Sorting by

×

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சிகள் இணைந்து, தமிழ்நாட்டில் நிலவும் பாலியல் கொடுமைகள், போதைப்பொருள்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களைத் தடுக்க தவறியதாக… திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தின. தஞ்சாவூரில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதிமுக-வின் தஞ்சாவூர் மாநகரச் செயலாளர் என்.எஸ்.சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் தினகரனுக்கு மரியாதை செலுத்தினர். முடிவில் திமுக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டது.

தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரன்

இதில் டி.டி.வி.தினகரன் பேசியதாவது, “தமிழ்நாடு முழுவதும் மக்கள் கொதித்து போயிருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை நடக்கிறது. பச்சிளம் குழந்தை முதல் மூதாட்டி வரை வீடுகளில்கூட பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை. கஞ்சா போன்ற போதை புழக்கம் தமிழ்நாடு முழுவதும் பட்டித்தொட்டியெல்லாம் பரவியுள்ளது. இளைஞர்களும், மாணவர்களும் போதைக்கு அடிமையாகி பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக பெண்களின் பாதுகாப்பிற்கு இடைஞ்சல், பெண்கள் உயிரை காவு வாங்குகின்ற செயல்கள் நடக்கிறது. மிகவும் மோசமான நிலைக்கு ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டை தள்ளியுள்ளார்கள். எப்போது திமுக ஆட்சிக்கு வந்தாலும் சட்டம் ஒழுங்கு கெட்டு விடும். இப்போது நாம் கேள்வி படாத அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

திமுக நிர்வாகிகள், திமுக-வை சேர்ந்தவர்கள் ஆதரவுடன் மணல் கடத்தல் உள்ளிட்ட கனிம வளக் கொள்ளை, சட்டவிரோத செயல்கள் நடக்கிறது. இதை தட்டி கேட்கிற சாமானியர்கள், அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என யாராக இருந்தாலும் கொலை செய்கின்ற உயிரை அச்சுறுத்துகின்ற காட்டாட்சியாக இந்த ஆட்சி நடக்கிறது. முதல்வர் குடும்பத்தை தவிர யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவுவதாக நான் தொடந்து சொல்லி வருகிறேன். நாம் உயிரோடு இருக்கும் போதே நரகத்தை அனுபவிக்கின்ற ஆட்சியாக நடக்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

2021ல் ஜெயலலிதாவின் பிள்ளைகள் பிரிந்து கிடந்த காரணத்தினால் விபத்துபோல் இந்த ஆட்சி அமைந்து விட்டது. எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு அவரது தொண்டர்கள் பிரிந்து கிடந்ததால் திமுக ஆட்சிக்கு வந்தது. அப்போது இந்திய இறையான்மைக்கு எதிராக செயல்பட்டதால் அந்த ஆட்சி இரண்டு ஆண்டுகளில் தூக்கி எரியப்பட்டது. மீண்டும் ஒரே கட்சியாக இணைந்த பிறகு 1991ல் அதிமுக ஆட்சி அமைந்தது. இன்றைக்கு காலம் திரும்பியிருக்கிறது. ஜெயலலிதாவின் பிள்ளைகள் கருத்து வேறுபாடுகளால் பிரிந்து கிடந்ததால் திமுக ஆட்சிக்கு வந்தது. எம்.ஜி.ஆர் திமுக-வை தீயசக்தி என்று சொன்னது, 50 ஆண்டுகளை கடந்தும் அதை உண்மை என்று நிரூபித்து கொண்டிருக்கின்றனர்.

இரண்டு வயது பச்சிளம் குழந்தைகளுக்கு திமுக-வைச் சேர்ந்தவர் பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்திருக்கிறார். இவர்களின் செயலால் தமிழ்நாடு வேதனையில் உள்ளது. பள்ளி செல்லும் சிறுமிகள், கல்லூரி மாணவிகள், வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், மூதாட்டிகள் கூட பாலியல் கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்படுகின்றனர். வீட்டில் யாரும் தனியாக இருக்க முடியவில்லை. காவலர்கள் கஞ்சா போன்ற போதை பொருள்கள் விற்பனை செய்யக்கூடிய வகையில் திமுக ஆட்சி இருக்கிறது.

இது போன்ற கொடுமைகளை கேள்விப்பட்டதே இல்லை. திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான ஆட்சியாக இருக்கும். ஜெயலலிதா மீது பொய் பிரசாரம் செய்து திமுக ஆட்சி அமைக்கும். ஆனால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் திமுக ஆட்சியை தூக்கியெறிவர்கள். இன்றைக்கு அதே நிலை நீடிக்கிறது. மகளிர் உரிமை தொகை கொடுப்பதால் தமிழ்நாட்டு பெண்கள் எங்கள் பக்கம் என்று முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் சிறிதும் கூச்சமின்றி பெருமை படுகின்றனர். ஆனால் பெண்கள் மனம் கொதித்திருக்கின்றனர்.

பெட்டி கடைகளில் கூட கஞ்சா, ஹெராயின் போன்ற போதை பொருள்கள் மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து விற்கப்படுகின்றன. திமுகவினர் ஆட்சியில் இருந்தால் போதும், தமிழ்நாட்டை கொள்ளையடிக்க வேண்டும் என்பது தான் அவர்களின் எண்ணம். இன்றைக்கு ஊழல் இல்லாத துறைகளே இல்லை. ஊழல் குற்றச்சாட்டுகள், வழக்குகள் பாய்கின்ற சூழலில் அமைச்சர்கள் சிறை செல்கிற பயத்தில் இருக்கின்றனர். திருச்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவர், வேலை வாய்ப்பு, டிரான்ஸ்ஃபர் என அனைத்திலும் ஊழல் செய்துள்ளார். கிட்டத்தட்ட ரூ.2,500 கோடி ஊழலை அமலாக்கதுறை கண்டுபிடித்து முதலமைச்சருக்கு அனுப்பி வழக்கு பதிய சொன்னால் மெளனம் காக்கின்றனர். அந்த 2,500 கோடி ஊழல் பணம் எங்கு சென்றது என தெரியும்.

தஞ்சாவூர் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் தினகரன்

திருச்சியில் பிரதமர் மோடி எங்கும், எதிலும் ஊழல் நடக்கிறது என்றார். பல ஆயிரம் கோடி ஊழல் பணம் ஒரு குடும்பத்தை நோக்கி செல்கிறது. கைத்தடிகளாக, அடியாட்களாக திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ரூ.5,000 கொடுத்து கூலிப்படைகளை வைத்து கொலை செய்து விடலாம் என்கிற நிலையில், யாருடைய உயிருக்கும் பாதுகாப்பும் இல்லை. அந்த அளவிற்கு தமிழ்நாடு மோசமாகி விட்டது. 1,000 கொடுத்து பெண்களை சரிகட்டி விட்டதாக நினைக்கிறார்கள். ஆனால் பெண்கள் வரும் தேர்தலில் ஜெயலலிதா ஆட்சி இருந்தால் தான் தலை நிமிர முடியும் என நினைக்கிறார்கள்.

ஒரு சில மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் பா.ஜ.க கூட்டணி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறது. சிறுபான்மையின மக்களுக்கு எதிரான கட்சி பா.ஜ.க என பொய் பிரசாரங்களைச் செய்கின்றனர். இந்தியாவில் தான் இஸ்லாமியர்கள் இஃப்தார் நோன்பு நடத்தி, நிம்மதியாக ரமலான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இலங்கையில் நம் தொப்புள் கொடி உறவுகள் கொல்லப்பட்ட போது சோனியா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அதன் கூட்டணியில் திமுக இருந்தது. தன் குடும்பம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக கண்டு காணாமல் திமுக-வினர் ஆட்சியில் இருந்தனர்.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

பாஜக ஆளும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. போதை பொருள்கள் விற்பனையின் சந்தையாக தமிழ்நாடு மாறிவிட்டது. இதன் பின்னணியில் திமுக-வினர் உள்ளனர். எங்கு, என்ன சட்டவிரோத செயல்கள் நடந்தாலும் அதில் திமுக-வினரின் பெயர் அடிபடுகிறது. முதல்வர் ஸ்டாலினிடம் தான் காவல்துறை இருக்கிறது. ஆனால் அதை கட்டுப்படுத்த தவறிய ஸ்டாலின் ஆட்சியில் இருக்கிறார், இது தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லதில்லை. மே 4ம் தேதி வரை ஸ்டாலின் ஆட்சியை விட்டு இறங்க மாட்டார். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றாக சேர்ந்து திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவார்கள் என்பது உண்மை” என்றார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *