பாஜகவால் அதிகம் பாதிப்படைவது நானும், பினராயி விஜயனும்தான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப்ரல் 2-ஆம் தேதி தொடங்கி 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று காலை மேற்கு வங்க மாநில மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் பிமன் பாசு கொடியேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து இன்று நடைபெற்றுவரும் மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாட்டில் கேரள முதல்வா் பினராயி விஜயன், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், கா்நாடக மாநில வருவாய்த் துறை அமைச்சா் கிருஷ்ண பைரே கௌடா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒருங்கிணைப்பாளா் பிரகாஷ் காரத், மத்தியக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டம் இன்று மதுரையில் நடைபெறுகிறது. மதுரை மாநகரத்தை தூங்காநகரம் என்று அழைப்பதுண்டு. தற்போது தூங்காநகரம் சிவப்பு நகரமாக மாறியிருக்கிறது. எங்கும் சிவப்பாக இருக்கிறது. திமுக கொடியிலும் பாதி சிவப்பு இருக்கிறது. எங்களில் பாதி நீங்கள்.
தன்னை ஒரு கம்யூனிஸ்டாக காட்டிக்கொண்டவர் கருணாநிதி. சென்னையில் விரைவில் கார்ல் மார்க் சிலை நிறுவப்பட இருக்கிறது என்று பேரவையில் பேசிவிட்டு தற்போது உங்கள் முன்னாள் நின்று கொண்டிருக்கிறேன் நான். இந்தக் கொள்கை உறவோடு எல்லாத்தையும் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும். மாற்றத்தை நோக்கி நாம் நகர வேண்டும்.
2019 ஆம் ஆண்டு முதல் இணைந்து பயணித்து வருகிறோம். தமிழ்நாட்டில் உள்ள இந்தக் கூட்டணியில் விரிசல் வராத என்று சில நினைத்துக் கொண்டிருக்கின்றனர். கூட்டாட்சி என்றாலே மத்திய அரசுக்கு அலர்ஜியாக இருக்கிறது. சீதாராம் யெச்சூரி பொதுவுடைமை சிந்தனைக்காக கடுமையாக போராடியவர்.
கூட்டாட்சி கோட்பாடே தமிழகத்தின் வலிமை. கூட்டாட்சி என்ற சொல்லே மத்திய ஆட்சியாளர்களுக்கு அலர்ஜி ஆகிவிட்டது. பினராயி விஜயன் என்னை சகோதரர் என்று கூறினார். ஆம், அவர் எனக்கு மூத்த சகோதரர்தான்.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் முழுநேர அரசியல்வாதியாக செயல்பட வைக்கிறார்கள். மாநிலங்களே இருக்க கூடாது என நினைக்கிறார்கள். வக்ஃப் சட்டத்தை நள்ளிரவில் நிறைவேற்றி உள்ளார்கள். கூட்டாட்சி தத்துவத்தை தொகுதி மறுசீரமைப்பு மூலம் சிதைக்க நினைக்கிறார்கள். மத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டும்தான் இந்தியாவில் சுயாட்சி காப்பாற்றப்படும். பாஜகவால் அதிகம் பாதிப்படைவது நானும், பினராயி விஜயனும்தான்.
மாநில சுயாட்சி என்பது எங்களின் முதன்மையான கொள்கை. மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி என்று கருணாநிதி கூறினார். மேலும், உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்றும் கூறினார். ஆனால், இதற்கு எதிராக மத்திய பாஜக அரசு இருக்கிறது.
மாநில மொழிகளை சிதைக்கக்கூடிய ஆட்சியாக பிரதமர் மோடியின் ஆட்சி இருக்கிறது. ஒற்றைத் தலைமை கொண்ட பாசிச ஆட்சியாக பாஜக ஆட்சி மாறியிருக்கிறது. ஒரேயொரு தனி மனிதரின் ஆட்சியாக மாறிக்கொண்டிருக்கிறது.
அவருக்கு கீழ் இருப்பவர்களுக்கு மட்டுமே அதிகாரம் இருக்கும். பாஜகவின் பாசிச ஆட்சியை கண்டிப்பாக வீழ்த்தியே ஆக வேண்டும். மத்தியில் பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தால் மட்டுமே சுயாட்சியை காப்பாற்ற முடியும்” என்றார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI