Sorting by

×

மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் 9 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி ‘மறவோம்’ என்ற தலைப்பில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகரும், எம்.பி-யுமான கமல்ஹாசன் பேசியதாவது, “இந்தக் கூட்டத்தில் இருக்கிறவர்கள் அத்தனை பேருமே தலைவர்கள். இதில் ஒரு முக்கிய செய்தி என்னவென்றால் இதில் 70 வயதில் நான்தான் மிக இளமையான கட்சி நடத்துபவன்.

தமிழகத்தின் தலைவர்கள் நீங்கள் எல்லோரும். இங்கே வந்து இந்த மேடையில் என் தலைவனின் (காந்தி) பெயரை சொல்ல வந்திருக்கிறீர்கள்.  அவருக்கு கட்சி கிடையாது, இருக்கவும் கூடாது, அவரை எந்த கட்சியும் மொத்தமாக கையில் எடுத்துக் கொண்டு போகக் கூடாது, மறந்துவிடவும் கூடாது. அதனால்தான்  ‘மறவோம்’ என்று நான் சொல்றேன்.

என் வீட்டில் காந்தியை பற்றியே பேச்சாக இருக்கும், எங்கு பார்த்தாலும் அவருடைய போட்டோ இருக்கும். அப்படி இருக்கும் போது நான் பரமக்குடியிலிருந்து சென்னைக்கு புறப்பட போகிறேன் எனும் போதுதான் காந்தி இறந்து விட்டார் என சொன்னார்கள். கவலையோடு ஒரு வாரம் அழுது சென்னைக்கு வந்து நகரத்தை எல்லாம் பார்த்து அதிலிருந்து சில வருடங்களில் நேருவும் இறந்துவிட்டார்.  எனக்கு பெரிய கவலை. நான் இப்போது இந்தியாவில் காணும் இந்த பிரிவினையை என்னுடைய சாதியிலும்  கண்டேன். அதிலிருந்து மேம்பட வேண்டும் என்று புறப்பட்ட பையன் நேராக போய் சேர்ந்தது பெரியார் திடல்.  

மதுரையில் மறவோம் நிகழ்ச்சி

இதை என் தந்தை தடுத்திருக்கலாம் அவருக்கு அந்த பலம் இருந்தது, சட்டமும் அவர் கையில் இருந்தது. அவர் வக்கீல், காந்தியினுடைய சீடர் என்பதனால் என் போக்கில் விட்டுவிட்டார். பெரியார் எங்கிருந்து வந்தார் என்று பார்த்தால் காந்தியிடமிருந்துதான் வந்திருக்கிறார், முரண்பட்டு வந்திருக்கிறார். காந்தியிடம் முரண்படுவது மகா பாவம் இல்லை. அது ஒரு பெரிய வீரமும் இல்லை, முரண்படுவது கடமை.

சினிமாவில் டான்ஸ் ஆடினாலே கூட்டத்தை திரட்டி விடலாம். ஆனால் இந்த கூட்டத்தை திரட்டுவது கஷ்டம். ஏனென்றால் இவர்கள் காந்தியுடன் முரண்பட்டவர்கள், இவர்களை எப்படி ஒரு மேடையில் அமர வைப்பது? அதுதான் மக்கள் நீதி மய்யம் தொடங்கி ஒன்பதாவது ஆண்டில் நான் செய்திருக்கும் சிறிய சாதனை.

நான் காந்தியை ஒரு போதும் மகாத்மா என்று கூப்பிட மாட்டேன். காரணம் அவரை பூஜைக்குரியவராக ஆக்கிவிட்டால் அந்த கோயிலை மூடுவதற்கு கூட வழி உண்டு. நீங்கள் வரக்கூடாது, அது எங்கள் கோயில் என்று உரிமை கொண்டாடுவதற்கு வழி உண்டு. காந்தி எங்களில் ஒருவர், என் தாத்தா, இவர்கள் தாத்தா எங்கள் குடும்பத்திற்கு மூத்தவர். அவரை நாங்கள் சாடுவோம், போற்றுவோம் வணங்குவோம்.  சூழல்கள் எங்களை எப்படி தாக்குகிறதோ அதற்கு ஏற்ப வீட்டில் வந்து புலம்புவோம். அந்த வீட்டில் காந்தி தாத்தா இருந்திருப்பார், என்றும் இருப்பார் என்று நான் நம்புகிறேன்.

மதுரையில் மறவோம் நிகழ்ச்சி

காந்தி ஒரு மனிதர் என்னும் காலகட்டம் கடந்துவிட்டது. காந்தி இஸ் ஐடியா. ஏன் ஆங்கிலத்தில் பேசுகிறார் என்று நினைக்க வேண்டாம் , எங்காவது ஒரு துளியாவது அவர்களின் சித்தத்தில் தங்கிவிடாதா என்ற நம்பிக்கையில் தான் பேசுகிறேன்.  ஒவ்வொரு தடவையும் அந்த பெரிய வட்டத்தில் போய்தான் பேச வேண்டும் என்பது இல்லை… மக்கள் மத்தியில் அமர்ந்து பேசினாலும் அங்கே கேட்கும்.

என்னுடைய அப்பா பரமக்குடியிலிருந்து நான் புறப்பட்டு சினிமாவுக்கு வந்த பிறகு `என்றைக்காவது நீ அரசியலில் வர வேண்டும்’ என்று சொன்ன போது என்னுடைய சகோதரர்கள்  ‘அவனையாவது விட்டு வைங்களேன், உங்கள மாதிரி அவனும் பாழாய் போணுமா’ என்று சொன்னார்கள். நான் பாழாகவில்லை நாமாக இருக்கிறோம்.

காந்தியை கொன்ற மூன்று குண்டுகளையும் நிறுத்த வேண்டிய நேரம் நமக்கு வந்துவிட்டது. அது எப்படி முடியும் என கேட்பீர்கள். சுகாதாரம் மற்றும் கல்வி என்ற இரண்டு புல்லட்டுகளை தமிழ்நாடு தயார் செய்து விட்டது

மதுரையில் மறவோம் நிகழ்ச்சி

இது மொத்த தேசத்தில 1.4 பில்லியன் மக்கள் முட்டாள்களாக இருக்க முடியுமா? சாத்தியமா யோசித்து பாருங்கள், இல்லை என்கிறேன் நான், இருக்கிறது என்கிறது ஒரு கூட்டம். அந்த கூட்டம் அகலும்… இல்லை என்றால் அகற்ற வேண்டும். இது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல நமது கடமையும் கூட.

இது உணர்வு பூர்வமான விழா, அரசியல் விழா அல்ல, அதனால்தான் வைகோ  கண்கலங்கி என் கையை குலுக்கினார். எல்லோருக்குள்ளும் அந்த உணர்வு இருக்கிறது, இந்த மனிதர்கள் என் உறவன்றி வேறென்ன? யாருமே எங்களுக்கு எதிரி இல்லை நாங்கள் எதிர்ப்பது தனி மனிதர்களை அல்ல, தனி மனிதர்களின் அவசர சட்டங்களையும் அவசர திட்டங்களையும் சுயநல திட்டங்களையும் தான்.

இவற்றை எல்லாம் மாற்றுவதற்காக நாம் கஷ்டபட்டு வந்த பாதையை 15 வருடத்தில் மாற்றிவிட முடியுமா? இல்லை 25 வருடத்தில்தான் மாற்றிட முடியுமா? முடியாது என்கிறேன் நான்.

இந்தியாவெங்கிலும் தலைவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் யாரும் கட்சி மாற வேண்டிய அவசியம் இல்லை. இருக்கும் இடத்திலேயே இருங்கள் உங்கள் மனசாட்சியை கேட்டு பாருங்கள். ஆள் மாறிவிடுவீர்கள் கட்சி காணாமல் போய்விடும். நான் கோபத்தில் பேசுவதாக நினைக்க வேண்டாம் யோசித்துதான் பேசுகிறேன். குறிப்பெடுக்க எனக்கு அம்பேத்கர் இருக்கிறார் பெரியார் இருக்கிறார். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக எப்படி பேச வேண்டும் என பாடம் எடுக்க காந்தி இருக்கிறார்.

மதுரையில் மறவோம் நிகழ்ச்சி

இரண்டாவது இந்திய சுதந்திர போராட்டம் துவங்கிவிட்டது. அதற்கு எதிர்ப்பு குரல் இங்கிருந்து அன்றி வேறு எங்கிருந்து கேட்கும். அதை நீங்கள் மதுரை என்று எடுத்துக்கொண்டாலும் சரி மங்கம்மாள் அரண்மனை என்று எடுத்துக்கொண்டாலும் சரி காந்தி மண்டபம் என்று எடுத்துக்கொண்டாலும் சரி… இது நம் குரல் இது இவ்வாறாகவே கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் என் கொடியை எல்லாம் கீழே வைத்துவிட்டு என் அன்பை மாத்திரம் ஏந்தி வந்திருக்கிறேன்.

என் கட்சிக்காரர்கள் இதற்கு இதை இப்படி நடத்த வேண்டும் அப்படி நடத்த வேண்டுமே என எல்லாவற்றையும்  நடத்திவிட்டு பின்வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள். இந்திய நாட்டை சுமக்க எத்தனை தோள்கள் இருக்கிறது பாருங்கள். அதில் எனக்கு கடை நிலை ஊழியன் பதவி கிடைத்தாலும் மிகவும் மகிழ்வேன்.

மதுரையில் மறவோம் நிகழ்ச்சி

வெறும் நற்பணி கூட்டமாக வெறும் ரசிகர் கூட்டமாக இருந்த உங்களை 40 ஆண்டுக்காலம் செதுக்கி மேடை ஏற்றி இருக்கிறேன். இதுதான் மேடை என்று நினைக்காதீர்கள். அதுவும் மேடைதான், நான் சொன்ன சத்தியத்தை நிறைவேற்றிவிட்டேன். உங்களை பெரிய மனிதர்கள் அவையில் அமர வைப்பேன் என்று 40 வருடங்களுக்கு முன்னால் சொன்னேன். இதோ வந்து விட்டது, இனியும் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் நாம்” என்றார்

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *