சென்னை விருகம்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜாவின் தந்தையும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவருமான விக்கிரமராஜா, அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வியாபாரிகளின் கோரிக்கைகளை மனுவாக அளித்திருப்பது அரசியல் ஏரியாவில் பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.
தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் பலம் பொருந்திய அமைப்பாக இருந்த போது மறைந்த த. வெள்ளையன், விக்கிரமராஜா இருவருமே அதன் நிர்வாகிகளாக இருந்தனர்.
அந்தக் காலத்தில், த. வெள்ளையன் அதிமுக அனுதாபியாக இருப்பதாக கருதிய மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, விக்கிரமராஜா வெள்ளையனிடமிருந்து பிரிந்து ‘வணிகர் சங்கங்களின் பேரமைப்பு’ என தனிச் சங்கத்தை உருவாக்கியதாகப் பேசப்பட்டது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ‘கருணாநிதியே வியாபாரிகள் சங்கத்தை உடைத்தார்’ என பகிரங்கமாகவே பேசியிருக்கும் காணொலிகளை இப்போதும் காணலாம்.
தனிச் சங்கம் கண்ட பிறகு தொடர்ந்து திமூக ஆதரவு நிலைப்பாட்டிலேயே இருந்து வந்தது வணிகர் சங்கங்களின் பேரமைப்பு.

ஒவ்வொரு வருடமும் வணிகர் தினமான மே 5 ம் தேதி திமுகவைச் சேர்ந்தவர்களையே அழைத்து மாநாடுகள் நடத்தி வந்திருக்கிறார் விக்கிரமராஜா.
இந்த நிலையில்தான் 2021 சட்டசபைத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார், அவரது மகன் பிரபாகர் ராஜா.
விக்கிரமராஜா என்றாலே திமுக சார்பு என்கிற ஒரு பார்வை இருக்கும் பட்சத்தில் தற்போது, அதுவும் தேர்தல் நெருங்கும் வேளையில் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியை அவர் சந்தித்திருப்பதால் இந்தச் சந்திப்பு சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது.
‘இப்ப விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ வாக இருக்கிறவருக்கு திரும்பவும் திமுகவுல சீட் தருவாங்களானு தெரியலை. ஏன்னா விருகம்பாக்கம் தொகுதியை புதுசா கூட்டணிக்கு வந்திருக்கிற தேமுதிக கேக்கறதா சொல்றாங்க. விஜயகாந்த் வீடு இருக்கும் தொகுதிங்கிறதால் தொகுதி அவங்களுக்குப் போகவும் வாய்ப்பு இருக்கு. அதனால திமுக மேல விக்ரமராஜா குடும்பத்துக்கு அதிருப்தி.

வணிகர் சங்கங்களின் பேரமைப்புக்கு வியபாரிகள் மத்தியில நல்ல செல்வாக்கு இருக்குங்கிறதால, வியாபாரிகள் ஓட்டு தொடர்ந்து திமுகவுக்கு வேணுமா வேண்டாமானு நீங்களே முடிவு செய்துக்கோங்க’னு ஆளுங்கட்சிக்கு ஒரு அலெர்ட்னு இதைச் சொல்லலாம்’ என இந்தச் சந்திப்பை வைத்த பலவாறு தகவல்கள் கிளம்ப, விக்ரமராஜாவையே தொடர்பு கொண்டு பேசினோம்.
”தேர்தல் நேரம் வந்தா அரசியல் கட்சிகளின் தலைவர்களை வரிசையாப் போய்ச் சந்திக்கறது வியாபாரிகள் சங்கங்கள் ஆரம்பத்துல இருந்தே செய்து வர்ற ஒரு வழக்கம்தான். எங்களுக்கு இருக்கிற பிரச்னைகளைப் பட்டியலிட்டு அவங்ககிட்டத் தருகிற பட்சத்தில் தங்களுடைய தேர்தல் அறிக்கையில் அவற்றை இடம்பெறச் செய்வாங்கங்கிற நம்பிக்கைதான். அப்படி தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றால் ஜெயிச்ச பிறகு அவங்ககிட்ட போய் ‘சொன்னபடி செய்யுங்க’னு கேக்கலாமில்லையா, அதான்.

இப்ப தனித்தனியாப் போய் எல்லாரையும் சந்திக்க வேண்டிய அவசியமில்ல. ஏன்னா ரெண்டு பெரிய கட்சிகளுடன் தான் மத்த எல்லாக் கட்சிகளும் கூட்டணியில இருக்காங்க. அதனால்தான் முதல்வரைச் சந்திச்சுட்டு அப்படியே எடப்பாடி பழனிசாமியையும் சந்திச்சோம். மத்தபடி இதுல எந்த அரசியலும் இல்லை.
என் மகன் திமுக எம்.எல்.ஏ. வா இருக்கலாம். ஆனா எங்க சங்கத்துல சாதி, மத, அரசியல் வேறுபாடுகளுக்கு இடமே இல்லை. நாங்க எப்பவுமே வியாபாரிகள் கட்சிதான்” என்கிறார் அவர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
