Sorting by

×

மயிலாடுதுறை மாவட்டம், அரசு பெரியார் தலைமை மருத்துவமனைக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அனைத்து பேரூராட்சி, நகராட்சி மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் உயர்மட்ட சிகிசைக்கு பரிந்துரைத்து அனுப்புவது, தலைமை மருத்துவமனைக்கு மட்டுமே. மயிலாடுதுறை மக்களின் முக்கிய மருத்துவ ஆதாரமாக விளங்குவதும் இந்த தலைமை மருத்துவமனை தான்.

ஆனால் அந்த மருத்துவமனைக்கு வெளியே பேருந்து நிறுத்தத்தில், பயணிகள் காத்திருப்பு நிழற்குடை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. தரை பெயர்ந்து அங்கு நிற்கவே முடியாத அளவுக்கு அசௌகர்ய நிலையை ஏற்படுத்துகிறது. மேலும் பயணிகள் அமர்வதற்கு ஏதுவாக இருக்கைகளும் இந்தப் பேருந்து நிறுத்தத்தில் இல்லாதது, பெரும் குறையாக இருக்கிறது!

இது குறித்து அங்கிருந்த மக்களிடம் பேசியபோது, ” நாங்களே உடம்பு முடியலன்னுதான் ஆஸ்பத்திரி வர்றோம். இங்க வரிசையில நிக்க முடியாம, நின்னு காமிச்சிட்டு வர்றோம். அப்படி காமிச்சிட்டு பஸ் ஏற வந்தா, அந்த பஸ் ஸ்டாப்ல உக்காரவே முடியாது. எவ்வளவு நேரமானாலும் நின்னுக்கிட்டுதான் இருக்கணும்.

அடிக்கிற வெயில்லகூட நாங்க நின்னுக்கிட்டு தான் இருப்போம். ஏன்னா அந்த பஸ் ஸ்டாப்புக்குள்ள போயி நிக்கக்கூட முடியாது. அந்த அளவு போட்டுக் இருக்குற டைல்ஸ் எல்லாம் உடைஞ்சு காலுலாம் கிழிக்கிற மாறி இருக்கு. நாங்க மட்டும் இல்ல, மாசமா இருக்குறவங்க, குழந்தை வச்சி இருக்குறவங்க, கை கால் முடியாதவங்கன்னு இப்படி உடம்பு முடியாத எல்லாருமே மணிக்கணக்குல கால் கடுக்க நின்னுதான் பஸ் ஏற வேண்டியதா இருக்கு.

அதுலயும் சிலரு நின்னு நின்னு பாப்பாங்க, கால் வலி தாங்க முடியாம அப்படியே படியிலே உக்காந்துருவாங்க. வயசானவங்க எப்படி இருந்தாலும் பரவாயில்லன்னு அதுலேயே படுத்தும் இருப்பாங்க. அத பாக்கவே ரொம்ப கொடுமையா இருக்கும். நாங்களும் ஒவ்வொரு முறையும் ஆஸ்பத்திரி வரும்போதெல்லாம் இந்த பஸ் ஸ்டாப் சரி பண்ணி இருப்பாங்கன்னுதான் நெனச்சிட்டு வருவோமே.

ஆனா, வந்து பாத்தாதான் தெரியுது, நாளுக்கு நாள் மோசமா தான் ஆகுதுன்னு. நோயாளிகளுக்கு இன்னும் கூடுதல் சிரமம் ஏற்படுத்துற மாதிரி, பஸ்ஸையெல்லாம் ஆஸ்பத்திரிக்கு கொஞ்சம் தூரம் முன்னாடியே நிறுத்திடுறாங்க. அதனால அங்க இருந்து வேற, ஆஸ்பத்திரிக்கு நடந்து போக வேண்டியிருக்கு.

ஆஸ்பத்திரிக்கு ஒட்டியிருக்குற இந்த பஸ் ஸ்டாப்’ல நிறுத்துனா ரொம்பா உதவியா இருக்கும். இங்க பக்கத்துலதான் எம்.எல்.ஏ வீடும் இருக்கு. அவரும் தினமும் இந்த வழியாதான் வருவாரு… போவாரு. ஆனாலும் அவருக்கும் இந்த பஸ் ஸ்டாப்-பை சீரமைக்கணுங்கிற எண்ணமே இல்லைபோல. உடல்நலம் நல்லா இருக்குறவங்களா ஆஸ்பத்திரிக்கு வரப் போறாங்க? எல்லாருமே உடல்ல ஏதோ பிரச்னைன்னு தான் முடியாம வர்றாங்க. அதனால சம்பந்தப்பட்ட அதிகாரிங்க இந்த பஸ் ஸ்டாப்பை உடனடியா சீரமைச்சுக் கொடுக்கணும். பஸ்ஸும் இங்க ஆஸ்பத்திரி நிறுத்தத்துலயே சரியா நிற்கணும். இதுதான் எங்களோட கோரிக்கை” என்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரர் நம்மிடம் பேசுகையில், “அரசுப் பெரியார் தலைமை மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு மூவாயிரம் பயனாளிகளும், ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் பயனாளிகளும் வந்து செல்கின்றனர்.

ஆனால், அங்குள்ள பேருந்து நிழற்குடை பயனாளிகள் அமர்வதற்கு ஏதுவாக இன்றி, மிகவும் மோசமான நிலையில் மூன்று மாதகாலமாக உள்ளது. பேருந்து ஏறும் பயனாளிக்கு மட்டுமன்றி, இரவு நேரத்தில் வீடற்றோர் தங்கிக்கொள்ளவும் செய்தனர். இப்போது அவர்களும் பெரும் பரிதவிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர்.

அரசு அதிகாரிகள் இவ்வழியே செல்லும் போதெல்லாம் கண்டும் காணாமல் கண்மூடிக்கொண்டு செல்கின்றனர். அரசு விரைந்து சீர்செய்யும் நடைமுறையை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

இது குறித்து, மயிலாடுதுறை நகராட்சி ஆணையரைத் தொடர்பு கொண்டு பேச முயன்றோம். ஆனால் அவர் நம்முடைய அழைப்பை ஏற்கவில்லை.

நோயாளிகளின் சிரமத்தைக் கருத்தில்கொண்டு, அதிகாரிகள் அந்தப் பேருந்து நிறுத்தத்தைச் சீரமைத்து, பேருந்துகள் சரியாக அங்கு நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *