Sorting by

×

உடன்பிறப்புகளிடம் விருப்ப மனுக்களை வாங்கி முடித்திருக்கிறது அறிவாலயம். கருணாநிதி போட்டியிட்ட சென்னையின் ‘அண்ணா நகர்’ தொகுதியைப் பிடிக்க சபரீசனின் ஒப்புதலுடன் மாவட்டச் செயலாளர் சிற்றரசுவும் சிட்டிங் எம்.எல்.ஏ மோகனின் மகன் கார்த்திக்கும் முட்டி மோதுவதால் போட்டி சுவாரஸ்யமடைந்திருப்பதாக அறிவாலய வட்டாரத்தினர் கிசுகிசுக்கின்றனர்.

கார்த்திக்
கார்த்திக்

அண்ணா நகர் தொகுதியின் இப்போதைய எம்.எல்.ஏ எம்.கே.மோகன். 2016 இல் அதிமுகவின் கோகுல இந்திராவை 1687 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார். 2021லும் கோகுல இந்திராவை 27445 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார்.

2026 தேர்தலிலும் ‘அண்ணா நகர்’ தொகுதியைக் குறிவைத்தே கோகுல இந்திரா வேலை செய்து வருகிறார். இந்நிலையில், திமுக முகாமில் அண்ணா நகர் தொகுதிக்கு வேட்பாளர் மாற்றம் இருக்கப்போகிறது என்கின்றனர். சிட்டிங் எம்.எல்.ஏ மோகன் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு போட்டியிட விருப்ப மனுவே தாக்கல் செய்யவில்லை என்கின்றனர்.

தனக்கு பதில் தன்னுடைய மகன் ‘அண்ணா நகர்’ கார்த்திக் தொகுதியில் போட்டியிட வேண்டுமென மோகன் விரும்புகிறார். ஐ.டி.விங்கின் மாநில துணைச் செயலாளராக இருக்கும் கார்த்திக் முதல்வரின் குடும்பத்துக்கு நெருக்கமானவர்.

சபரீசனுடன் கார்த்திக்
சபரீசனுடன் கார்த்திக்

குறிப்பாக, ‘மாப்பிள்ளை’ சபரீசனின் உற்றத் தோழன். தந்தையின் விருப்பப்படி களத்தில் இறங்கினால் சீட் உறுதி என்கிற எண்ணத்தில் கார்த்திக்கும் தொகுதியில் வேலையைத் தொடங்கிவிட்டார். தொகுதியில் ‘பட்டா’ இல்லாத இடங்களுக்கு பட்டா வாங்கிக் கொடுப்பது, பள்ளிகளைப் புனரமைப்பது, கோவில் திருப்பணிகள் எனத் தொகுதிக்குள் சுற்றி சுழன்று வேலை பார்க்கிறார்.

சமீபத்தில் பொங்கல் பரிசாக தொகுதியின் திமுக நிர்வாகிகளுக்கும் மக்களுக்கும் பைக், செல்போன், எர் கூலர், மிக்ஸி, கிரைண்டர், பாத்திர செட் என யாரையும் தவறவிடாமல் கொடுத்திருக்கிறார்.

தொகுதியை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று கொடுப்பேன் என்றும் கார்த்திக் பல இடங்களில் பேசி வருகிறார் கார்த்திக்.

குடியிருப்பு குடியிருப்பாக சென்று வாக்கும் சேகரித்து வருகிறார். சில நாள்களுக்கு முன்பு அறிவாலயத்தில் விருப்ப மனுவையும் தாக்கல் செய்திருந்தார். வலுவாகப் போட்டியளிக்க யாரும் இருக்க மாட்டார்கள் என்பதால் நம்பிக்கையோடு இருந்தார்.

ஆனால், விருப்ப மனு விநியோகம் முடிகிற கடைசி நாளில் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும் கவுன்சிலருமான சிற்றரசு அண்ணா நகருக்கு விருப்ப மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் என மூன்று தொகுதிகள் சிற்றரசுவின் கட்டுப்பாட்டில் வருகிறது.

சிற்றரசு
சிற்றரசு

சேப்பாக்கம் உதயநிதியுடைய தொகுதி, ஆயிரம் விளக்கு மருத்துவர் எழிலனின் தொகுதி மீதம் இருப்பது அண்ணா நகர் மட்டுமே. போட்டியிட விரும்பிய சிற்றரசு தயாநிதி மாறனின் ஆதரவோடு உதயநிதியின் ஒப்புதலோடு அண்ணா நகர் தொகுதிக்கு விருப்ப மனு தாக்கல் செய்துவிட்டார். சிற்றரசுவின் விருப்ப மனுவுக்கு சபரீசனும் க்ரீன் சிக்னல் காட்டியிருப்பதாக அவரின் ஆதரவாளர்கள் கிசுகிசுக்கின்றனர்.

சென்னையின் மத்தியில் முக்கிய தொகுதியாக திகழும் அண்ணா நகருக்கு முட்டிக் கொள்ளும் இருவருக்கும் மாப்பிள்ளையின் ஆதரவு இருப்பதால், அவர் யாரை டிக் அடித்து டிக்கெட் கொடுக்கப் போகிறார் என்பதை அறிய உடன்பிறப்புகள் பலரும் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *