சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் ஓய இன்னும் சரியாக 10 நாட்களே இருக்கிறது. எல்லா கட்சித் தலைவர்களும் அதிகமான தொகுதிகளை கவர் செய்ய சுற்றி சுழன்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தவெக தலைவர் விஜய் மட்டும் திட்டமிட்ட பிரசாரத்தை ரத்து செய்துவிடுகிறார். விஜய்யின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த வேட்பாளர்களும் கொஞ்சம் அப்செட்டில் இருக்கின்றனர். என்னவென இறங்கி விசாரித்தோம்.

தவெக தலைவர் விஜய் கடந்த 9 ஆம் தேதி கடலூரில் பிரசாரம் செய்ய அனுமதி கேட்கப்பட்டிருந்தது. தேர்தல் அதிகாரியின் அனுமதியும் கிடைத்திருந்தது. ஆனால், விஜய் தரப்பு அந்த பிரசாரத்தை ரத்து செய்தது. அதற்கு பதிலாக 11 ஆம் தேதியான இன்று விஜய் கடலூருக்கு செல்ல அனுமதி கேட்கப்பட்டிருந்தது
அனுமதி கிடைத்த நிலையில், இன்றைய பிரசாரத்தையும் விஜய் ரத்து செய்திருக்கிறார். திட்டமிடப்பட்டு அனுமதி பெறப்பட்ட பிரசாரங்களை விஜய் அடுத்தடுத்து ரத்து செய்திருப்பதால் கடலூர் நிர்வாகிகளும் வேட்பாளர்களுமே கொஞ்சம் அப்செட் என்கின்றனர் தவெகவினர்.

கடலூரை சேர்ந்த நிர்வாகிகள் சிலரிடம் பேசுகையில்,’விருத்தாச்சலம் , நெய்வேலி, கடலூர் இந்தத் தொகுதிகளிலெல்லாம் எங்களுக்கு நல்ல ஆதரவு இருக்கிறது. அப்படியிருக்க தலைவர் தொகுதிகளுக்குள் வந்து பிரசாரம் செய்தால் சில தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பே இருக்கிறது. அப்படியிருக்க திட்டமிட்ட பிரசாரங்களை தலைவர் ரத்து செய்ததில் எங்களுக்கு வருத்தம்தான். 9 ஆம் தேதி புதுச்சேரியில் வாக்குப்பதிவு. அதனால் தலைவரை பார்க்க புதுச்சேரியிலிருந்து இளைஞர்கள் கிளம்பி வந்து தேர்தலில் கோட்டை விட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் அன்று பிரசாரத்தை ரத்து செய்ததாக கூறினார்கள்.
அதேமாதிரி, நேற்று காரைக்குடியில் கடும் வெயில ரோடு ஷோ செய்ததால் இன்றைய பிரசாரத்தை ரத்து செய்துவிட்டதாக கூறுகிறார்கள். எங்கள் மாவட்டத்துக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறதென புரியவில்லை. தலைவர் தொகுதிக்குள் வந்து சென்றால் களம் மொத்தமாக மாறிவிடும்’ என்கின்றனர்.

சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி மார்ச் 16 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை விஜய் தொடர்ச்சியாக 2 நாட்கள் பிரசாரம் மேற்கொண்டதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் அறிவிப்புக்கு பின் விஜய் 4 தொகுதிகளில் மட்டுமே பேசியிருக்கிறார். 3 தொகுதிகளில் மட்டுமே ரோடு ஷோ நடத்தியிருக்கிறார். தலைவர் தங்களின் தொகுதிக்கு வந்தால் மட்டுமே பிரசாரம் பிக் அப் என்கிற மனநிலையில் பல வேட்பாளர்களும் இருக்க, விஜய் திட்டமிட்ட பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு இருப்பது கட்சியினரை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
