Sorting by

×

`ராஜா அப்படிப்பட்டவர் அல்ல; தவறான கணிப்பில் இப்படி…’ – சர்ச்சை சம்பவம் குறித்து சாலமன் பாப்பையா

அமெரிக்காவில் நடைபெற்ற தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சியில், பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா கலந்துகொண்டிருந்தார். அங்கு அவருக்கு உணவு பரிமாறப்பட்டிருக்கிறது. அப்போது தனக்கு உணவு வழங்கிய பெண் ஒருவரின் சாதி குறித்து ராஜா கேள்வியெழுப்பியதாக, சர்ச்சைக் கிளம்பியிருக்கிறது.

`சாதி’ சர்ச்சை

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண்ணின் சகோதரர், சமூக வலைதளத்தில் பதிவிட, பட்டிமன்றப் பேச்சாளர் ராஜாவுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. `சாதி கேட்பது தமிழர்களின் பழக்கமே கிடையாது. உணவு பரிமாறுபவரிடம் உணவு குறித்துதான் கேட்க வேண்டுமே தவிர, அந்த இடத்தில் சாதி குறித்து கேட்க வேண்டிய அவசியம்?’ எனப் பலரும் ராஜாவுக்குக் கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

 ‘பட்டிமன்றம்’ ராஜா
‘பட்டிமன்றம்’ ராஜா

அதைத் தொடர்ந்து, ராஜா இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கமளித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், `சாதி குறித்து கேட்கும் அளவுக்குச் சிறிய புத்தி எனக்கு இல்லை. உணவு பரிமாறியவர் தன்னுடைய ஊர் காரைக்குடி எனக் கூறினார். அதனால் செட்டிநாடா என்று கேட்டதாகத்தான் நியாபகம். சாதி குறித்தெல்லாம் கேட்கவில்லை’ என்று விளக்கம் அளித்திருந்தார்.

ராஜா அப்படிப்பட்டவர் அல்ல

இந்த நிலையில், சாலமன் பாப்பையா இந்த விவகாரம் தொடர்பாக தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “தமிழ் மக்களுக்கு என் அன்பான வணக்கம். தம்பி ராஜாவைப் பற்றி ஒரு தவறான செய்தி நம்முடைய ஊடகங்களில் போய்க்கொண்டிருப்பதை நான் காண்கிறேன், கேட்கிறேன். யாரோ ஒரு தாய் அறிந்தோ அறியாமலோ அவரை பற்றி ஒரு தவறான கணிப்பிலே இந்தச் செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். ராஜா என்னுடைய பண்ணையிலே 45 ஆண்டுகளுக்கு மேலே இருக்கிறார், அவர் எப்படிப்பட்டவர் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். என்னுடைய பிள்ளை அது.

`சாதிகள் இல்லையடி பாப்பா’ என்ற பாரதியின் சந்தத்தை அவருடைய சிந்தையில் ஏற்றுக்கொண்டவர். அவருக்கு இப்படிப்பட்ட எண்ணங்கள் கிஞ்சித்தும் இருக்காது என்பதை நான் சத்தியம் செய்து சொல்லுவேன். ஆனால் அப்படிப்பட்ட மனிதரை ஏதோ ஒரு தவறான கணிப்பினால் இப்படிச் சொல்லியிருப்பது எனக்குத் தெரியவில்லை. நான் அங்கு இல்லாதபோது எதையும் உறுதிப்படுத்த முடியாது. ஆனால் அவருடைய மனசுக்குள்ளே சாதிய உணர்வோ அதைப் பற்றிய சிந்தனையோ கிஞ்சித்தும் இல்லை என்பதை நான் ஆயிரம் முறையில் சத்தியம் பண்ணி சொல்லுவேன். அவரைப் பற்றி இப்படிச் சொன்னது உள்ளபடியே எனக்கெல்லாம் மிகப்பெரிய வருத்தம்.

சாலமன் பாப்பையா

எங்களுடைய பண்ணையில யாருமே அப்படி இல்லை, அப்படி வளர்ந்தவர்கள் நாங்கள் யாருமே அப்படி இல்லை. ஏன் இந்த தவறான கருத்து வந்தது, அதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம் வேறு இருக்கிறது என்பதைப் பார்க்கிறபோது, நட்பை விட பகைமை மேலோங்கி இருப்பதைக் காண்கிறேன். இது தமிழர்களுக்கு நல்லது அல்ல, தமிழ் வளர்ச்சிக்கு இது நல்லதும் அல்ல. அதனால் மிகப் பணிவாக உங்களிடம் கேட்கிறேன், எதுவாக இருந்தாலும் அவரிடம் நேரே கேட்டிருக்கலாம், அவரை திருத்தி இருக்கலாம். அந்தத் தாய் திருத்துவதற்கு பதிலாக இந்தப் பதிவை செய்து பகைமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களிடத்தில் என்னுடைய வருத்தத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன். ராஜா அப்படிப்பட்டவர் அல்ல என்பதை மீண்டும் நான் உறுதிப்படுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *