திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று(மே. 15) பரவலாக கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு சென்ற அரசுப் பேருந்து, திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் அமைந்துள்ள ரயில்வே தரைப்பாலத்தில் சென்றுகொண்டிருந்த போது அங்கே பாய்ந்தோடிய வெள்ளத்தில் சிக்கிக் கொண்டு தத்தளித்துள்ளது. பேருந்தில் சுமார் 40 பேர் பயணித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பேருந்தை முன்னோக்கி இயக்க ஓட்டுநர் முயற்சித்தும் பலனில்லை. தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், பேருந்திலிருந்து வெளியே வர முடியாமல் பரிதவித்த 40 பயணிகளையும் அவசரகால கதவு வழியாக பத்திரமாக மீட்டுள்ளதாகக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
வள்ளியூரில் அமைந்துள்ள ரயில்வே தரைப்பாலம் வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. வள்ளியூர் – திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், திருச்செந்தூர் சாலையில் செல்லும் வாகனங்கள் 10 கி.மீ சுற்றி மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன.
