Sorting by

×

Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper – Dinakaran

வாரணாசி: உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி மக்களவை தொகுதியில் 3 வது முறையாக போட்டியிடுவதற்காக பிரதமர் மோடி இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் 7வது கட்டமாக வருகிற ஜூன் ஒன்றாம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வாரணாசி தொகுதியில் கடந்த இரண்டு முறை பிரதமர் மோடி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து மூன்றாவது முறையும் பிரதமர் மோடி வாரணாசியில் களமிறங்கியுள்ளார். இதற்காக பிரதமர் மோடி இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார். வேட்பு மனு தாக்கல் மற்றும் தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி நேற்று வாரணாசி வந்தார். அவருக்கு பாஜ தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று மாலை பிரதமர் மோடி தனக்கு ஆதரவு திரட்டும் வகையில் சுமார் 6 கி.மீ. தூரத்துக்கு பேரணி சென்றார். லங்கா பகுதியில் உள்ள மதன்மோகன் மாள்வியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் பிரதமர் தனது பேரணியை தொடங்கினார். அவருடன் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் உடன் இருந்தார். காசி விஸ்வநாதர் கோயில் வரை இந்த பேரணி நடைபெற்றது. காவி உடை அணிந்த ஏராளமான பெண்கள் பிரதமர் மோடியின் வாகனத்துக்கு முன் அணிவகுத்து சென்றனர். சாலை நெடுகிலும் மலர்களை தூவியும் முழக்கமிட்டும் பிரதமர் மோடிக்கு தொண்டர்கள் ஆதரவு தெரிவித்தனர். 100 இடங்களில் பிரதமர் மோடிக்கு மேளதாளங்கள், சங்கு முழங்க வரவேற்பு அளித்தனர்.
* கங்கை நீராடல்
பிரதமர் மோடி வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ள நிலையில் அவர் கங்கையில் புனிதநீராட திட்டமிட்டுள்ளதாகவும் பாஜ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. * சப்பாத்தி தயாரித்து பக்தர்களுக்கு பரிமாறிய மோடி
பிரதமர் மோடி நேற்று பீகார் சென்றார். அப்போது பாட்னாவில் உள்ள தகாத் ஸ்ரீஹரிமந்திர் ஜி பாட்னா சாஹிப் குருத்வாராவுக்கு பிரதமர் நரேந்திரமோடி நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு சீக்கிய தலைப்பாகை அணிந்து குருத்வாராவிற்குள் சென்று வழிபாடு செய்தார். பக்தர்களுக்கு உணவு தயாரிக்கும் இடத்துக்கு சென்ற பிரதமர் காலை சப்பாத்தி உருட்டிக் கொடுத்து உணவு தயாரிப்பதற்கு உதவினார். பின்னர் அங்குள்ள பக்தர்களுக்கு பிரதமரே உணவு பரிமாறினார்.
The post வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி இன்று வேட்பு மனு தாக்கல்: 6.கி.மீ. பேரணி நடத்தி ஆதரவு திரட்டினார் appeared first on Dinakaran.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *