அறிவாலயத்தில் வேட்பாளர் நேர்காணலை பரபரப்பாக நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. இன்று நடந்த நேர்காணலில் முதல்வர் ஸ்டாலினை பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விருப்ப மனு கொடுத்து வந்திருந்த சுவாரஸ்ய சம்பவம் நடந்திருந்தது.

கடந்த மார்ச் 17 ஆம் தேதி முதல் திமுக சார்பில் வேட்பாளர் நேர்காணல் முதல்வர் தலைமையில் நடந்து வருகிறது. அந்தவகையில் இன்று கரூர், நாமக்கல், ஈரோடு மாவட்ட தொகுதிகளுக்கான நேர்காணல் நடந்திருந்தது. மொடக்குறிச்சி தொகுதிக்காக நடந்த நேர்காணலில் 31 பேர் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் மோகனசுந்தரம் என்பவர் குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேரோடும் பங்கேற்றிருந்தார். நேர்காணலை முடித்துவிட்டு வந்த மோகனசுந்தரத்திடம் பேசினோம்.
‘எங்க அப்பா கலைஞர் காலத்துல இருந்து 45 வருசமா திமுகவுல இருக்காரு. எந்த பொறுப்புலயும் பதவியிலயும் இருந்தது இல்ல. ஒரு அடிப்படை உறுப்பினரா களத்துல உழைச்சுக்கிட்டு இருக்காரு. நான் பிறந்தப்போ கூட என்னை பார்க்க வராம கழகம் நடத்துன ஒரு போராட்டத்துக்கு போயிட்டாரு. முடி வெட்டுற வேலைதான் பார்க்குறாரு.

ஆனா, ஸ்டாலின் ஐயா கொரோனா அப்ப எல்லாருக்கும் சாப்பாடு கொடுக்க சொன்னதால இப்ப வரைக்கும் தினசரி 30 பேருக்கு சாப்பாடு கொடுத்திட்டு இருக்காரு.
தலைவர் ஸ்டாலினை 10 வருசத்துக்கு முன்னாடி நேர்ல சந்திச்சு போட்டோலாம் எடுத்திருக்கோம். ஆனா, இப்போ தலைவர் பெரிய பொறுப்புக்கு போயிட்டாரு. அவரை பார்க்குறதே சிரமமா இருக்கு. அதனாலதான் குடும்பத்தோட விருப்ப மனு போட்டோம்.
5 பேருக்கு 1.25 லட்ச ரூபாய் ஆச்சு. எங்க அப்பா 1500 பேருக்கு முடி வெட்டி ஷேவ் பண்ணாதான் இந்த பணத்தை சம்பாதிக்க முடியும். இன்னைக்கு அவரால நேர்ல வர முடியல. ஆனாலும் எங்களை தவறாம போயி தலைவரை சந்திச்சுட்டு வர சொன்னாங்க.
மொடக்குறிச்சு தொகுதிக்காக உள்ள போனப்போ தலைவரை பார்த்துட்டோம். பேச முடியல, போட்டோ எடுக்க முடியல. ஆனாலும் தலைவரை பார்த்துட்டோம். அந்த சந்தோஷமே போதும்’ என்றார் நெகிழ்ச்சியாக.
இப்படியான உடன்பிறப்புகளால்தான் கழகம் 75 ஆண்டுகளை கடந்து நூற்றாண்டை நோக்கி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக புல்லரித்துப் போயினர் சக உடன்பிறப்புகள்!
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
