Sorting by

×

மேற்குவங்கத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி 19 ஆண்டுகளுக்குப் பிறகு தனித்துப் போட்டியிட முடிவு செய்திருக்கிறது. 

காங்கிரஸ் கட்சியின் இந்த அதிரடி முடிவுக்கு காரணம் என்ன? இந்த முடிவு யாருக்கு சாதகமாக அமையும்? காங்கிரஸிற்கு இதனால் ஏற்படும் சிக்கல் என்ன? ஓர் அலசல்!

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மம்தாவின் தொடர் வெற்றி!

மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.

294 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் ஏப்ரலில் தேர்தல் நடக்க இருக்கிறது. தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று 15 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் மம்தா தனது நான்காவது வெற்றிக்காகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறங்கி இருக்கிறார். 

தனித்து களம் காணும் காங்கிரஸ்

மறுபக்கம் கடந்த 2021 தேர்தலில் 77 இடங்களை வென்று பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்த பாஜக, இந்த முறை ‘ Asali Poriborton’ (உண்மையான மாற்றம்) என்ற முழக்கத்துடன் ஆட்சியைப் பிடிக்கத் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

மேற்குவங்க அரசியலில் 34 ஆண்டுகள் அசைக்க முடியாத சக்தியாக இருந்த இடதுசாரிகள், கடந்த சில தேர்தல்களில் பெரும் பின்னடைவைச் சந்தித்து இருக்கும் இடமே தெரியாமல் இருக்கின்றனர். 

இந்தச் சூழலில்தான் கடந்த தேர்தல்களில் இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்து படுதோல்வி அடைந்த காங்கிரஸ் கட்சி, 294 தொகுதிகளிலும் 19 ஆண்டுகளுக்குப் பிறகு தனித்து களம் காண முடிவு செய்திருக்கிறது. 

ராகுல் காந்தி - காங்கிரஸ்
ராகுல் காந்தி – காங்கிரஸ்

வாக்கு வங்கி குறைவு

டெல்லியில் மேற்குவங்க காங்கிரஸ் தலைவர்களுடன் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆலோசனையில் ஈடுபட்டிருந்தபோது இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2001 தேர்தலில் 17 இடங்களில் வென்ற காங்கிரஸ் 2006-ல் 21 இடங்களையும், 2011-ல் 41 இடங்களையும், 2016-ல் 44 இடங்களையும் வென்றிருந்த நிலையில், 2021-ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. தவிர கட்சியின் வாக்கு வங்கியும் 3.03 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. 

அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?

இடதுசாரிகளின் கூட்டணியால் கட்சியின் சொந்த செல்வாக்கை இழந்து வருவதாக மேற்கு வங்க காங்கிரஸ் நிர்வாகிகள் தலைமையிடம் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திய நிலையில், கட்சியை மீட்டெடுக்கும் முனைப்பில் காங்கிரஸ் களமிறங்கி இருக்கிறது. 

அதுமட்டுமன்றி சமீபத்திய உள்ளாட்சித் தேர்தல்களுக்குப் பிறகு, இடதுசாரிகளுடன் தொகுதிப் பங்கீடு செய்வதில் காங்கிரஸுக்கு உடன்பாடு ஏற்படவில்லை. அதனாலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு செய்திருக்கிறது.

காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்
காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

மேலும் பாஜக-வை எதிர்க்க மம்தா பானர்ஜி ஒருவரால் மட்டுமே முடியும் என்ற பிம்பத்தை உடைக்க காங்கிரஸ் விரும்புகிறது. பாஜக-வுக்கும் திரிணாமுல்லுக்கும் மாற்றாக தங்களை முன்னிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டிருக்கிறது. 

தவிர மால்டா மற்றும் முர்ஷிதாபாத், உத்தர தினாஜ்பூர் போன்ற மாவட்டங்களில் காங்கிரஸுக்கு வலுவான வாக்கு வங்கி இருக்கிறது. தனித்து போட்டியிட்டால் இன்னும் வலுபெற முடியும் என காங்கிரஸ் நினைக்கிறது.

பாஜக-விற்கு சாதகமா?

காங்கிரஸின் இந்த முடிவால் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் என நான்கு முனைப்போட்டி நிலவுகிறது.

காங்கிரஸின் இந்த முடிவால் எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கி சிதறும். திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ்-இடதுசாரி மோதலில், பாஜக எதிர்ப்பு வாக்குகள் சிதறினால், அது பாஜக-வுக்கு நேரடி லாபமாக அமையும்.

பாஜக
பாஜக

மம்தாவுக்கு பின்னடைவு

அதேபோல மேற்குவங்கத்தில் முஸ்லிம் வாக்காளர்களின் வாக்குகள் மம்தா பானர்ஜியின் மிகப்பெரிய பலம். காங்கிரஸ் தனித்து நின்று தீவிரமாகப் பிரசாரம் செய்தால், மால்டா, முர்ஷிதாபாத் போன்ற பகுதிகளில் இந்த வாக்குகள் காங்கிரஸுக்குத் திரும்பும். இது மம்தாவின் வெற்றிக்குப் பின்னடைவை ஏற்படுத்தும்.

காங்கிரஸிற்கு என்ன பாதிப்பு?

2021-ல் ஒரு இடத்தில்கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. இந்தச் சூழலில் தனித்து நிற்கும்போது, பல தொகுதிகளில் டெபாசிட் வாங்குவதே பெரிய சவாலாக இருக்கும்.

294 தொகுதிகளிலும் தனித்து வேட்பாளர்களை நிறுத்தும்போது தேர்தல் பிரசாரம், விளம்பரங்கள் மற்றும் பூத் கமிட்டி செலவுகளுக்குப் பெரும் நிதி தேவைப்படும்.

ராகுல் காந்தி - காங்கிரஸ்
ராகுல் காந்தி – காங்கிரஸ்

கேள்விக்குறியாகும் நம்பிக்கை…

கூட்டணி இருந்தால் செலவுகளைப் பகிர்ந்துகொள்ள முடியும். ஆனால் தனித்துப் போட்டியிடும்போது முழுச்சுமையும் கட்சியின் மேலிடத்திற்கே சேரும்.

தவிர மத்தியில் ‘இந்தியா’ கூட்டணியில் மம்தாவுடன் கைகோத்துவிட்டு, மாநிலத்தில் அவருக்கு எதிராகப் போட்டியிடுவது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். இது காங்கிரஸின் நம்பகத்தன்மையை மக்களிடையே கேள்விக்குறியாக்கலாம்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *