தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக பா.ஜ.க-வில் மிகப்பெரிய நிர்வாக ரீதியான மாற்றம் நிகழ்ந்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக தமிழக பா.ஜ.க-வின் ‘அமைப்புப் பொதுச்செயலாளர்’ என்ற அதிகாரமிக்க பதவியில் இருந்த கேசவ விநாயகம், அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவர் மீண்டும் ஆர்.எஸ்.எஸ் பணிக்கே திரும்பியிருக்கிறார்.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கும், கேசவ விநாயகம் தரப்புக்கும் இடையே நீண்ட காலமாக ‘நிழல் யுத்தம்’ நடந்து வந்ததாக பேசப்பட்டது. குறிப்பாக, அண்ணாமலை தரப்பினர் கேசவ விநாயகத்தின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அவரின் பணி மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.
இந்த நிலையில், இந்தியா – அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தம் குறித்து விளக்கமளிக்கும் வகையில், கோவையில் பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, “எனக்கும் அவருக்கும் என்ன இந்தியா – அமெரிக்கா பிஸ்னஸா நடக்கிறது. கருத்து வேறுபாடு வருவதற்கு… கேசவ விநாயகத்தைப் பொறுத்த வரை, பா.ஜ.க-வில் நீண்ட காலமாக சிறப்பாக பணியாற்றிய நமது அமைப்பு பொதுச்செயலாளர். நிறைய தேர்தல்களை சந்தித்திருக்கிறார். நல்ல மனிதர், கடுமையாக உழைக்கக்கூடியவர், எளிமையாக வாழக்கூடியவர். அவர் இப்போது ஆர்.எஸ்.எஸ் பிரசாரத்தில் இருக்கிறார். அவருக்கு எல்லாப் பொறுப்பும் ஒரே பொறுப்புதான்.
முன்பு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திலிருந்து பா.ஜ.க-வுக்கு கொடுக்கப்பட்டிருந்தார். இப்போது ஆர்.எஸ்.எஸ் மீண்டும் அழைத்துக்கொண்டு, வேறு பொறுப்பை வழங்கியிருக்கிறது. கேரளாவில், கர்நாடகாவில், புதுச்சேரியில் அமைப்பு பொதுச்செயலாளர் இல்லை. அதுபோல இப்போது தமிழ்நாட்டிலும் இல்லை. இது ஒன்றும் புதிதல்ல. இந்த ஆண்டும் சங்கத்துக்கு திறமையானவர்கள் தேவைப்படுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா இந்தியா முழுவதும் நடக்கிறது. அதனால், நிறைய வேலைகள் இருக்கிறது. இன்று காலையிலும் கேசவ விநாயகத்தைக் கமலாலயத்தில் சந்தித்துவிட்டு வந்தோம்.
மிகச் சிறப்பாக பணியாற்றியதற்காக, அவருக்கு எங்கள் நன்றியை தெரிவித்திருக்கின்றோம். கேசவ விநாயகத்தைப் பொறுத்த வரை, அவர் பிரசாரகர். அவர் வந்த வேலையை முடித்துவிட்டு கிளம்பிவிட்டார், அவ்வளவுதான். அவர் அரசியல்வாதி கிடையாது. அதனால், அவரைப் பற்றி தேவையில்லாத ஒரு விவாதமோ, தேவையில்லாத வீண் சர்ச்சைகளோ முடிவுக்கு வரும் எனக் கருதுகிறேன்.
மதுரை எய்ம்ஸ் திட்டத் தாமதத்துக்கு தி.மு.க அரசின் ஒத்துழைப்பு இன்மைதான் காரணம். நிலம் கையகப்படுத்துதல், மரம் வெட்டுதல் உள்ளிட்ட கோப்புகளுக்கு மாதக்கணக்கில் அனுமதி கொடுக்காமல் தாமதித்து, மத்திய அரசு மீது பழி போடுகிறார்கள்.
ஆனால், மத்திய அரசின் முயற்சியால் திட்டம் முன்னேறி வருகிறது. மிக விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். முதலமைச்சர் ஸ்டாலின் எய்ம்ஸ் பகுதிக்கு ஒருமுறை கூட சென்று பார்வையிடவில்லை. அக்கறை இல்லாதவராக இருக்கிறார். திமுகவை வீழ்த்துவதற்கு பல கட்சிகள் விரைவில் என்.டி.ஏ கூட்டணியில் இணையும் என்ற முழு நம்பிக்கை உள்ளது.” என்றார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN


