நாடாளுமன்ற தேர்தல் நடந்து வரும் சூழலில் பத்திரிகையாளர் என்.ராம், ஓய்வு பெற்ற நீதிபதிகள் மதன் பி.லோக்கூர், அஜீத் பி.ஷா ஆகியோர் பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு பொது விவாதத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். அதில், ‘பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றி விடுவார்கள் என்ற வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புகார் கூறி வருகிறார். அதேபோல், காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் இடஒதுக்கீடுகள் அனைத்தையும் முஸ்லிம்களுக்கு ஒதுக்குவார்கள் என்றும், அயோத்தியின் ராமர் கோயில் தீர்ப்பை மாற்றி எழுதி விடுவார்கள் என்றும் பிரதமர் மோடி புகார் கூறியுள்ளார்.
‘இந்து’ ராம்
இந்தவகையில் தொடரும் புகார்கள் அனைத்தும் அனுமானங்களின் பேரில் முன்வைக்கப்படுவதாகக் கருதப்படுகிறது. இவை உண்மையிலேயே சாத்தியமா? என்பதை அறியும் வகையிலும், பொதுமக்கள் சார்பிலான மேலும் பல கேள்விகளுடன் விவாதத்தில் பங்கேற்க வேண்டும். இந்த விவாதமானது எந்த சார்பும் இல்லாத வகையிலும், லாபநோக்கம் இல்லாத மேடையில் நடத்தப்படும். இந்த விவாதத்தில் கலந்துகொள்ள இருவராலும் முடியாவிட்டால் அவர்கள் சார்பில் ஒருவரை அனுப்பி வைக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் கமிட்டி, “விவாதத்துக்கான அழைப்பு தொடர்பாக காங்கிரஸ் கட்சி ஆலோசித்தது. அதன்படி, ராகுல் காந்தியோ அல்லது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேயோ விவாதத்தில் கலந்து கொள்வார்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராகுல் காந்தி, “பகிரங்க விவாதம் ஏற்பாடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. பா.ஜ.க, காங்கிரஸ் இரண்டுமே தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகள் என்பதால், பொதுமக்கள் தங்கள் தலைவர்களிடம் நேரடியாகக் கேட்கத் தகுதியானவர்கள். பிரதமர் மோடி எப்போது விவாதத்தில் பங்கேற்க ஒப்புக்கொள்கிறார் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்தவும். அதனைத்தொடர்ந்து விவாதத்தின் விவரங்கள் மற்றும் வடிவம் பற்றி ஆலோசிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
கடிதம்
இதுகுறித்து கர்நாடக பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா, “பிரதமர் மோடியை பொது விவாதத்துக்கு அழைக்க, ராகுல் யார்?. இவர் பிரதமர் வேட்பாளரா?. இந்தியா கூட்டணி பற்றி பேசுவதை விடுங்கள். முதலில் காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க வேண்டும். கட்சியின் தோல்வி பொறுப்பை, தானே ஏற்பதாக ராகுல் அறிவிக்கட்டும். அதன்பின் பிரதமர் மோடியுடன் விவாதிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
இதேபோல் உத்திர பிரதேச பா.ஜ.க எம்.பி ஸ்மிருதி இராணி, “முதலாவதாக, தனது கோட்டையில் இருக்கும் சாதாரண பா.ஜ.க தொண்டரை கூட எதிர்த்துப் போட்டியிடும் தைரியம் இல்லாதவர் ராகுல். அவர் பெருமை பேசுவதை நிறுத்த வேண்டும். நான் கேட்க விரும்புகிறேன். ராகுல் என்ன பிரதமர் வேட்பாளரா?. இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் இருந்தாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
‘மோடியின் அட்டாக்; ராகுலின் வீடியோ எதிர்வினைகள்’ – அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?!
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “நேருக்கு நேர் விவாதத்துக்கு காங்கிரஸ் தயாராக இருக்கிறது. ஆனால் குட்டு வெளியாகி விடும். அம்பலப்பட்டு நிற்போம் என்கிற அச்சத்தில் பா.ஜ.க தயாராக இல்லை. 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துவிட்டு தேர்தலை சந்திப்பது பா.ஜ.கதான். அதேபோல காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சொல்லாத விஷயங்களை பேசி வருவதும் பிரதமர் மோடிதான். எனவே தான் பேசுவதில் உண்மை இருக்கிறது என பிரதமர்தான் நிரூபிக்க வேண்டும். இல்லாத விஷயங்களை பேசி வரும் உங்களுக்கு எப்படி பொதுமக்கள் மத்தியில் பேசுவதற்கு தைரியம் வரும். பத்திரிகையாளர்களை சந்திப்பதற்கு பயப்படும் பிரதமர் எப்படி இதற்கு சம்மதம் தெரிவிப்பார். மனதின் குரல் என ஒன் சைடாகவே பேசி பழகியவர். மற்றொரு பக்கம் இருந்து வரும் பதிலை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார்.” என்றார்.
ஹசீனா
இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத், “நமது பிரதமரால் டெலிபிராம்டர் இல்லாமல் பேச முடியாது. மேலும் அவர் 10 ஆண்டுகாலத்தில் எத்தனை முறை பத்திரிகையாளர்களை சந்தித்திருக்கிறார்?. பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியையும், தலைவர் ராகுல் காந்தியையும் பார்த்தல் பயம். அதனால் நொண்டி சாக்குகளை சொல்கிறீர்கள். இது மக்களுக்கும், இந்தியா கூட்டணிக்கும் தெரியும். ஏன் உங்கள் கட்சியினருக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் கூட தெரியும்” என்றார்.
நாராயணன் திருப்பதி
இறுதியாக பா.ஜ.க துணை தலைவர் நாராயணன் திருப்பதியிடம் விளக்கம் கேட்டோம், “பிரதமர் நேரடியாக மக்களை சென்று சந்திக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன. இந்து ராம் என்பவர் இடதுசாரிகளின் பிரதிநிதியாகவே பார்க்கப்படுகிறார். அவர் எப்படி நடுநிலையாக செயல்படுவார் என நாம் எதிர்பார்க்க முடியும்?. யாருடன் யார் விவாதிக்க வேண்டும் என்பதை, ஒருசிலர் மட்டும் இவரும், அவரும் பேசுவார்கள் என எப்படி சொல்ல முடியும்?” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88
‘மோடியின் அட்டாக்; ராகுலின் வீடியோ எதிர்வினைகள்’ – அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?!
