புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்காக பா.ஜ.க வெளியிட்டிருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில், `அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆண்டுக்கு 2 இலவச எல்பிஜி சிலிண்டர்கள் பொங்கல் மற்றும் விநாயகர் சதுர்த்திக்கு வழங்கப்படும். 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பாகச் செயல்படும் மாணவிகளுக்கு இ-ஸ்கூட்டர்கள் வழங்கும் ‘அன்புத் தங்கைத் திட்டம்’ செயல்படுத்தப்படும்.
பெண் ஓட்டுநர்களுக்கு இலவச பயிற்சி மற்றும் ஆட்டோ வாங்க ரூ.50,000 மானியம் வழங்கும் ‘பிங்க் ஆட்டோ’ திட்டம் தொடங்கப்படும். உயர்கல்வி பயிலும் 100 மாணவிகளுக்கு ஆண்டுதோறும் தலா ரூ.50,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். பெண்களின் பாதுகாப்புக்காக ‘அவசர உதவி பட்டனுடன்’ கூடிய ‘காவலன் SOS’ செயலி உருவாக்கப்படும்.

குரூப் ‘சி’ மற்றும் ‘டி’ அரசுப் பணிகளில் புதுச்சேரி இளைஞர்களுக்கு 60% இடஒதுக்கீடு வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரியர் காலிப் பணியிடங்களும் விரைவாக நிரப்பப்படும். 10,000 இளைஞர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித்தொகையுடன் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
இளம் தொழில்முனைவோருக்கு 3% வட்டியில் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். பி.எம் கிசான் (PM KISAN) திட்டத்தின் கீழ் கூடுதலாக ரூ.3,000 சேர்த்து, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 9,000 கிடைப்பது உறுதியாக்கப்படும். பயிர் சேதங்களுக்கு நிவாரணம் வழங்க ரூ. 200 கோடி தொகுப்பு நிதியம் (Corpus Relief Fund) உருவாக்கப்படும்.
மீன்பிடித் தடைக்காலத்தில் வழங்கப்படும் நிதியுதவி ரூ.8,000-லிருந்து ரூ.12,000-ஆக உயர்த்தப்படும். பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு 5,000 வீடுகள் கட்டித் தரப்படும். ஒவ்வொரு ஊராட்சிக்கும் தலா ரூ. 5 லட்சம் சிறப்பு ‘நம்ம ஊரு பட்ஜெட்’ வழங்கப்படும்.
புதுச்சேரி ரயில் நிலையத்திற்கு ‘மகாகவி பாரதியார்’ பெயர் சூட்டப்படும். சென்னை – புதுச்சேரி இடையே ‘வந்தே மெட்ரோ’ மற்றும் மைசூர் – புதுச்சேரி இடையே ‘வந்தே பாரத்’ ரயில்கள் இயக்கப்படும். மாநிலம் முழுவதும் 30 மலிவு விலை ‘அடல் உணவகங்கள்’ அமைக்கப்படும். குடிநீர் பிரச்னையைத் தீர்க்க 30 ‘குடிநீர் ஏ.டி.எம்கள்’ நிறுவப்படும்.

புதுச்சேரியை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக்க ‘ஆபரேஷன் விடியல்’ மற்றும் ‘போதையில்லா புதுச்சேரி’ இயக்கங்கள் வலுப்படுத்தப்படும். புதுச்சேரி சித்தர் மரபைப் பாதுகாத்து மேம்படுத்த சித்தர் கோயில்கள், தியான இடங்கள் மற்றும் பாரம்பர்ய தளங்களைப் பாதுகாத்து ‘சித்தர் சர்க்யூட்கள்’ உருவாக்கப்படும்.
மேலும் மத்திய அரசின் நிதியுதவியுடன் குரு ஸ்ரீ சக்திவேல் பரமநாத சுவாமி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தை அமைப்போம். புதுச்சேரியின் வரலாறு மற்றும் கலாசார அடையாளத்தைப் போற்றும் வகையில், புதுச்சேரி அரசின் தற்போதைய சின்னத்திற்கு பதிலாக வில்லியனூர் தேர் புதிய சின்னமாக மாற்றுவோம்.’ என்று குறிப்பிட்டிருக்கிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
