பா.ம.க கட்சி ராமதாஸ் – அன்புமணி என இருவருக்கும் இடையிலான மோதலால் இரண்டாக பிளவுண்டது. அதைத் தொடர்ந்து பா.ம.க தலைவர் `நான்தான்’ என இருவரும் சொந்தம் கொண்டாடுகின்றனர். இதற்கிடையில், அன்புமணி தரப்பு பா.ம.க அணி எ.டி.ஏ கூட்டணியில் இணைந்து, 18 தொகுதிகளையும் பிரித்து வாங்கிக்கொண்டார். அதைத் தொடர்ந்து தேர்தலுக்கான வேலைகளில் தீவிரமாகியிருக்கிறார். அதே போல, ராமதாஸ் தரப்பு பா.ம.க அணி சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அறிவித்து தேர்தலை எதிர்கொள்கிறார். இதற்கிடையில், பா.ம.க கட்சியின் மாம்பழச் சின்னம் யாருக்கு என்ற கேள்வி எழுந்தது.

இதற்கு முன்னரே ராமதாஸ் தரப்பு, “கட்சியின் நிறுவனர் நான் என்ற ரீதியில் பா.ம.க-வின் கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை அன்புமணி பயன்படுத்தக் கூடாது” எனக் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதையும் மீறி அன்புமணி தரப்பு கட்சியின் அடையாளங்களைப் பயன்படுத்தி வருகிறது. இதை எதிர்த்து, ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில், “பாமக பெயா், சின்னம், கட்சிக் கொடி ஆகியவற்றை அன்புமணி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். கட்சியின் தலைவராக என்னை அறிவிக்க வேண்டும்” என சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு சென்னை உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதை எதிா்த்து ராமதாஸ் தொடா்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரி ராமதாஸ் மனு தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுவை உரிமையியல் நீதிமன்றம் மூன்று நாள்களுக்குள் விசாரித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என உத்தரவிட்டது. அதன்படி உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தர்மபிரபு முன் (நேற்று) புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு அன்புமணி தரப்பில் வியாழக்கிழமை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதைத் தொடா்ந்து இருதரப்பும் வாதங்களை முன்வைக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார். இந்த வழக்கு இன்று உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில் ராமதாஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது. மேலும் பாமகவின் தலைவராக ராமதாஸை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்திருக்கிறது. சின்னம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு ராமதாஸ் தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
