ஐந்து முறை தொடர்ந்து வெற்றிபெற்று ஆறாவது முறையாக பாலகோட்டில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு எதிராக, முன்னாள் எம்.பி டாக்டர் எஸ்.செந்தில்குமாரை தி.மு.க நிறுத்தியுள்ளது.

‘பாலக்கோடு தொகுதி எப்போதுமே அ.தி.மு.க-வின் கோட்டை. இதுவரை நடந்த 13 தேர்தல்களில் 9 முறை அ.தி.மு.க வென்றுள்ளது (ஜெ அணி வென்றதையும் சேர்த்து). அதில், 5 முறை தொடர்ந்து வெற்றி பெற்று வரும் தொகுதியின் செல்லப் பிள்ளையான அன்பழகனை யாராலும் தோற்கடிக்க முடியாது’ என்று அ.தி.மு.க-வினர் அடித்துச் சொல்ல, “25 ஆண்டு காலமாக எம்.எல்.ஏ-வாகவும், அமைச்சராகவும் இருந்த அன்பழகனால், பாலக்கோடு தொகுதி எந்த வளர்ச்சியும் அடையாமல் உள்ளது. இம்முறை மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” என்று தி.மு.க-வினர் மறுபுறம் கூற, பாலக்கோடு தொகுதி பரபரத்து கிடக்கிறது.
3 பேரூராட்சிகளோடு நூற்றுக்கணக்கான கிராமங்களைக் கொண்ட பாலக்கோடு தொகுதியைச் சுற்றி வந்தோம்.
நம்மிடம் பேசிய காரிமங்கலம் விவசாயி மாதேஷ்வரன், “இங்கு கரும்பு, மா, தக்காளி விவசாயம் அதிகமாகவும், சிறுதானியங்கள், நெல், தென்னை விவசாயம் ஓரளவும் நடக்கிறது. ஆனால், ஒரு பகுதி மட்டும்தான் பாசன வசதி பெறுகிறது.
மற்ற பகுதிகள் மழையை நம்பியுள்ளது. அப்படியிருந்தும் பாலக்கோடுதான் தமிழகத்திலேயே தக்காளி சாகுபடி அதிகம் நடைபெறும் பகுதியாக உள்ளது. தனியார்கள் கொள்முதல் செய்வதால், நியாயமான நிலையான விலை கிடைப்பதில்லை; இருப்பு வைக்க போதிய வசதி இல்லாததால், விவசாயிகள் நஷ்டம் அடைகிறார்கள்.
அரசே கொள்முதல் நிலையம் அமைக்கவும், தக்காளியை மதிப்புக் கூட்டும் தொழிற்சாலைகளைக் கொண்டு வரவேண்டும் என்று நீண்டகாலமாகக் கோரிக்கை வைத்து வருகிறோம். தூள்செட்டி ஏரி இணைப்புக் கால்வாய்த் திட்டம் முதல் பல்வேறு நீராதரத் திட்டங்கள் நிறைவேற்றப்படாமலேயே உள்ளது.
அன்பழகன் மக்களுடன் நன்றாகப் பழகக்கூடியவர்; சுக துக்கங்களில் கலந்துகொள்பவர். ஆனால், நீராதாரத் திட்டங்களை நிறைவேற்ற முயற்சி எடுக்கவில்லை; தி.மு.க அரசும் அக்கறை காட்டவில்லை” என்றார்.

ஓசூருக்கு வேலைக்குச் செல்லும் பாலக்கோடு இளைஞர் விக்னேஷ், “தொழிற்சாலைகள் இல்லாததால் என்னைப் போன்ற படித்த இளைஞர்கள் வெளியூர்களுக்குச் செல்லும் நிலை உள்ளது. பாலக்கோட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கவும் பாலக்கோடு, காரிமங்கலம் பேரூராட்சிகளை நகராட்சிகளாக மாற்றவும் எம்.எல்.ஏ எந்த முனைப்பும் காட்டவில்லை.
அதே நேரம், தேர்தல் வந்துவிட்டால் மக்கள் இரட்டை இலைக்கும், அன்பழகனுக்கும்தான் வாக்களிக்கிறார்கள். ஆனால், என்னைப்போன்ற இளைஞர்கள் இந்தமுறை வேறு முடிவு செய்துள்ளோம்” என்றார்.
நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள், “ரிஸ்க்கான தொகுதி என்பதால், தி.மு.க நிர்வாகிகள் வேறு சில ஆதாயத்திற்காக விருப்ப மனு அளித்திருந்தாலும், 2019 மக்களவைத் தேர்தலில் அன்புமணியைத் தோற்கடித்தார் என்ற கணக்கில் செந்தில்குமாரைத் தலைமை தேர்வு செய்துள்ளது.
அதே நேரம், எம்.பி-யாக இருந்தபோது அரசுத் திட்டங்களுக்குப் போடப்படும் பூமி பூஜையை விமர்சித்தது; சாதி, மதத்திற்கு எதிராகப் பேசுவது பெரும்பாலான மக்களுக்கு மட்டுமல்ல… தி.மு.க-வினருக்கே பிடிக்கவில்லை. அதனால்தான், கடந்த மக்களவைத் தேர்தலில் கட்சி இவருக்கு வாய்ப்பளிக்கவில்லை.
ஆனால், இப்போது கோயில்களில் கொடுக்கப்படும் மரியாதையைப் பவ்யமாக ஏற்றுக்கொள்கிறார். ‘நான் தருமபுரி சேர்மன் வடிவேல் கவுண்டர் பேரன்’ என்று பேசி சமூக மக்களிடம் கனெக்டாக முயற்சிக்கிறார்.
அதே நேரம், அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்துள்ள தொகுதியில் கணிசமாக உள்ள பா.ம.க-வினர் இவர் மீது உக்கிரமாக உள்ளனர். இதையெல்லாம் அவர் கடக்க முடியுமா என்று பார்ப்போம்” என்றனர்

கிராமங்களில் பரப்புரையின்போது டாக்டர் செந்தில்குமார், “நான் எம்.பி-யாக இருந்தபோது அதிக விபத்துகள் நடந்த தொப்பூர் பகுதியில் மத்திய அரசை வலியுறுத்தி ரூ. 800 கோடியில் மேம்பாலமும், பாலக்கோடு வழியாக தேசிய நெடுஞ்சாலையும் கொண்டு வந்தேன். ஆனால், 25 ஆண்டு காலம் இத்தொகுதியை வைத்திருக்கும் அன்பழகன் என்ன கொண்டுவந்தார்?
கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் போல தொழிற்சாலைகளைக் கொண்டு வந்தாரா? விவசாயம் நலிவடையாமல் இருக்க நீர்பாசனத் திட்டங்களைக் கொண்டு வந்தாரா? சிறப்பாக இயங்கி வந்த சர்க்கரை ஆலை தற்போது மூடப்படும் நிலையில் உள்ளது.
தூள்செட்டி ஏரி இணைப்பு கால்வாய்த் திட்டம் முதல் பல்வேறு நீராதரத் திட்டங்கள் நிறைவேற்றப்படாததால் விவசாயம் குறுகி வருகிறது. வீட்டு விசேஷத்துக்கு வந்து 500 ரூபாய் மொய் செய்தால் போதுமா? இப்போதுகூட சேலை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
என்னிடம் வசதி இருந்தாலும் சேலை கொடுக்க மாட்டேன். அதற்குப் பதிலாக தொகுதியில் நீர்பாசனத் திட்டங்களையும், தொழிற்சாலையும் கொண்டு வந்து வேலை கொடுப்பேன், 25 ஆண்டுகாலம் எம்.எல்.ஏ-வாக இருந்து, தொகுதியில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் ஒரு தலைமுறையினரின் எதிர்காலத்தை நாசமாக்கியுளார்.
இனி இது மாறவேண்டும், அதிமுக-வில் மற்ற நிர்வாகிகளையும், வேறு சமூகத்தினரையும் வளரவிடாமல் தடுக்கிறார்” என்று பேசுகிறார்.
இவருடைய குற்றச்சாட்டுக்குப் பதில் அளிக்கும் வகையில் அன்பழகனோ, “தி.மு.க-வில் உட்கட்சிப் பூசல்கள் அதிகரித்துள்ளதால், வெளியூரில் வசிப்பவரை வேட்பாளராகக் கொண்டு வந்துள்ளார்கள். இவர் எம்.பி ஆன பிறகு பாலகோடு பக்கம் திரும்பி பார்க்காதவர்.
அ.தி.மு.க ஆட்சியில் பாலக்கோடு உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள 5 தொகுதிகளுக்கும் நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், ஐந்தாண்டுகளாக அத்திட்டங்களைக் கிடப்பில் போட்டது தி.மு.க அரசு. தூள்செட்டி ஏரித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த தேர்தலின்போது ஸ்டாலின் விவசாயிகளிடம் வாக்குறுதி அளித்தும் செய்யவில்லை. இப்போது போட்டியிடும் தி.மு.க வேட்பாளரும் அதே பொய் வாக்குறுதியைக் கூறி வருகிறார்.
இவர் இப்போது சாதிப் பிரச்னையைத் தூண்டி விடுகிறார். மக்கள் அ.தி.மு.க மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் ஆட்சி அமைந்தவுடன் கிடப்பில் போடப்பட்ட நீர்ப்பாசனத் திட்டங்களுடன் இன்னும் பல வளர்ச்சித் திட்டங்களை பாலகோட்டிற்கு கொண்டு வருவேன்” என்று பேசுகிறார்.
இவர்களின் போட்டிக்கு இடையே நாம் தமிழரில் பூபதியும், த.வெ.க-வில் கோபியும் நாங்களும் களத்தில் இருக்கிறோம் என்று பரப்புரை செய்து கொண்டிருக்கிறார்கள். இத்தொகுதியில் வன்னியர், கொங்கு வேளாளக் கவுண்டர், பட்டியல் சமூகத்தினர் வெற்றியைத் தீர்மானிக்கக் கூடிய சக்திகளாக இருந்தாலும், மத சிறுபான்மையினர், மொழி சிறுபான்மையினரும் கணிசமாக உள்ளனர்.
சாதியும், அரசியலும் பின்னிப் பிணைந்த அரசியல் நிறைந்த பாலக்கோட்டில் கடைசி நேரத்தில் மக்களுக்கு அன்பளிப்புகள் அதிகம் கிடைக்கும் என்று சொல்லப்படும் நிலையில் 6வது முறையாக வெற்றிக்கோட்டின் அருகில் நிற்கும் அன்பழகனை, செந்தில்குமார் நெருங்கி வருவாரா என்பது வருகின்ற நாட்களில் தெரியும்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
