Sorting by

×

பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி ஆட்சி, அம்மாநிலத்தில் சில பொது இடங்களில் இறைச்சி மற்றும் மீன் விற்பனையைத் தடை செய்ய முடிவு செய்திருக்கிறது.

பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நல்லிணக்கத்தைக் கருத்தில் கொண்டு, பீகார் மாநிலம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்வதற்கு அம்மாநில அரசு அதிரடித் தடைவிதித்துள்ளது.

விஜய் குமார் சின்கா
விஜய் குமார் சின்கா

இதுகுறித்து பீகார் மாநில பா.ஜ.க தலைவரும், துணை முதல்வருமான விஜய் குமார் சின்ஹா, “குழந்தைகளிடையே வன்முறைப் போக்குகள் உருவாவதைத் தடுக்கவும், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களில் இறைச்சி விற்பனையை முறைப்படுத்துவதற்கான அரசின் முயற்சியின் ஒரு பகுதியே இது. யாருடைய உணவுப் பழக்க வழக்கங்களுக்கும் அரசு எதிராக இல்லை. ஆனால், சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கவோ அல்லது மக்களின் புனிதமான உணர்வுகளைப் புண்படுத்தவோ கூடாது.

மக்கள் எவ்விதத் தளர்வும் இன்றி இந்த விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். மாநில நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதித் துறை நடத்திய கூட்டத்தில் இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய அரசின் புதிய முயற்சி பீகாரின் மாறிவரும் தன்மையைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. எனவே, பீகார் நகராட்சி சட்டம் 2007-ன் படி, இறைச்சிக் கடை நடத்துவதற்கு உரிமம் பெறுவது கட்டாயமாகும்.

புதிய விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, அவர்களின் வியாபாரப் பொருள்களும் பறிமுதல் செய்யப்படும்” எனக் காட்டமாகத் தெரிவித்தார்.

விஜய் குமார் சின்கா
விஜய் குமார் சின்கா

இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், “திறந்தவெளியில் இறைச்சி வெட்டுவதும் விற்பனை செய்வதும் மாசுபாட்டை உருவாக்குவதோடு தூய்மை விதிகளுக்கு எதிரானது” என இந்தத் திட்டத்தை வரவேற்றிருக்கிறார்.

இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தன் எக்ஸ் பக்கத்தில், “ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்? ஏனெனில், ஆட்சி செய்வது என்பது தற்போது வெறும் நிர்வாகமாக மட்டும் இல்லாமல், மக்கள் என்ன சாப்பிட வேண்டும், எப்படி வாழ வேண்டும் மற்றும் யாருடைய கலாசாரம் ஏற்றுக்கொள்ளத்தக்கது என்பதைத் தீர்மானிக்கும் கட்டுப்பாடாக மாறி வருகிறது.

பீகாரில், கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே இறைச்சி மற்றும் மீன் விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் சமூக நல்லிணக்கத்தின் பெயரால் நியாயப்படுத்தப்படுகின்றன. ஆனால் நேர்மையாக ஒரு கேள்வியைக் கேட்போம். யாருடைய உணவுப் பழக்கவழக்கங்கள் இங்கே குறிவைக்கப்படுகின்றன?

இதர பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் என ஒவ்வொருவருக்கும் வரலாறு, புவியியல் மற்றும் வாழ்வாதாரத்தோடு பின்னிப் பிணைந்த தனித்துவமான உணவு மரபுகள் உள்ளன.

இந்த உணவு முறைகளை அரசு மறைமுகமாக இழிவுபடுத்தவோ அல்லது கட்டுப்படுத்தவோ முற்படும்போது, அது சுகாதாரத்தைப் பற்றியதாக இருப்பதில்லை. மாறாக அது கலாசாரக் கட்டுப்பாடாகவே மாறுகிறது.

காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்
காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்

மொழி, நம்பிக்கை, உடை மற்றும் உணவில் நிலவும் பன்முகத்தன்மைதான் இந்தியாவின் வலிமை.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் தனிமனிதத் தேர்விற்கான சுதந்திரத்தை உறுதி செய்கிறது. நிர்வாகம் என்பது பன்முகத்தன்மையைப் பாதுகாக்க வேண்டுமே தவிர, ஒற்றைத்தன்மையைத் திணிக்கக் கூடாது.

பிரித்தாளும் அரசியலைத் தோற்கடிப்பது என்பது பாரதத்தின் ஆன்மாவைப் பாதுகாப்பதாகும். அங்கே ஒரு குடிமகன் என்ன சாப்பிட வேண்டும் என்பதை மற்றொருவர் தீர்மானிக்க முடியாது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *