தேர்தல் நேரம் வந்துவிட்டாலே வாக்குக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் சாதாரண விஷயமாகிவிட்டது. ஆனால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 123 (1)-ன் கீழ் வாக்களிக்க பணம் பெறுவது லஞ்சம் பெறுவதற்கு இணையான குற்றமாகும். இப்படி பணம் பெறுபவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 171 (b) இன் படி வழக்கு பதிவு செய்து, ஒரு வருட சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கலாம். இதன் அடிப்படையில், வாக்குக்கு பணம் (லஞ்சம்) கொடுப்பதும், வாங்குவதும் சட்டப்படி குற்றம். ஆனால் ஆந்திரப் பிரதேசத்தில் வாக்குக்கு பணம் கொடுக்கவில்லை என வீதியில் இறங்கி போராடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தேர்தல்
ஆந்திர பிரதேச மாநிலத்தில் 175 சட்டமன்றத்துக்கும், 25 மக்களவைத் தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. கடந்த சனிக்கிழமை மாலை பிரசாரம் முடிவடைந்த நிலையில், சில இடங்களில் பண விநியோகம் நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால், பழநாடு சட்டெனப்பள்ளியில், 18வது வார்டு வாக்காளர்கள், தங்களுக்கு ஓட்டுக்களுக்கு பணம் தருவதாக உறுதியளித்தும், அது கிடைக்கவில்லை எனக் கூறி வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோன்று பித்தாபுரத்திலும் தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதியின் அலுவலகத்திற்கு அருகில் வாக்காளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓங்கோலில் ஒரு ஓட்டுக்கு ரூ.5,000 வினியோகம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சிலருக்கு பணம் கொடுக்காமல் ஒதுக்கப்பட்டதாகவும், அதே போன்று கிழக்கு கோதாவரி மாவட்டம், கொண்டேவாரம் கிராமத்தில், பணம் கொடுக்காமல் ஒதுக்கப்பட்டதாகவும் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தல் 2024
ஆந்திரப் பிரதேசம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை இதுபோன்று குறைந்தது ஐந்து இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்கிறது என்கிறார்கள். விஜயவாடா எம்.எல்.ஏ, சில மாநகராட்சி கார்ப்பரேட்டர்களின் அலுவலகங்களில் ஒரு நெருங்கிய ஆதரவாளர் மூலம், ஒரு ஓட்டுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை வழங்கியதாக கூறப்படுகிறது. சில வேட்பாளர்கள், சக வேட்பாளர்கள் வழங்கும் தொகையை விட போட்டி போட்டுக்கொண்டு ரூ.500 முதல் ரூ.1000 வரை கூடுதலாக வழங்கியிருக்கிறார்.
நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதால், வாக்குகளுக்கான விலையும் அதிகரித்திருப்பதாகவும், பல்வேறு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குகளுக்கு 1,000 முதல் ரூ. 6,000 வரை வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88
பா.ஜ.க-வுக்கு பிரசாரம் செய்யும் அரசாங்க அமைப்பு! – கண்களை மூடிக்கொண்ட தேர்தல் ஆணையம்!
