Sorting by

×

விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதோடு, மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்ட பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வங்கக் கடலில் உருவாகியிருந்த ஃபென்ஜால் புயல் காரணமாக நேற்று சென்னையில் கனமழை பெய்தது. கனமழை பெய்தாலும் நம்முடைய தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாகவும், தூர்வாரும் பணிகளின் காரணமாகவும், பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கவில்லை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். உங்களில் பல தொலைக்காட்சிகளிலும் இதைப் பற்றி பாராட்டி சொல்லியிருக்கின்றீர்கள்.

வடசென்னை பகுதிகளில் மழைநீரை அகற்றுவதற்கு இராட்சத மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு மழைநீர் அகற்றப்பட்டிருக்கிறது. தொடர்ந்து சில இடங்களில் அந்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. மழைநீர் தேங்கும் இடங்களில் அதனை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1,686 மோட்டார் பம்புகள் எப்போதும் தயார் நிலையில் உள்ளன. தேங்கிய இடங்களில் உடனுக்குடன் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

சென்னையில் உள்ள 22 சுரங்கப் பாதைகளில் 21 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக உள்ளது. கணேசபுரம் சுரங்கப் பாதை ரயில்வே மேம்பாலப் பணி காரணமாக போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 32 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அதில் 1,018 நபர்கள் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு இன்று வரை 9 இலட்சத்து 10 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்க வேண்டும் என்று நான் அறிவித்திருந்தேன். அந்த அடிப்படையில், 386 அம்மா உணவகங்களில் 1,07,047 பேருக்கு உணவு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவ மழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் அலுவலர்கள், பொறியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என மொத்தம் 22 ஆயிரம் பேர் மழைக்கால மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் பணிகளை 2,149 களப்பணியாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். எதையும் எதிர்கொண்டு சமாளிக்கும் வகையில் சென்னை தயார் நிலையில் உள்ளது. அதைத் தொடர்ந்து, இன்று காலை கொளத்தூர் தொகுதிக்கு நான் சென்றிருந்தேன். கடந்த காலங்களில் தண்ணீர் நிற்கும் பகுதிகளில் எங்கும் இப்போது தண்ணீர் தேங்கவில்லை. இதை மக்களே மகிழ்ச்சியாக தெரிவித்தார்கள்.

ஒரு சில ஊடகங்கள் தவிர்த்து பல்வேறு ஊடகங்களில் சென்னை மக்கள் அதை பாராட்டியிருக்கிறார்கள். அதற்காக நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மாநிலத்தின் மற்ற மாவட்டங்களின் நிலையை நேற்று முதல் இன்று வரை தலைமைச் செயலாளர் மூலமும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்களிடம் தொலைபேசி மூலமும் கேட்டு அறிந்துவருகிறேன். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தவரையில், வரலாறு காணாத மழை அங்கு பதிவாகி உள்ளது. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் மயிலத்தில் 490 மி.மீ., மழையும், நெம்மேலியில் 46டி மி.மீ., மழையும், வானூரில் 410 மி.மீட்டர் என பல பகுதிகளில் அதிகனமழை பதிவாகி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த மாவட்ட அமைச்சரான க.பொன்முடியுடன் இணைந்து செயல்படுவதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரையும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜியும் அனுப்பி வைத்துள்ளேன்.

அதேபோல், அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் சி.வி.கணேசனும், கடலூர் மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள். மேலும், விழுப்புரம் மாவட்டத்தில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி, பணிகளை துரிதப்படுத்த நீர்வள ஆதாரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், தலைமையில், இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் ஆல்பி ஜான் வர்கீஸ், கிரன் குராலா, பொன்னையா, சிவராசு ஆகியோரை அனுப்பி வைத்துள்ளோம்.

ஏற்கனவே மாவட்ட கண்காணிப்பு அலுவலர் S.J.  சுன்சோங்கம் ஜடக் சிரு மூன்று நாட்களாக விழுப்புரத்தில் முகாமிட்டு கண்காணித்து வருகிறார்.

கடலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தலைமையில் எஸ்.எ.ராமனையும் இரண்டு மாவட்ட வருவாய் அலுவலர்களையும் அனுப்பி வைத்துள்ளேன். மேலும், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட்டு நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினையும் அனுப்பி வைத்துள்ளேன். விழுப்புரம் மாவட்டத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையைச் சார்ந்த 12 குழுக்கள் விரைந்துள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள பிற மாவட்டங்களிலிருந்து துய்மைப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்களும் அதில் ஈடுபட உள்ளார்கள். இன்று காலை நிலவரப்படி விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 26 முகாம்களில் 1,373 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதோடு, மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த புயலின் காரணமாக தமிழ்நாட்டில் குறிப்பாக, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்கவும், பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் தேவையான நிதி வழங்கிடவும், பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்பி வைக்க ஒன்றிய அரசை கேட்டுக்கொள்ள இருக்கிறோம். இன்று திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் மழை அதிக அளவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திராவிட சித்தாந்தத்தையே விஜய் பேசுகிறார்: சென்னை திரும்பிய அண்ணாமலை பேட்டி

எனவே, அந்த மாவட்ட அலுவலர்களையும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தியுள்ளோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன். மழை இன்னும் பல மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து கொண்டு வருகிறது. முழுமையாக நிற்கவில்லை. ஓரளவு மழை குறைந்த பின்பு தான் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அதே போல், பயிர் சேதத்தைப் பொறுத்தவரையில் மழைநீர் வடிந்தவுடன் முறையாக கணக்கெடுப்பு செய்து, இழப்பீடு தொகை எப்படி வழங்க வேண்டும் என்பதை பிறகு தான் முடிவு செய்ய முடியும்.

நாளையதினம் தலைமைச்செயலகத்தில், சம்மந்தப்பட்ட அலுவலர்களுடன் கூட்டம் நடத்த இருக்கிறோம். அதில் கலந்தாலோசித்து முடிவு எடுத்து, அதற்குப் பிறகு ஒன்றிய அரசுக்கு இது குறித்து விளக்கமாக கடிதம் மூலம் தெரிவிப்போம் என்றார்.

முன்னதாக சென்னை, சேப்பாக்கம், எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, ஃபென்ஜால் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *