மேடை இலக்கணம் தெரியாமல் ரஜினியை எக்குத்தப்பாக சீண்டி பேசி ரஜினி ரசிகர்களை கோபப்படுத்தி, இப்போது ரஜினியே ‘காலம் காத்திருந்து பதில் சொல்லும்’ என தவெகவுக்கு எதிராக அரசியல் நெடி வீச அறிக்கை வெளியிடும் அளவுக்கு செய்திருக்கிறார் ஆதவ் அர்ஜூனா. அவரின் பேச்சும் அதற்கான எதிர்வினைகளும் தவெக தலைமையையே அப்செட் ஆக செய்திருப்பதாக கிசுகிசுக்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர்.

‘ஆதவ் தலைமையை தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்குறது இது ஒன்னும் முதல் முறை இல்லைங்க…’ என பேசத் தொடங்கும் தலைமைக்கு நெருக்கமான நிர்வாகிகள், ‘அவர் கட்சியில் சேர்ந்த புதிதிலேயே, ‘இந்த கட்சியில் கட்டமைப்பே இல்லை. கட்சியின் கட்டமைப்பை நான் தான் முறைப்படுத்தப் போகிறேன்’ என கொஞ்சம் துடுக்காக இருந்தார்.
விசிக-வில் செய்ததை போல தவெகவிலும் தனியாக ஒரு ரூட் எடுக்க நினைத்தார். ஆனால், ஆனந்தும் ஜானும் அதற்கான இடத்தை கொடுக்கவில்லை என்கிறார்கள். அதிலேயே இவர்களுக்குள் முட்டல் மோதல் தொடங்கிவிட்டது.
ஆக்டிவாக வேலை செய்யக்கூடியவர், தேர்தல் அனுபவம், வைட்டமின் வசதிகள் உண்டு என்பதால் தலைவருக்கு ஆதவ்வின் மீது கொஞ்சம் நம்பிக்கை உண்டு. அதனால்தான் விஜய்யை விட ஆதவ் தான் அதிகமாக பேசுகிறார் என்கிற விமர்சனங்களுக்கெல்லாம் தலைவர் காது கொடுத்ததே இல்லை.

ஆனால், கரூருக்கு பிறகான சிறப்புப் பொதுக்குழு ஒன்றில் அத்தனை சேனல்களிலும் லைவ் ஓடிக்கொண்டிருக்கையிலேயே, ‘2021 இல் கருப்பு சிவப்பு சைக்கிளை ஓட்டி தலைவர் திமுகவுக்கு ஆதரவு கொடுத்தார்’ எனப் பேசி தலைவரையே சங்கடப்படுத்தினார்.
ஆதவ் பேசியதை ஆமோதிக்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் தலைவர் தர்ம சங்கடத்தில் ஆழ்ந்தார். அதன்பிறகு ஆதவ் செங்கோட்டையனை கட்சிக்குள் சேர்க்க காய்களை நகர்த்தி வெற்றிகரமாக அதை செய்து முடிக்கையில்தான் தலைவர் கொஞ்சம் கூல் ஆனார். ஆனால், ஆனந்த், ஆதவ் மீது இருந்த மன மாச்சர்யங்கள் மட்டும் அப்போதும் குறையவில்லை’ என்கின்றனர்.
‘சமீபத்தில் தேர்தல் கண்காணிப்பாளர்களை விஜய் நியமித்திருந்தார். அதில் முதன்மை கண்காணிப்பாளராக ஆனந்த், ஆதவ், செங்கோட்டையன் ஆகியோருக்கு பொறுப்பு வழங்கியிருந்தார். மூவரில் ஆதவ்வுக்கு மட்டும் கூடுதலாக சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கான பொறுப்பையும் வழங்கியிருந்தார்.
உடனே ஆதவ் டீம் ‘ஆனந்துக்கு கொடுக்கப்படாத கூடுதல் பொறுப்பு ஆதவ்வுக்கு கொடுக்கப்படுகிறது. தளபதியின் நம்பிக்கையை பெற்று கட்சிக்குள் பவர் சென்டராக ஆதவ் மாறுகிறார்’ என ஒரு செய்தியை முக்கியமானவர்களுக்கு ஃபார்வர்ட் செய்தனர்.

ஆனந்த் இதில் ஏகத்துக்கும் கடுப்பாகிவிட்டார். அது தெரிந்தும் ஆதவ் தரப்பு நிறுத்தவில்லை. விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட திட்டமிடப்பட்டிருப்பதால் அங்கே முதலில் செயல் வீரர்களை கூட்டத்தை நடத்தினர். பேசிய அத்தனை நிர்வாகிகளும் தொகுதியை தலைவரே அறிவித்தால்தான் நன்றாக இருக்கும் என்பதால் பூடகமாக மட்டுமே பேசினார். ஆனால், ஆதவ் மைக்கை பிடித்த உடனேயே முந்தி கொண்டு தலைவர் பெரம்பூரில் போட்டியிடுகிறார் என மொத்தமாக போட்டுடைத்தார்.
ஸ்கூப் நியூஸை ஆதவ் இறக்கிவிட்டதால் ஆனந்தின் பேச்சுக்கு அந்த நிர்வாகிகள் கூட்டத்தில் முக்கியத்துவமே இல்லாமல் போனது. அதில் ஆனந்த் கடும் அப்செட்.
சென்னை மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர் என்பதால் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியை மொத்தமாக கையிலெடுத்துவிட்டார் ஆதவ். தொகுதியில் ஆனந்தை மிஞ்சி நிர்வாகிகள் கூட்டத்தையும் நடத்தி வருகிறார். அதேமாதிரி, ஆதவ் போட்டியிடவிருக்கும் வில்லிவாக்கம் தொகுதியில் அவரின் தங்கை சீதா லெட்சுமியும் வீடு வீடாக பரப்புரை செய்வார் என மேடையிலேயே அறிவித்திருந்தார்.
குடும்ப அரசியலுக்கு எதிராக பேசிவிட்டு நாமே இப்படி செய்தால் எப்படி என அதிலும் ஆனந்த் கடும் அப்செட். ஆதவ் மீதான புகார்களை லிஸ்ட் போட்டு வைத்துக் கொண்டு தலைவரின் காதில் போட சரியான சமயம் பார்த்து காத்திருந்தார். அதற்குள் ரஜினியை பற்றி பேசி அவரே சிக்கிக்கொண்டார்.
இப்போது ரஜினியே ஆதவ்வுக்கு எதிராக அறிக்கை விட்டிருப்பதால் தலைவரே அவரின் பேச்சுக்கு செக் வைப்பார் என்கிற குஷியில் இருக்கிறார் ஆனந்த்’ என்கின்றனர் தவெகவின் உள் விவகாரம் அறிந்தவர்கள்.

‘காலம் காத்திருந்து பதில் சொல்லும்’ என்கிற ரஜினியின் அறிக்கைக்கு ஆதவ்வை வைத்தே பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி சுமுகமாக பிரச்னையை முடிக்க விஜய் திட்டமிட்டிருக்கிறார். ஆனால், பத்திரிகையாளர் சந்திப்பில் மீண்டும் எதையாவது பேசி கிளப்பிடக்கூடாது என்பதற்காக இப்போது அந்த பத்திரிகையாளர் சந்திப்பையும் ரத்து செய்திருப்பதாக கிசுகிசுக்கின்றனர்.
‘தேர்தல் நேரத்தில் இன்னொரு நடிகரின் ரசிகர்களை எதிரிகளாக மாற்றும் வகையில் இப்படியான விவகாரமெல்லாம் தேவையா..’ என தவெக நிர்வாகிகளும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
