லக்னௌ: நான்கு கட்ட மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இந்தியா கூட்டணி வலுவான நிலையில் இருப்பதாகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு விடைகொடுக்க நாட்டு மக்கள் தயாராகிவிட்டனர் என்று தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அரசியல் சட்டத்தை காப்பாற்றவே தேர்தல் நடத்தப்படும் என்றும், அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று பேசுபவர்கள் மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
லக்னௌவில் கார்கே-அகிலேஷ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, “நாட்டில் நான்கு கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் இந்தியா கூட்டணிக்கு அதிக இடங்களை பெறுவது உறுதியாகிவிட்டது. இந்திய அணி மிகவும் வலுவான நிலையில் உள்ளது. நரேந்திர மோடிக்கு விடைகொடுக்க நாட்டு மக்கள் தயாராகி விட்டனர். ஜூன் 4 ஆம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்,” அன்று பத்திரிகையாளர்கள் முதல் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் மத்திய அரசு துறைகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறினார்.
மோடியை போன்று பொய் பேசும் ஒரு பிரதமரை இந்த நாடு பார்த்ததே இல்லை. இஸ்லாமிய மக்களை விமர்சித்து பேசவில்லை என்று அப்பட்டமாக பொய் பேசி வரும் மோடி, “நான் இந்து அல்லது முஸ்லீம் என்று ஒருபோதும் பேசவில்லை; ஏழைக் குடும்பங்களைப் பற்றி பேசினேன்” என்று பொய் பேசி வரும் மோடியை பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கான நாள்கள் எண்ணப்பட்டு வருவதால் நாளுக்கு நாள் பொய்களைப் பேசி வருகிறார்.
“இவர்கள் அரசியல் சட்டத்தை மாற்றப் பார்க்கிறார்கள். அரசியலமைப்பை மாற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை என்று கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் முதலில் கூறினார். உத்தரபிரதேசத்தில் பாஜகவைச் சேர்ந்த பலர் அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று பேசினர்.
அரசியல் சட்டத்தை காப்பாற்றவே தேர்தல் நடத்தப்படுவதாக கூறும் மோடி, அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
நியூஸ் கிளிக் நிறுவனரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
இதுகுறித்து மோடி அமைதியாக இருப்பது தனக்கு ஆச்சரியமாக இருப்பதாக தெரிவித்த கார்கே, வலிமை மற்றும் 56 அங்குல மார்பு குறித்து பேசும் மோடி, அவர்களை அழைத்து எச்சரிக்காதது ஏன்?, அவர்களை கட்சியில் இருந்து ஏன் நீக்கக்கூடாது? அரசியல் சட்டத்திற்கு எதிராக இதுபோன்ற விஷயங்களை ஒருவர் கூறவக்கூடாது,” என்று அவர் மேலும் கூறினார்.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றும். எதிர்காலத்தையும் ஜனநாயகத்தையும் நாட்டின் அரசியல் சட்டத்தையும் பாதுகாக்க அனைவரும் பாடுபட வேண்டும். அனைவரும் ஒன்றுபட்டு ஜனநாயகத்தை பாதுகாக்க தவறினால் அடிமைகளாகிவிடுவோம்.
மேலும் தோல்வி பயத்தில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் நிற்கும் தொகுதிகளில் எதிர்க்கட்சியினரையும் வாக்காளர்களையும் அச்சுறுத்தி வருகின்றனர்.
ஹைதராபாத்தில் இஸ்லாமிய பெண்களின் பர்தாவை விலக்கி மிரட்டும் தொனியில் பாஜக வேட்பாளர் நடந்து கொண்டுள்ளார். தேர்தல் ஆணையம் நேர்மையான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
ஏழைகளுக்கு உணவு வழங்குவதை உறுதி செய்ய காங்கிரஸ் ஆட்சியில் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றி 10 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டது. அதனை பாஜக அரசு 5 கிலோவாக குறைத்துவிட்டது. “இந்தியா கூட்டணி அரசு அமைந்ததும் ஏழைகளுக்கு மாதம் 10 கிலோ இலவச அரிசி வழங்குவோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 80 இடங்களில் 79 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று அகிலேஷ் யாதவ் கூறினார்.