ஓர் இடைத்தேர்தலில் வழக்கமாக என்னவெல்லாம் நடக்கும்? அந்த நேரத்து ஆளும் கட்சி எதுவோ, அதன் கை ஓங்கி இருக்கும். எங்கு திரும்பினாலும் கொடிகளும் தோரணங்களுமாக பிரசாரம் அனல் பறக்கும். அணி வகுக்கும் வாகனங்கள் அந்தத் தொகுதி மக்களை மலைக்க வைக்கும். பணம் பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் விநியோகம் தூள் பறக்கும். எதிர்க்கட்சி வேட்பாளருக்கும், ஆளும் கட்சி வேட்பாளருக்கு நிகராக செல்வாக்கும் பொருளாதார பலமும் இருந்தால், அவரது பிரசாரமும் அதே பாணியில் ‘டஃப்’ கொடுப்பதாக இருக்கும்.
அதே சமயம், ஒரு சுயேட்சை வேட்பாளரால் இவற்றையெல்லாம் நிகழ்த்திக் காட்ட முடியுமா என்றால், அது பெரும்பாலும் சாத்தியமில்லாததாகத்தான் இருக்கும். ஆனால், 2017 டிசம்பரில் நடைபெற்ற சென்னை, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஒரு சுயேட்சை வேட்பாளரின் பிரசாரம் இவற்றையெல்லாம் தூக்கி சாப்பிடுவதாக இருந்தது. அந்த வேட்பாளர் டி.டி.வி. தினகரன். ஆம், இன்றைய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் தினகரனேதான். அதுவரை சட்டசபை தேர்தல் எதிலும் போட்டியிடாத தினகரன், தனது முதல் சட்டசபை தேர்தலிலேயே, அபார வெற்றி பெற்றது மட்டுமல்லாது, தேர்தல் பிரசாரம் சார்ந்த சில சர்ச்சைகளிலும் குற்றச்சாற்றுகளிலும் சிக்கி, தேர்தல் ஆணையம் தலையிடும் அளவுக்கு பேசுபொருளானார்.
என்ன நடந்தது?
போயஸ்தோட்ட அதிகார மையத்தின் செல்லப்பிள்ளையாக வலம்வந்த தினகரன் இடைத்தேர்தலில் போட்டியிட்டது ஏன்? அதிமுகவிலிருந்து அவர் வெளியேற்றப்பட என்ன காரணம்? ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தினகரனுக்கு எதிராக அதிமுகவினர் தீவிரமாக களமாடும் அளவுக்கு கசப்புணர்வு வெடித்துக் கிளம்பியது ஏன்? எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள 1990-களின் இறுதியில் இருந்து பயணிக்கலாம்.

சசிகலாவின் சகோதரி வனிதாமணி – விவேகானந்தன் தம்பதியின் மூத்த மகன்தான் டி.டி.வி. தினகரன். இரண்டாவது மகன் பாஸ்கரன், மூன்றாவது மகன் சுதாகரன். 1987 டிசம்பரில், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ஆரின் மறைவுக்குப் பின், ஜெயலலிதாவுக்கு அதிமுகவில் இருந்த அவரது அரசியல் எதிரிகளால் பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டபோது, அவரது தோழியான சசிகலா, மன்னார்குடியில் உள்ள தனது உறவினர்களை சென்னைக்கு வரவழைத்து, ஜெயலலிதாவைப் பாதுகாக்கத் தொடங்கினார்.
அப்படித்தான் தினகரன் சகோதரர்கள் 1990-களின் தொடக்கத்தில் போய்ஸ் கார்டனுக்குள் நுழைந்தனர் (சுதாகரன், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக தத்தெடுக்கப்பட்டவர். இவருக்கு நடைபெற்ற ஆடம்பர திருமணம்தான், 1996 தேர்தலில் அதிமுகவின் பெரும் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாக பேசப்பட்டது).
தினகரன், ஜெயலலிதாவின் அரசியல் பிரசாரங்களைக் கவனித்துக்கொண்டதோடு, அவரது பயணங்களிலும் உடன் சென்று, கட்சி விவகாரங்களையும் பார்த்துக் கொண்டார். இதனால், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர்களில் ஒருவராக மாறிய தினகரன், போயஸ் தோட்டத்தின் செல்லப்பிள்ளையாகவும் வலம்வந்தார்.
1999-ஆம் ஆண்டின் மத்தியில், நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பினார் தினகரன். சசிகலாவிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்தார். அவருக்கு பெரியகுளத்தில் போட்டியிட சீட் வாங்கிக்கொடுத்தார் சசிகலா. அதனைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரனை பெரியகுளம் வேட்பாளராக அறிவித்தார் ஜெயலலிதா. சீட் கிடைத்துவிட்டது, வெற்றி பெற்று காட்ட வேண்டுமே..? பெரியகுளம் புறப்பட்டார் தினகரன். போயஸ் தோட்டத்தின் செல்லப்பிள்ளை அல்லவா? தினகரனின் குட்புக்கில் இடம்பெற்றுவிட வேண்டும் எனக் கட்சி நிர்வாகிகள் போட்டிப்போட்டுக்கொண்டு, தினகரன் தொகுதிக்குள் காலடி எடுத்துவைத்ததும் பிரம்மாண்டமான வரவேற்பு அளித்து அசத்தினர்.

வெற்றிக்கு உதவிய ஓ.பி.எஸ்
பெரியகுளத்தில் முகாமிட்ட தினகரனை, கட்சிக்காரர்கள் தினமும் வந்து சந்தித்து, வணக்கம் வைத்து, தங்களது விசுவாசத்தை வெளிப்படுத்தினர். இவர்களில், அப்போது கட்சியில் சாதாரண பதவியில் இருந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஒருவர். தனது தம்பி ராஜாவின் வீட்டிலேயே தினகரனைத் தங்கவைத்து, குனிந்து, வளைந்து பன்னீர்செல்வம் காட்டிய பவ்யமும் உபசரிப்புகளும் தினகரனுக்கு ரொம்பவே பிடித்துப்போக, தனக்கான தேர்தல் பிரசாரத்துக்கான வரவு செலவுகளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை அவரிடம் வழங்கினார்.
ஆனால், பன்னீர் அந்த வேலைகளை மட்டும் பார்க்கவில்லை. இருக்கின்ற வேலைகளை எல்லாம் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தார். வாக்காளர்களுக்கான ‘கவனிப்பு’ ஒருபுறம் இருக்க, எதிர்தரப்பு நிர்வாகிகளையும் வளைத்து, அவர்களது தேர்தல் வேலைகளையும் பிரசாரத்தையும் ‘ஆஃப்’ செய்வதற்கான வேலைகளையும் கச்சிதமாக செய்து, ‘ஆக்டிவ்’ புள்ளிகளை அமைதியாக்கினார். பன்னீரின் இந்த சூட்சுமங்கள் பக்காவாக ‘ஒர்க் அவுட்’ ஆனது. அப்புறமென்ன… அந்தத் தேர்தலில் 3 லட்சத்து 3,881 வாக்குகளைப் பெற்று, 45,806 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் தினகரன். இந்த வெற்றி , அவரை டெல்லி பக்கம் செல்வாக்கை வளர்த்துக்கொள்ள உதவியது. ஆனால், 2004 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்ட தினகரனுக்கு தோல்வியே கிடைத்த நிலையில், அவர் மாநிலங்களவை உறுப்பினரானார்.

இந்த நிலையில், 19.12.2011 அன்று, டி.டி.வி. தினகரனை அதிமுகவிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா. அது மட்டுமல்ல, சசிகலா உள்ளிட்ட அவரது குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் போயஸ்தோட்டத்திலிருந்தே வெளியேற்றினார். சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் தலையீடு அதிமுகவில் அதிகரித்துவிட்டதாகவும், ஜெயலலிதாவே சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் பொதுவெளியிலும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் குற்றச்சாற்றுகள் எழுந்தன. இதனையடுத்து, தான் யார் கட்டுப்பாட்டுக்குள்ளும் இல்லை என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாகவே எழுந்த குற்றச்சாற்றுகளைத் தொடர்ந்தே ஜெயலலிதா இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அப்போது சொல்லப்பட்டது. ஆனாலும், 2012 ல் சசிகலாவை போயஸ் தோட்டத்துக்குள் மீண்டும் சேர்த்துக்கொண்டார். அதே சமயம் தினகரன் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

2016 செப்டம்பர் 22 அன்று ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தினகரன் உள்ளிட்ட சசிகலா உறவினர்கள் மீண்டும் போயஸ் தோட்டத்துக்குள் வரத்தொடங்கினர்.
டிசம்பர் 5-ஆம் நாள், ஜெயலலிதா மரணமடைந்த நிலையில், அதிமுக, சசிகலா குடும்பத்தினரின் கைகளுக்குச் செல்கிறது. சசிகலா அதிமுக பொதுச்செயலாளரானார். அப்புறமென்ன… தினகரனும் அதிமுகவில் மீண்டும் சேர்க்கப்பட்டு, 2017, பிப்ரவரி 15 அன்று கட்சியின் துணை பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார். அப்போதே கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் இதுகுறித்து அதிருப்தி எழுந்தது. இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பின்னர், அதிமுகவில் எழுந்த அதிகார சண்டையால் கட்சி இரண்டாக பிளவுபட்டது. சசிகலா குடும்பத்தினரின் பிடியில் இருந்து விடுபட விரும்பிய மூத்த தலைவர்களின் முடிவு காரணமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் தினகரன்.
இந்த நிலையில்தான், ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அவர் போட்டியிட்டு வென்ற சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கு 2017 ஏப்ரல் 12-ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. சுயேட்சையாக களமிறங்கினார் தினகரன். பிளவு கண்ட அதிமுக-வின் இரு அணிகள், எதிர்க்கட்சியான திமுக, ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபா, பாஜக சார்பில் கங்கை அமரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சி என சுமார் 62 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
பல்முனைப் போட்டி என்பதால், பிரசாரம் அமளிதுமளிப்பட்டது. பணப்பட்டுவாடாக்களுக்கும் பரிசுப் பொருட்கள் விநியோகத்துக்கும் பஞ்சமில்லை. இதில், தினகரன் கை ஓங்கி காணப்பட்டது. இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு அரசியல் கட்சிகளும் முறையிட்டு, புகார் மனுக்கள் அளித்தன. இந்த நிலையில், வாக்குக்கு பணம் அளித்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில், தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். தினகரன் எம்.எல்.ஏ-வாக வருவதை டெல்லி பாஜக மேலிடம் விரும்பவில்லை என்கிற பின்னணியும் தேர்தல் ரத்துக்கு இன்னொரு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது.
பின்னர் ஒருவழியாக டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்ற நிலையில், குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரனே வெற்றி பெற்றார். பலரும் அதை ஒரு சாத்தியமற்ற முயற்சியாகவே பார்த்தனர். ஏனெனில் ஜெயலலிதாவின் மரணத்துக்கு சசிகலா குடும்பத்தினர் மீது விழுந்த பழி, கட்சிச் சின்னம் இல்லாத நிலை, ஜெயலலிதாவுக்கு புனிதமாகக் கருதப்பட்ட தொகுதியில், ஆளும் கட்சியின் அனுபவமிக்க அரசு இயந்திரத்துக்கு எதிரான போட்டி போன்ற பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் தினகரன் இந்த வெற்றியைப் பெற்றார். சசிகலாவுக்கு விசுவாசமான ஒரு பிரிவினரின் ஆதரவு மற்றும் அள்ளி இறைக்கப்பட்ட வைட்டமின்கள் போன்றவை வெற்றிக்கு பெருமளவில் கைகொடுத்தன.

ஆச்சரியங்களை அள்ளித்தந்த தேர்தல் முடிவு
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. அந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜெயலலிதாவைவிட கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார் தினகரன்.
2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா 97,218 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழனை, 39,545 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தார். ஆனால், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் பெற்ற வாக்குகள் 89,013. இரண்டாவது இடத்தைப் பிடித்த அதிமுக வேட்பாளர் மதுசூதனனை 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வியப்பில் ஆழ்த்தினார். மொத்தம் 19 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், தபால் வாக்கு எண்ணிக்கையைத் தவிர, அனைத்து சுற்றுகளிலும் தினகரனே முன்னிலை வகித்தார்.
இதைவிட இன்னொரு ஆச்சரியமான முடிவு என்னவென்றால், திமுக வேட்பாளர் மருது கணேஷ், வெறும் 24,651 வாக்குகள் மட்டுமே பெற்று, டெபாசிட் இழந்ததுதான். இந்தத் தேர்தலில், மருது கணேஷ் உட்பட 57 வேட்பாளர்கள் டெபாசிட்டைப் பறிகொடுத்தனர். அதேபோன்று, பாஜகவுக்கு நோட்டாவைவிட குறைந்த வாக்குகளே, அதாவது 1,417 வாக்குகளே கிடைத்தன. நோட்டா பெற்ற வாக்குகள் 2,373.
இவை தவிர, 11 ஆண்டுகளுக்குப் பின் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற நிகழ்வும் அரங்கேறி இருந்தது. அதற்கு முன்னர், 2006-ஆம் ஆண்டு தளி சட்டமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட ராமச்சந்திரன் வெற்றி பெற்றிருந்தார்.
இப்படி, தான் போட்டியிட்ட முதல் சட்டமன்ற தேர்தலில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி, அதிரடிகளையும் ஆச்சரியங்களையும் நிகழ்த்திக் காட்டிய டி.டி.வி. தினகரன், பின்னர் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் ( அமமுக) கட்சியைத் தொடங்கினார். 2021 சட்டமன்ற தேர்தலிலும் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும், தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்குகளைப் பிரித்து, அக்கட்சியின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்த அமமுகவிலிருந்து, தற்போது அதன் தொடக்க கால முன்னணி நிர்வாகிகள் பலரும் வெளியேறிவிட்டனர். தற்போது ஆல் இன் ஆல் அழகுராஜாவாக தினகரன் மட்டுமே வாள் வீசிக்கொண்டிருக்கிறார்.
இந்த முறை அவர், பல முறை துரோகி என சொன்ன எடப்பாடி பழனிசாமியுடனே கூட்டணி வைத்திருக்கிறார். இனி என்ன நடக்கும் என்பதை மக்கள் தான் சொல்வார்கள். !
( தொடரும் )
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
