கேரள மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கேரளாவில் முதல் ரவுண்ட் பிரசாரம் மேற்கொண்டனர்.
இரண்டாம் கட்டமாக அடுத்தும் பிரசாரத்துக்கு வர உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்தின்போது பா.ஜ.க ‘ஏ’ டீம் எனக்கூறி சி.பி.எம், காங்கிரஸ் கட்சிகளை அட்டாக் செய்தார்.
ராகுல் காந்தி பிரசாரத்தின்போது சபரிமலை தங்கம் கொள்ளை பற்றி பிரதமர் மோடி மறந்துவிட்டார் எனவும், கம்யூனிஸ்ட் ஆட்சி தொடர வேண்டும் என மோடி விரும்புவதாகவும் கூறியிருந்தார்.
மேலும், ரப்பருக்கு அடிப்படை ஆதாரவிலையை 250 ரூபாயாக நிர்ணயிப்பதாக 2016-ல் வாக்குறுதி அளித்த சி.பி.எம் அதை நிறைவேற்றவில்லை எனவும் விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் சி.பி.எம் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் கேரளாவில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது எர்ணாகுளம் பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அதானி, அம்பானி மற்றும் அமெரிக்காவும்தான் பிரதமர் நரேந்திர மோடியின் ‘ஏ’ டீம். டொனால்ட் டிரம்ப் ஈரானை முதலில் தாக்கியபோதும், இஸ்ரேல் பாலஸ்தீனத்தைத் தாக்கியபோதும் மௌனம் காத்தவர் மோடி.
மோடியின் வாயைப் பூட்டி அதன் சாவியை அமெரிக்க அதிபரிடம் கொடுத்தது போல் உள்ளது.

பா.ஜ.க மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிராக சமரசமற்ற நிலைப்பாட்டை எடுப்பவர்கள் சி.பி.எம் கட்சியினர். இதனை மறைத்து ‘டீல்’ என்று கூறி பா.ஜ.க-வும் காங்கிரஸும் பொய்ப் பிரசாரம் செய்கின்றன.
பல விஷயங்களில் பா.ஜ.க-வும் காங்கிரஸும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் போன்று செயல்படுகின்றனர். கேரள மக்களுக்குச் சேர வேண்டிய நிதியை ஏன் மறுக்கிறீர்கள் என்று பிரதமர் பதிலளிக்க வேண்டும்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த சட்டம் சில மதப் பிரிவினரை இலக்கு வைத்து கொண்டு வரப்பட்டது.

கர்நாடகாவும் தெலங்கானாவும் காங்கிரஸின் ஏ.டி.எம்-களாக மாறிவிட்டன. அங்கு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை காங்கிரஸால் நிறைவேற்ற முடியவில்லை. கொடுத்த வாக்கை நிறைவேற்றிய பிறகுதான் ராகுல் காந்தி கேரளாவில் வந்து வாக்குறுதிகளை அளிக்க வேண்டும்.
கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையிலும் வயநாடு துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வீடு அமைத்து கொடுக்க எல்.டி.எஃப் அரசு டவுன்ஷிப் அமைத்து வருகிறது. இந்த நேரத்தில் வீடு கட்டித் தருவதாகச் சொல்லி வருபவர்கள் (காங்கிரஸ் கட்சியினர்) மக்களிடம் இருந்து எவ்வளவு பணம் வசூலித்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
