திமுகவில் ஓ.பி.எஸ்!
அதிமுக ஆட்சியில் மூன்று முறை முதல்வர், ஒரு முறை துணை முதல்வர், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் ஓ.பன்னீர் செல்வம்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இ.பி.எஸ் அணி, ஓ.பி.எஸ் அணி என அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டது. பின் அனைவரும் கலந்து பேசி இருவரையும் ஒரே அணிக்குக் கொண்டு வந்து ஓ.பி.எஸ்-க்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. ஆட்சி அதிகாரம் போன பின் இரண்டு தரப்புக்கும் ஏற்பட்ட மன மாச்சர்யங்களால் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டார். ஒருகட்டத்தில் அவரை கட்சியிலிருந்தே நீக்கப்பட்ட சம்பவங்களும் அரங்கேறின.

அதிமுக-வை மீட்கப் போராடுவேன் என்று சட்டப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தார் ஓ.பி.எஸ். இந்த சூழலில் அவருடன் இருந்த வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் உள்ளிட்ட ஆதரவாளர்கள் ஒருவர் பின் ஒருவராக திமுகவில் இணைந்தனர்.
இந்த நிலையில் கடைசி சட்டமன்ற கூட்டத்தொடரில் அவருடன் இருந்த கடைசி ஆதரவாளரான உசிலம்பட்டி அய்யப்பன் முதல்வர் ஸ்டாலினை ஏகத்துக்கும் புகழ்ந்து பேசியிருந்தார். தொடர்ந்து ஓ.பி.எஸ் திமுகவில் இணைய உள்ளதாகச் செய்திகள் கசிந்த நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அறிவாலயத்தில் தன்னை திமுகவில் இணைத்திருக்கிறார் ஓ.பி.எஸ்.
வருத்தத்தில் தங்க தமிழ்செல்வன்?
ஓ.பி.எஸ் திமுகவுக்குக் கூடுதல் பலமாகக் கருதுகிறது திமுக தலைமை. கூடுதலாக, அவரது வருகையால் தேவர் சமுதாய வாக்குகள் திமுக கூட்டணிக்கு அதிகளவில் வந்து சேரும் என்று கணக்குப் போடுகிறது திமுக. திமுக தலைமையின் எண்ணம் இப்படியிருக்க, ஓ.பி.எஸ் பகுதியைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் கடும் வருத்தத்தில் இருப்பதாக கிசு கிசுகிறார்கள் தேனி மாவட்ட உடன் பிறப்புகள்.
இந்த விவகாரம் குறித்து லோக்கல் உடன் பிறப்புகள் சிலரிடம் பேசினோம். “தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைவதற்கு முன்பாக அமமுக-வில் இருக்கும்போது ‘ஓ.பி.எஸ் நடத்திய “தர்மயுத்தம்” உண்மையான போராட்டம் அல்ல, அரசியல் நாடகம் மட்டுமே. ஓ.பி.எஸ் தனிப்பட்ட அரசியல் லாபத்திற்காகக் கட்சியைப் பயன்படுத்தினார்’ என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

இன்னும் சொல்லப்போனால், ஜெயலலிதாவின் மறைவில் அவரது அரசியல் லாபத்துக்காக உண்மையை மறைந்தவர் ஓ.பி.எஸ் என்று கடுமையாகச் சாடியிருந்தார். காரணம் தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவிலிருந்த சமயத்தில் அவரை வளரவிடாமல் முட்டுக்கட்டை போட்டவர் ஓ.பி.எஸ்.
அந்த கடுப்பில் தான் அதிமுகவிலிருந்து அமமுக, அடுத்ததாக திமுக என்று கட்சி மாறி வந்தார். யாரை எதிர்த்து இதுவரை அரசியல் செய்துகொண்டிருந்தாரோ, இப்போது அவரே திமுகவுக்கு வந்திருப்பது தங்க தமிழ்செல்வனுக்குத் தலைவலியாக மாறும் என்கிறார்கள். காரணம், ஏற்கனவே தேனி மாவட்ட திமுகவில் அவருக்கும் லோக்கல் நிர்வாகிகளுக்கும் பல்வேறு முரண்பாடுகள் இப்போதும் நீடிக்கிறது.
சமீபத்தில் ஆண்டிபட்டி எம்.எம்.ஏ மகாராஜனும், தங்க தமிழ்ச்செல்வனும் மேடையிலேயே ஒருமையில் பேசி சண்டை போட்டுக்கொண்ட சம்பவங்களை எல்லாம் பார்த்திருப்பீர்கள். மேடையிலேயே இந்த நிலை என்றால் திரைமறைவில் நடப்பதையெல்லாம் தனியாகச் சொல்லவேண்டிய தேவையில்லை.
ஏற்கனவே மாவட்டச் செயலாளராக இருந்தும் கட்சி நிர்வாகிகளுடன் இணக்கமில்லாத சூழலில் தத்தளிக்கும் தமிழ்ச்செல்வனுக்கு ஓர் பெரிய பவர் செண்டர் அவர் பகுதியிலிருந்து கட்சிக்குள் புதிதாக வந்திருப்பதைக் கொஞ்சமும் ரசிக்கவில்லை.
ஓ.பி.எஸ்-யை தாண்டி அவரது இரண்டு மகன்களின் தலையீட்டையும் கூடுதலாகச் சமாளிக்கவேண்டிய நிலையம் இருக்கிறது. இந்த நிலையில் தான் வரும் தேர்தலில் ஓ.பி.எஸ்-காக இருவரும் ஒன்றாக இணைந்து வேலைபார்க்க வேண்டிய நிலை ஏற்படும்.

வெவ்வேறு துருவங்களாக இருந்த இவர்கள் ஒரே கோட்டில் இணைந்து பயணிப்பது கொஞ்சம் சிரமம் தான். அதிலும் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் அந்த இணக்கம் அவ்வளவு எளிதாக வந்துவிடாது. அதிமுகவிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த ஓ.பி.எஸ் திமுகவில் இணைந்திருப்பதும், அவருக்கும் அவரது மகன் உட்பட ஆதரவாளர்களுக்குப் பதவி, சீட் வழங்கப் பேச்சுவார்த்தை நடைபெறுவது ஓ.பி.எஸ்-க்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், ஓ.பி.எஸ் திமுகவில் இணைந்திருப்பது தேனி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக தேனி வடக்கு மாவட்டச் செயலாளருமான தங்க தமிழ்ச்செல்வனுக்கு கடும் மன உளைச்சலையே கொடுத்திருக்கிறது. கண்டிப்பாக வரும் தேர்தலில் பல கடமுடா காட்சிகளைத் தேனிக்குள் பார்க்கலாம்” என்றார்கள் விரிவாக.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
