வெள்ளப் பெருக்கு காரணமாக பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே தென்காசி பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளத்தில் 16 வயது சிறுவன் அடித்துச் செல்லப்பட்டார். சிறுவனைத் தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர், போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, இன்று(மே 17) கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. .
நாளை (மே 18) தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
