கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் புன்னப்புரா தெற்கு ஊராட்சி 5-வது வார்டைச் சேர்ந்தவர் உஷா ஜோசப் (59). அவரது கர்ப்பப் பையில் கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப்பை கட்டி அகற்றப்பட்டது.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிறகு உஷா ஜோசப்புக்கு வயிற்றில் வலி ஏற்பட்டது. மீண்டும் மருத்துவமனைக்குச் சென்று மருந்து வாங்கினார். ஆனாலும், வலி தீரவில்லை. வலிக்காக மருந்து எடுத்தபடியே நாள்களைக் கடத்தினார்.
சில நாள்களுக்கு முன்பு வேறு ஒரு மருத்துவரைச் சந்தித்து தனது பிரச்னையைக் கூறினார். அவர் எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டார். எக்ஸ்ரேவில் அவரது வயிற்றில் கத்தரிக்கோல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சென்று அறுவை சிகிச்சை மூலம் கத்தரிக்கோலை அகற்றும்படி அந்த மருத்துவர் கூறி உஷா ஜோசப்பை அனுப்பி வைத்தார்.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சென்று விவரம் தெரிவித்தார். உடனடியாக மருத்துவமனையில் அட்மிட்டானால் மறுநாளே அறுவை சிகிச்சை மூலம் கத்தரிக்கோலை அகற்றிவிடலாம் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த உஷா ஜோசப் உறவினர்களிடம் விஷயத்தைத் தெரிவித்தார். அவரது உறவினரான தொபியாஸ் புன்னப்புரா தெற்கு ஊராட்சி துணை த்தலைவராக உள்ளார். அவரது வழிகாட்டுதல்படி புன்னப்புரா காவல் நிலையத்தில் உஷா ஜோசப் புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து உஷா ஜோசப் கூறுகையில், “ஆபரேஷனுக்குப்பின் வயிற்று வலி என நான் மருத்துவமனைக்குச் செல்லும்போது சிறுநீரகத்தில் கிருமித் தொற்று இருப்பதாகக் கூறி மருந்து தருவார்கள். அதை எடுத்துக்கொண்டால் தற்காலிகமாக வலி குறையும். இத்தனை ஆண்டுகளும் இப்படித்தான் கடந்தது.
சில நாள்களுக்கு முன் ரத்தப்போக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது கத்தரிக்கோல் இருந்தது தெரியவந்தது. இதுபற்றி வெளியே யாரிடமும் கூறவேண்டாம் எனவும், திங்கள்கிழமை அட்மிட்டானால் செவ்வாய்க்கிழமை அறுவை சிகிச்சை செய்து கத்தரிக்கோலை வெளியே எடுத்துவிடலாம் என ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் கூறி அனுப்பினர்.
ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மீண்டும் சென்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள பயமாக உள்ளது” என்றார்.
இந்த விவகாரத்தை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கையில் எடுத்து விமர்சனம் செய்தது. இந்த விவகாரம் அரசியல் ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கேரளா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், “உஷா ஜோசப்புக்கு நேர்ந்தது மிகவும் வேதனை அளிக்கும் நிகழ்வாகும். இது சம்பந்தமாக விசாரணை நடத்த மருத்துவ அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் அறிக்கையின்படி மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிகாரிகளின் விசாரணை அறிக்கை காவல்துறைக்கும் வழங்கப்படும். உஷா ஜோசப்பின் மகனிடம் நான் பேசினேன். இந்தத் தவறில் டாக்டருக்கும், நர்ஸ் உள்ளிட்டவர்களுக்கும் பங்கு உண்டு. இதில் துறை ரீதியாகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும்” என்றார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
