)
இந்திய நீதித்துறை வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில், 2018 ஜனவரியில் உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் (செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகூர், குரியன் ஜோசப்) செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை சாதகமான அமர்வுகளுக்கு ஒதுக்குவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
“இந்திய ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது” என்று அவர்கள் எச்சரித்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பை அடிப்படையாக வைத்துக் கொண்டு எப்பொழுதும் நீதித்துறையின் மீதான விமர்சனங்களை மத்திய அமைச்சர்கள் அவ்வப்போது முன்வைப்பதுண்டு.
அடிப்படை அமைப்பு’ (Basic Structure) கோட்பாடு குறித்த மோதல்
சமீபகாலமாக, நாடாளுமன்றமே உயர்ந்தது என்றும், நீதிமன்றங்கள் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தில் தலையிடக் கூடாது என்றும் பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். உதாரணமாக இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர், 1973-ம் ஆண்டின் புகழ்பெற்ற கேசவானந்த பாரதி வழக்கின் தீர்ப்பை விமர்சித்தார். அரசியலமைப்பின் ‘அடிப்படை அமைப்பை’ மாற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்ற அந்தத் தீர்ப்பு, நாடாளுமன்றத்தின் இறையாண்மையை மீறுவதாக அவர் குறிப்பிட்டார். இதற்கு நீதித்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

சமீபத்திய மோதல்கள் மற்றும் சம்பவங்கள் (2023-2026)
பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று கூறி உச்ச நீதிமன்றம் அதனை ரத்து செய்தது. இது அரசுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்பட்டது. அதுவும் நாடாளுமன்றத் தேர்தல் சமயம் என்பதால் எதிர்க்கட்சிகள் பாஜகவை இந்த தீர்ப்பை வைத்து மிகக் கடுமையாக விமர்சித்தன.
தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களை நிறுத்தி வைப்பதை உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தது. தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய பத்துக்கும் அதிகமான மசோதாக்களுக்கு தனது சிறப்பு அதிகாரமான பிரிவு 142 ஐ பயன்படுத்தி ஒப்புதலும் வழங்கியிருந்தது. உச்சகட்டமாக மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்கும் குடியரசுத் தலைவருக்குமே காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் நிர்ணயம் செய்திருந்தது மத்திய அரசுக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.
இது ஆளுநர்கள் மூலமாக மாநில அரசியலில் தலையிட நினைக்கும் மத்திய அரசுக்கு எதிரான கசப்பான அனுபவமாக அமைந்தது.
டெல்லியில் நடைபெற்ற அரசியல் சாசன தின மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அப்போதைய நீதித்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜூ, நீதிமன்றங்களில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் வழக்குகள் குறித்தும் நீதிபதிகள் நியமனம் குறித்தும் விமர்சன தொணியில் பேசி இருந்தார். அதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர். பிறகு அவர் அந்த துறையிலிருந்து மாற்றப்பட்டு இருந்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைகளில் நீதிமன்றங்கள் ‘நீதித்துறை மேலாதிக்கம்’ (Judicial Activism) செலுத்துவதாக பாஜக குற்றம் சாட்டுகிறது. இன்னொரு பக்கம் தங்களுக்கு அரசியலமைப்பு அளித்துள்ள அதிகாரத்தை உறுதி செய்யும் நோக்கில் நீதிமன்றங்களும் செயல்படுகிறது.
இதன் சமீபத்திய உதாரணமாக தான் என்.சி.இ.ஆர்.டி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சாட்டையை சுழற்றி உள்ளது.

அதாவது, 8-ஆம் வகுப்பு NCERT பாடப்புத்தகத்தில், “நீதித்துறை ஊழல்” என்ற பெயரில் புதிய பாடம் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. இது நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மத்திய பாஜக அரசு நீதித்துறை மீதான நம்பகத்தன்மையை குலைக்கிறது என விமர்சனங்கள் எழுந்தன.
இது தொடர்பாக பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, “நீதித்துறையின் நேர்மையை அவதூறு செய்யவும், கேள்வி கேட்கவும் யாரையும் நான் அனுமதிக்க மாட்டேன். இப்பிரச்னை எந்த அளவுக்கு சென்றாலும் நடவடிக்கை எடுக்கப்படும். நீதித்துறை மீது எந்த தாக்குதலையும் நீதிமன்றம் அனுமதிக்காது.
இந்த நடவடிக்கை நீதித்துறையின் மீதான திட்டமிடப்பட்ட மற்றும் ஆழமான தாக்குதல் ஆகும். உச்ச நீதிமன்றம் யாரையும் நீதித்துறையின் நேர்மையை அவதூறு செய்யவோ அல்லது கேள்வி கேட்கவோ அனுமதிக்காது. இந்த பிரச்சினை பற்றி உயர் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட ஏராளமானோரிடருந்து தொடர்ந்து அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் எனக்கு வந்து கொண்டிருக்கிறது. அவர்கள் நீதித்துறையில் ஊழல் என்ற தலைப்பில் பாடப்புத்தகத்தில் வந்திருப்பது குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர்”என்று காட்டமானார்.
இதனை தொடர்ந்து குறிப்பிட்ட அந்த பாடப்பகுதி நீக்கப்படும் என மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். எனினும், மத்திய பாஜக அரசுக்கும், நீதித்துறைக்குமான மோதல் என்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.!
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
