Sorting by

×

“போலி மருந்தால் இறந்தவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் வேண்டும்…”

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது. தேர்தல் நடைபெற இருப்பதால் 2026-27 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை.

அதற்கு பதிலாக அரசின் செலவினங்களுக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக புதுச்சேரி சட்டப்பேரவை இன்று கூடியது. நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 5 மாதங்களுக்கு ரூ.5,396/- கோடிக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

முன்னதாக சபாநாயகர் செல்வம் குறள் வாசித்து சபையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து இரங்கல் குறிப்பை வாசித்த அவர் பேரவை முன் ஏடுகளை வைக்க முதலமைச்சர் ரங்கசாமியை அழைத்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவை

அப்போது ஏடுகளை தாக்கல் செய்து ரங்கசாமி பேசினார். அப்போது சுயேச்சை எம்.எல்.ஏ நேரு, “ஊழல் செய்த சபாநாயகர் சபையை நடத்தலாமா? பிற மாநிலங்களில் இதை அனுமதிப்பார்களா? துணை சபாநாயகர்தான் இந்த சபையை நடத்த வேண்டும்.

இதையும் எதிர்க்கட்சிகள் வேடிக்கை பார்க்கிறது. போலி மருந்துகள் சாப்பிட்டு இறந்தவர்களுக்கும் இந்த சபையில் இரங்கல் தீர்மானம் வாசிக்க வேண்டும். இதை கண்டிக்காத எதிர்க்கட்சிகள் எதற்கு ?” என்றார்.

ஆனால் சபாநாயகர் செல்வம் தொடர்ந்து சபையை நடத்தியதையடுத்து, எம்.எல்.ஏ நேரு அவரது இருக்கையில் அமர்ந்தார். தொடர்ந்து சபையில் கூடுதல் செலவினங்களுக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தங்கள் துறைகளின் செலவினங்கள் குறித்த ஏடுகளை தாக்கல் செய்தனர்.

“முதலமைச்சரின் முதல் கோரிக்கையே தோல்வி…”

அப்போது எதிர்க்கட்சியினர் ஒட்டுமொத்தமாக எழுந்து பேசினர். அப்போது சுயேச்சை எம்.எல்.ஏ நேரு சபாநாயகர் இருக்கை முன்பு நின்று, `அராஜகம்… அராஜகம்… சபாநாயகர் சபையை நடத்துவது அராஜகம்’ என கோஷம் எழுப்பினார்.

அதையடுத்து நேரு எம்.எல்.ஏ-வை வெளியேற்றும்படி சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார் சபாநாயகர். அதையடுத்து அவரை குண்டுக்கட்டாக தூக்கி சபையிலிருந்து வெளியேற்றினர் சபை காவலர்கள்.

தொடர்ந்து அரசின் கூடுதல் செலவினங்களுக்கான விவாதம் நடந்தது. அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சிவா, “புதுச்சேரி முழுவதும் போராட்டங்கள் நடக்கின்றன. ஒப்பந்த ஆசிரியர்கள், தற்காலிக பொதுப்பணி ஊழியர்கள், தேசிய சுகாதார இயக்க ஊழியர்கள் என அனைவரும் போராட்டம் நடத்துகின்றனர்.

புதுச்சேரி திமுக அமைப்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் சிவா

இந்தப் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர அரசு எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை. இரட்டை என்ஜின் அரசு என கூறினீர்கள். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது ? தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நீங்கள் நிறைவேற்றவில்லை.

மக்களுக்கு இலவசங்களை மட்டும் கொடுத்திருக்கிறீர்கள். வளர்ச்சிக்கான திட்டங்களான மேம்பால பணி தொடங்கவில்லை. விமான நிலைய விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளவில்லை. புதுச்சேரி மக்கள் மாநில சுயாட்சியை விரும்புகின்றனர். முதலமைச்சரும் மாநில அந்தஸ்துக்காகத்தான் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தாக கூறினார்.

ஆனால் முதலமைச்சரின் முதல் கோரிக்கையே தோல்வியடைந்திருக்கிறது. புதுச்சேரிக்கான கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்யாததால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கிறது.

“நாங்க ரெடி… நீங்க ரெடியா…?”

அத்துடன் மாநிலத்தின் கடன் சுமையும் அதிகரித்திருக்கிறது. 19 கார்ப்பரேஷன்கள் நிரந்தரமாக மூடபட்டு விட்டன. அவற்றை திறப்பதற்கு மத்திய அரசு எந்தவித உதவியையும் செய்யவில்லை.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்காக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் டெல்லிக்கு அழைத்துச் செல்வோம் என்று கூறினீர்கள். ஆனால் அதற்கான  முயற்சிகளைக் கூட செய்யவில்லை. மக்கள் உங்களை நம்பித்தான் வாக்களித்தார்கள்.

மாநில அந்தஸ்துக்காக 2026 சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க முதல்வர் தயாராக இருக்கிறாரா ?” என்று கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட முதல்வர் ரங்கசாமி, “தேர்தலை புறக்கணிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

தேர்தல் புறக்கணிப்புக்கு என்ஆர்.காங்கிரஸ் கட்சி தயார்தான். நீங்கள் தயாரா ? மாநில அந்தஸ்து கேட்டு மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்தி அனுப்புவோம்” என்றார்.

அத்துடன் விவாதம் முடிந்தது. கூட்டத்தின் இறுதியில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா, “ஒட்டுமொத்தமாக முடிவெடுத்து தேர்தலை புறக்கணிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து பேசி முடிவு செய்யுங்கள்” என்றார். அதைத்தொடர்ந்து 11.55 மணிக்கு சபையின் அனைத்து நடவடிக்கைகளையும் நிறைவு செய்த சபாநாயகர் செல்வம்,  சபையை காலவரையின்றி ஒத்திவைத்தார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *