“தொன்மையான தமிழ் மொழியில் பேச முடியாததற்கு மன்னிப்பு கேட்கிறேன்…”
புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “உலகின் தொன்மையான மற்றும் இனிமையான தமிழ் மொழியில் என்னால் பேச முடியவில்லை என்பதற்காக முதலில் உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.
இப்போது நான் புதுச்சேரிக்கு வந்திருப்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, புதுச்சேரியில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் எப்படியான வளர்ச்சித் திட்டங்களெல்லாம் நடைபெற்றிருக்கின்றன என்பதைக் கூற வந்திருக்கிறேன். மற்றொன்று, புதுச்சேரியை ஏற்கெனவே ஆட்சி செய்தவர்களின் முகத்திரையைக் கிழித்திட வந்திருக்கிறேன்.

மத்தியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, நாள்தோறும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவார்கள். ஆனால் அந்த அன்றாடத் தாக்குதல் குறித்து அப்போதைய பிரதமரோ, உள்துறை அமைச்சரோ, பாதுகாப்பு அமைச்சரோ வாய் திறக்க மாட்டார்கள்.
கடந்த 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் உயிரிழந்தார்கள். நாட்டுக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த அந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
அதேசமயம் அந்தத் தாக்குதலுக்காக எதிரிகளின் இடத்திற்கே சென்று வான்வழித் தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்தோம். இரண்டாவதாக, பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தினோம்.
“புதுச்சேரியில் 60% வாக்குகள்… 24 தொகுதிகள்…”
இறுதியாக ஆபரேஷன் சிந்தூர் போன்ற துல்லியமான தாக்குதலால் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் பிரதமர் மோடி நம் நாட்டுக்குப் பெருமையை மட்டும் தேடித் தரவில்லை, பாதுகாப்பையும் உறுதி செய்திருக்கிறார். புதுச்சேரியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கைச் சரிசெய்து வளர்ச்சிப் பணியைத் தொடங்கியிருக்கிறோம்.
நம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கடந்த 2021 தேர்தலில் 44% வாக்குகளைப் புதுச்சேரி மக்கள் வழங்கினார்கள். அந்த வகையில் வருகின்ற 2026 தேர்தலில் 60% வாக்குகளைப் பெற்று 24 தொகுதிகளில் வெற்றிபெறுவோம்.

புதுச்சேரியை இதற்கு முன்பு ஆட்சி செய்த நாராயணசாமி மிக மோசமாக ஆட்சியை நடத்தினார். அந்த ஐந்து ஆண்டுகளில் ஊழலால் ஒட்டுமொத்த புதுச்சேரிக்கும் சீர்குலைவு ஏற்பட்டது. புதுச்சேரியைக் காந்தி குடும்பத்துக்கான ஏ.டி.எம். இயந்திரமாக மாற்றி வைத்திருந்தார் நாராயணசாமி.
கல்வி நிலையங்களை விற்ற அவர், எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களைக் கூட ஏலம் விட்டுவிட்டார். அவருடைய ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. போக்குவரத்து மாஃபியாக்களுக்குப் புதுச்சேரியை முழுமையாகத் திறந்துவிட்டவர் நாராயணசாமி.
“ரூ.15,000 கோடி ஊழல் செய்தவர் நாராயணசாமி…”
வளர்ச்சித் திட்டங்களுக்காகப் புதுச்சேரிக்குக் கொடுக்கப்பட்ட நிதியில், சுமார் ரூ.1,500 கோடி அளவுக்கு அவர் ஊழல் செய்திருப்பது சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிய வந்திருக்கிறது.
ரூ.15,000 கோடி என்பது புதுச்சேரி மாநிலத்தின் மூன்று ஆண்டுகளுக்கான பட்ஜெட் தொகை. அவரது ஆட்சிக்காலத்தில் புதுச்சேரியில் புதிதாக ஒரு தொழிற்சாலைகூடத் தொடங்கப்படவில்லை. நம்முடைய ஐந்து ஆண்டுகால தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்திருப்பதுடன், சுயமாகச் செயல்படும் ஓர் அரசை உருவாக்கியிருக்கிறோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் மூன்று முக்கியத் துறைகளில் நாம் கவனம் செலுத்த இருக்கிறோம்.

ஒன்று, புதுச்சேரி மீனவர்களின் பொருட்கள் உலக சந்தைகளுக்குச் செல்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பது. இரண்டாவது, தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றுக்கான இடமாகப் புதுச்சேரி மாநிலத்தை மாற்றுவது.
அதன்மூலம் புதுச்சேரி இளைஞர்கள் அதிக அளவு வேலை வாய்ப்புகளைப் பெறுவார்கள். புதுச்சேரியில் ஏற்கெனவே ஜோஹோ அமைப்பு தங்களுடைய சாஃப்ட்வேர் நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறது.
அதேபோல் எஸ்.ஆர். நிறுவனம் லேப்டாப் தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறது. புதுச்சேரியில் உற்பத்தி செய்யப்படும் லேப்டாப்கள் 70 நாடுகளுக்கு ஏற்றுமதியாக இருக்கிறது” என்றார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
