புதுச்சேரியின் ஆளுநராக இருந்த தமிழிசை தேர்தல் அரசியலுக்கு திரும்பியதால், ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநரான சி.பி. ராதாகிருஷ்ணன் புதுச்சேரி மற்றும் தெலங்கானாவுக்கு பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதனடிப்படையில் புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்பு பதவியேற்றுக் கொண்டார் சி.பி. ராதாகிருஷ்ணன். கடந்த 10-5-2024 அன்று நடைபெற்ற கம்பன் விழாவில், முதல்வர் ரங்கசாமியும், ஆளுநர் ராதாகிருஷ்ணனும் முதல் முறையாக ஒன்றாக கலந்து கொண்டனர்.
அப்போது ஆளுநர் ராதாகிருஷ்ணன், “புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு சில கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நிலை இருக்கிறது. அதற்கு மக்களின் ஒத்துழைப்பு தேவை” என்று கூறியிருந்தார். அதையடுத்து மே 17-ம் தேதி புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில், ‘புதிய குற்றவியல் சட்டங்கள்’ குறித்து காவல்துறை மற்றும் சட்டத்துறை அதிகாரிகளுக்கான இரண்டு நாள் பயிற்சி விழா நடைபெற்றது.
காரில் முதல்வர் ரங்கசாமியுடன், ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
இதில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ராதாகிருஷ்ணன், “சிறிய மாநிலமான புதுச்சேரியில் அதிக மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. ஆனால், அங்கு படிக்கும் மருத்துவ மாணவர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகி இருக்கின்றனர். புதுச்சேரியில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி வாசல்களிலும் கஞ்சா எளிமையாக கிடைக்கிறது என்பதுதான் அவலம். புதுச்சேரியில் குப்பைகளை அகற்றிய தொகையைக் கேட்டு என்னிடம் ஒரு கோப்பு வந்தது. ஆனால், நான் அதில் கையெழுத்து போடவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து, `புதுச்சேரி நகரம் முழுவதும் சுற்றி வாருங்கள். ஒரு வீதியில்கூட குப்பைகள் இல்லை என்று சொல்லுங்கள் நான் கையெழுத்து போடுகிறேன்’ என்றேன். குப்பைகளை அகற்றாமல் அதற்கான பில்லை மட்டும் அனுப்பினால், அதில் எப்படி கையெழுத்திட முடியும்? அதனால் சில நேரங்களில் நாம் கடுமையான முடிவுகளை எடுத்துதான் ஆக வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
கஞ்சா புழக்கம், அரசுத் துறைகள் மற்றும் நிதிகளில் நடக்கும் முறைகேடுகள் என புதுச்சேரியில் நிலவி வரும் பிரதான பிரச்னைகள் குறித்துதான் ஆளுநர் பேசினார் என்றாலும், ஆட்சியாளர்கள் தரப்பில் அதை விரும்பவில்லை என்பது வெளிப்படையாக தெரிந்தது. செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னால் முதல்வர் நாராயணசாமி, “கிரண்பேடி, தமிழிசையைப் போலத்தான் தற்போதைய ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனும் செயல்படுகிறார். ஆளுநர், அதிகாரத்தை கையிலெடுத்துக் கொண்டு, முதல்வர், அமைச்சர்கள் மீது கவனம் செலுத்தாமல், பஞ்சாயத்து மற்றும் நகராட்சி அதிகாரிகளை வைத்து கூட்டம் போடுகிறார். அரசுத் துறைகளில் அவருக்கு கருத்து இருந்தால், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு கடிதம் அனுப்பலாம். ஆனால் அரசில் நேரடியாக தலையிடக் கூடாது. ஆனால் ஆளுநர் சில விஷயங்களில் தலையிட்டிருக்கிறார். அது வரவேற்கக் கூடியதுதான். குறிப்பாக கஞ்சா விற்பனை மூன்று மாதங்களில் ஒழிக்கப்படும் என்பதிலும், குப்பை அள்ளும் விவகாரத்தில் தலையிட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது” என்றார்.
முதல்வர் ரங்கசாமியுடன், ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
இந்த சூழலில்தான் ஆளுநரும், முதல்வரும் ஒன்றாக ஒரே காரில் நகர்வலம் சென்றிருப்பது, கவனிக்க வைத்திருக்கிறது. எம்.எல்.ஏ, அமைச்சராக இருந்து தற்போது நான்காவது முறையாக முதலமைச்சராக இருக்கும் ரங்கசாமி, யமஹா பிரியர். தன்னுடைய இளமைக் காலத்தில் அவர் வாங்கிய யமஹா ஆர்.எக்ஸ் 100 பைக்கை இன்னும் பராமரித்து வைத்திருக்கிறார். அனைத்து தேர்தல்களிலும், அந்த பைக்கில் சென்று வாக்களிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதேபோல 1997-ம் ஆண்டு அவர் முதன் முதலில் வாங்கிய அம்பாசிடர் காரை, சமீபத்தில் புதுப்பித்து அதில் பயணம் செய்ய ஆரம்பித்திருக்கிறார். அந்த காரில்தான் முதல்வர் ரங்கசாமியும், ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனும் நேற்று மாலை நகர்வலம் சென்றனர். நகரின் பிரதான வீதிகளான காந்தி வீதி, நேரு வீதி, ஆம்பூர் சாலை, செஞ்சி சாலை வழியாக கடற்கரை சாலை சென்ற அவர்கள், ஆளுநர் மாளிகை வந்தனர். `கிரண்பேடி, தமிழிசை வழியில் தற்போதைய ஆளுநருக்கும், முதல்வருக்கும் மோதல் என்று எதிர்க்கட்சிகளும், மக்களும் பேச ஆரம்பித்துவிட்டனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே இந்த நகர்வலம்’ என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88
“சொல்லவே அசிங்கமாக இருக்கிறது!” – பாஜக-வால் புலம்பும் ரங்கசாமி; என்ன நடக்கிறது புதுச்சேரி அரசியலில்?
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
