மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாத உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் நேற்று எட்டாவது நாளாக மாற்று திறனாளிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.
அறவழியில் போராட்டம் நடத்திய 800-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்து, மாலை ஆன பிறகும் விடுவிக்காமல் பேருந்துகளில் ஏற்றி சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று இரவு முழுவதும் அலைக்கழித்திருக்கின்றனர்.
தமிழ்நாடு அரசின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வாழ்வாதார உரிமை கோரி போராடிய மாற்றுத்திறனாளிகள் மீது காவல்துறையினர் மனிதநேயமின்றி அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் 75 விழுக்காட்டுக்கும் கீழ் மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு மாதம் ரூ.1,500, 75 விழுக்காட்டுக்கும் கூடுதலான மாற்றுத் திறன் கொண்டவர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வீதம் அரசின் சார்பில் உதவித் தொகை வழங்கப்பட்டுவருகிறது.
விலைவாசியும், வாழ்வாதாரச் செலவுகளும் கடுமையாக அதிகரித்து விட்ட நிலையில் தங்களுக்கான உதவித் தொகையை மாதம் ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 10-ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் அவர்கள் கைது செய்யப்படுவதும், மாலையில் விடுவிக்கப்படுவதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.
எட்டாவது நாளாக மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தும் போதிலும், அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்த முன்வராத திமுக அரசு, அவர்களை கைது செய்து கொடுமைப்படுத்துவதன் மூலம் அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என்று நம்புமானால் அது எந்த அளவுக்கு பாசிசத்தில் ஊறியிருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

மாற்றுத் திறனாளிகளின் காவலன் திமுக தான் என்று மார்தட்டிக் கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஐந்தாண்டுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு செய்ததெல்லாம் துரோகம் மட்டும் தான். தமிழக அரசுத் துறைகளில் குறைந்தது 2 ஆண்டுகள் தற்காலிகப் பணியாளர்களாக மாற்றுத் திறனாளிகள் பணியாற்றி இருந்தால், அவர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் பணி நிலைப்பு வழங்க வகை செய்யும் இரு அரசாணைகளை அண்மையில் ரத்து செய்த திமுக அரசு, அவர்களும் போட்டித் தேர்வு எழுதி தான் அரசு பணியில் சேர முடியும் என்ற புதிய அரசாணையை பிறப்பித்துள்ளது. இப்போது உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரியவர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கை மிகவும் நியாயமானது. மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித் தொகையாக புதுச்சேரியில் ரூ.5,500 வரையிலும், தெலுங்கானாவில் ரூ.4,016, ஆந்திராவில் ரூ.15 ஆயிரம் வரையிலும், திரிபுரா மற்றும் தில்லியில் ரூ.5,000 வரையிலும் வழங்கப்படுகிறது.
ஆனால், தமிழகத்தில் மிக குறைவாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதே அளவிலான தொகையை தமிழகத்தில் வழங்க தடையில்லை. ஆனால், மாற்றுத் திறனாளிகள் மீது ஆட்சியாளர்களுக்கு மனிதநேயம் இல்லை என்பதால் அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகின்றனர்.

அடக்குமுறைகள் மூலம் உலகில் எதையும் சாதிக்க முடியாது. இதை உணர்ந்து கொண்டு மாற்றுத் திறனாளிகள் மீதான அடக்குமுறையை கைவிடுவதுடன், மாதம் ரூ.6000 உதவித் தொகை என்ற அவர்களின் கோரிக்கையையும் திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
