மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் மீது பெண் நடனக் கலைஞர் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.
தில்லியில் உள்ள தனியார் விடுதியில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மேற்கு வங்க ஆளுநர் பாலியல் தொல்லை அளித்ததாக மேற்கு வங்கத்தை சேர்ந்த நடனக் கலைஞர் கடந்த அக்டோபர் மாதமே புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் மீது நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கையை மாநில அரசிடம் கடந்த வாரம் தாக்கல் செய்துள்ளதாகவும் மேற்கு வங்க காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு செல்வதற்கான விசாவில் உள்ள பிரச்னைகளை சரிசெய்ய ஆளுநர் ஆனந்த் போஸிடம் உதவிகேட்டு சந்தித்தபோது, பாலியல் ரீதியாக அவர் தொல்லை அளித்ததாக நடனக் கலைஞர் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
200 விமானங்கள்… சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருட்டியவர் கைது!
“விசாவில் உள்ள பிரச்னைகளை சரிசெய்து தருவதாகவும், வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகளை சந்திக்க வேண்டும் என்று தெரிவித்த ஆளுநர், தில்லி செல்வதற்கான விமான டிக்கெட் மற்றும் ஜனவரி 5, 6 நாள்களில் விடுதி அறையில் தங்குவதற்கான ஆவணங்கள் உள்ளிட்டவை தனக்கு அனுப்பினார்.” என்று நடனக் கலைஞர் புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த சமயத்தில் தில்லியில் உள்ள வங்க பவனில் தங்கியிருந்த ஆளுநர், தனது விடுதி அறைக்கு வந்து பாலியல் ரீதியில் தொல்லை அளித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
எனினும், இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்க 10 மாதங்கள் தாமதப்படுத்தியது குறித்த விளக்கத்தை நடனக் கலைஞர் சொல்லவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில், தில்லியில் உள்ள வங்க பவன் மற்றும் விடுதியின் சிசிடிவி கேமிராக்களை ஆராய்ந்து, ஆளுநர் வந்து போனதற்கான நேரத்தையும் புகாரில் தெரிவிக்கப்பட்ட நேரத்தையும் சரிபார்த்ததாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே, மேற்கு வங்க ஆளுநா் சி.வி. ஆனந்த போஸ் தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக ஆளுநா் மாளிகையில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றும் பெண் ஒருவா் கொல்கத்தா காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தார்.
இந்த புகார் குறித்து கொல்கத்தா காவல்துறையினர் குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆளுநர் மாளிகையின் சிசிடிவி காட்சிகளை விசாரணைக் குழு கோரிய நிலையில், மாளிகைக்குள் காவல்துறையினர் நுழைய தடை விதிப்பதாக ஆளுநர் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதற்கிடையே, பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் போஸ் உடனடியாக தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.
பதவியில் இருக்கும்போது ஆளுநா் மீது எந்தவித குற்றவியல் வழக்குகளையும் தொடுக்க முடியாது என அரசமைப்பு சட்டப்பிரிவு 361-இல் குறிப்பிடப்பட்டுள்ளது.