Sorting by

×

‘வெள்ளை சட்டையோட போயஸ் கார்டன் பக்கம் போயிடாதீங்க!’ – ‘சின்னம்மா’ முரட்டு பக்தர்களின் அட்ராசிட்டிஸ்!

சட்டமன்றத் தேர்தலில் தன்னுடைய ஆதரவாளர்களை களமிறக்கப்போவதாக கூறியிருக்கும் சசிகலா, இரண்டு நாட்களாக போயஸ்கார்டனில் தனது ஆதரவாளர்களையும் அம்மா தொண்டர்களையும் சந்தித்து வருகிறார். சசிகலாவின் நேற்றைய சந்திப்பை நோட்டமிட போயஸ்கார்டன் பக்கமாக சென்றிருந்தோம்.

சசிகலா ஆதரவாளர்கள்
சசிகலா ஆதரவாளர்கள்

மதியம் இரண்டரை மணி முதலே ஆதரவாளர்கள் வரத் தொடங்கினர். தாய் மண்ணை காக்கும் கட்சி, பழனி பாபாவின் மாணவி, பாரத் மோட்டார் வாகன கட்சி என டிசைன் டிசைனாக பெயர்களை கொண்ட கட்சியினர் சசிகலாவின் ஜெயலலிதா இல்லம் நோக்கி வர ஆரம்பித்தனர். அந்த சமயத்தில் சசிகலாவின் வீட்டுக்கு வெளியே ஹேண்ட்பேக்கோடு ஒரு பெண் திருதிருவென முழித்துக் கொண்டிருக்க ‘கூட்டத்துக்கா அக்கா வந்தீங்க’ என அவரிடம் பேச்சுக்கொடுத்தேன்.

‘திண்டிவனத்துல இருந்து வரேன். எங்க மாவட்டம் பொக்கே வாங்கிட்டு வரேன். உள்ள இருங்கன்னுட்டு போனாரு. ‘ஜெயலலிதா இல்லம்’னு இங்கே போட்டிருக்கு. அம்மா வீடு இங்க இருக்கு. சின்னம்மா வீடு எங்கன்னு தேடிட்டு இருக்கேன்’ என்றார். பதட்டத்தை குறைத்துக் கொண்டு, ‘நீங்க எந்த டீமு டிடிவியா ஓபிஎஸ்ஸா…’ என்றேன்.

சசிகலா வீடு
சசிகலா வீடு

‘நான் அதிமுக’ என்றார். அப்ப ‘எடப்பாடி டீமா’ எனக் கேட்க, ‘அதான் எல்லாரும் சேர்ந்துட்டதா சொன்னாங்களே. இனிமே ஒரே டீமுன்னு சொல்லித்தானே ஊர்ல இருந்து 10 பேரை கூட்டிட்டு வந்தாங்க’ என்றவுடன் அவரின் மாவட்டத்தின் சமயோஜிதம் பிடிபட்டுவிட்டது. ஆள் பிடிப்பதற்காக அணியெல்லாம் ஒன்றாகிவிட்டதாக உருட்டியிருக்கிறார். அவருக்கு வேதா இல்லத்தை காண்பித்துக் கொண்டிருந்த சமயத்திலேயே பொக்கேவுடன் அந்த திண்டிவனம் மாவட்டம் வந்துவிட்டார்.

அம்மாவின் தொண்டர்களுக்கு சசிகலாவின் வீடு எங்கே இருக்கிறதென தெரியாமல் இருந்தால் கூட பரவாயில்லை, ஆனால் பலருக்கும் அவர்களின் அம்மாவின் வீடே நியாபகம் இல்லை என்பதுதான் ஷாக். ‘அம்மா வீட்டுக்கு பக்கத்து வீடுன்னு சொல்றேன். அப்புறமும் ஏன்ணே பக்கத்து தெருவுல போயி முட்டிட்டு இருக்கீங்க’ என அம்மாவின் தொண்டர்களுக்கே போயஸ்கார்டனுக்குள் வழி சொல்லி அழைத்துக் கொண்டிருந்தனர் சசிகலாவின் உதவியாளர்கள்.

சசிகலா ஆதரவாளர்கள்
சசிகலா ஆதரவாளர்கள்

ஆதரவாளர்களை வராண்டாவில் சேர் போட்டு அமர வைத்து காபி, டீ பரிமாறிக் கொண்டிருந்தனர். பத்து பத்து பேராக அழைத்து சின்னம்மா பேசுவார் என உதவியாளர்கள் தகவல் சொல்லிவிட்டு போனர். இடையில் அனைவருக்கும் ஒரு பார்ம் கொடுத்து அதிமுகவிலிருந்து வருகிறீர்கள் எனில் எத்தனை ஆண்டுகள் எந்தெந்த பதவிகளில் இருந்தீர்கள் என்று ஒரு கேள்வியும் மாற்றுக்கட்சியாக இருந்தால் எந்தக்கட்சி என்ன பதவி என கேட்டு நிரப்பிக் கொண்டிருந்தனர்.

உடம்பெல்லாம் திருநீறு பூசிக்கொண்டு ஒரு சாமியாரை திருவள்ளூர் அமமுக மா.செ அழைத்து வந்திருந்தார். நிர்வாகிகள் சந்திப்பிலேயே எதுவும் யாகம் வளர்த்து தமிழக அரசியலில் புயல் வீச செய்யப்போகிறார்களோ என பகீரென்றது. என்னவென விசாரித்ததில், ‘திருவள்ளூரின் தண்டலத்தில் உள்ள தடுத்தாட் கொண்டீஸ்வரர் கோயிலில் சிறப்புப் பூஜைகளை செய்து சின்னம்மாவுக்கு பிரசாதத்தை கொண்டு வந்திருக்கிறோம். அதைக் கொடுத்துவிட்டு அமாவாசையில் அடுத்த பூஜைக்கான ஆர்டரையும் வாங்கிவிட்டு செல்லலாம் என வந்திருக்கிறோம்’ என்றனர்.

‘என்ன பூஜை?’ எனக் கேட்க, ‘மிளகாயை தீயில் இட்டு தடைகள் நீங்கி எதிரிகளின் குயுக்திகள் விலகி விஸ்வரூபம் எடுக்க நிகும்பலா யாகம் செய்யச் சொல்லி சின்னம்மா கேட்டிருந்தார். அதை மட்டும் செய்துவிட்டால் இந்த எலெக்சன் சின்னம்மாவுக்கு அமோகமாக இருக்கும்’ என்றார். அருகிலிருந்த இன்னொரு ஆதரவாளர், ‘யாகத்துக்கு அப்புறம் சின்னம்மா சி.எம் ஆகுறதை யாராலயும் தடுக்க முடியாது’ என ஒரே போடாக போட்டார்.

சசிகலா ஆதரவாளர்கள்
சசிகலா ஆதரவாளர்கள்

சசிகலாவின் வீட்டு முன்பாக விவேக்குக்கு சொந்தமான தனியார் செய்தி சேனலின் வண்டி எப்போதும் நிறுத்தப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சமாக 3-4 யூனிட்களுடன் அந்த வண்டி காலையிலிருந்து இரவு வரைக்கும் அங்கேயே நிற்க வேண்டும். அலைகடலென திரண்டு வரும் சின்னம்மாவின் ஆதரவாளர்கள் யாரையும் விடாமல் படம் பிடுத்து பேட்டி எடுத்து போட வேண்டுமென்பது மேலிடத்திம் ஸ்ட்ரிக்ட் ஆர்டராம். டிடிவி முகாமிலிருந்து விலகிய ஜீவிதா நாச்சியார் சம்பந்தப்பட்ட இந்த சேனலில் சின்னம்மா குறித்து ஒன்றிரண்டு வார்த்தைகள் குறைவாகப் பேசிவிட்டு பக்கத்து சேனலில் அதிகம் பேசிவிட்டதால் சசி டென்ஷாகிவிட்டதாக கிசுகிசுத்துக் கொண்டனர் ஜெயலிலதா இல்லத்தில். அதனால் இன்றைக்கு மட்டும் அந்த தனியார் இலை சேனலில் 6 கேமரா மேன்கள் 3 ரிப்போர்ட்டர்கள் என முழு பலத்தையும் கவரேஜூக்கு இறக்கியிருக்கிறார்கள்.

மதுரையிலிருந்து வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வந்திருந்தார். எல்லா சேனல்களுக்கும் பொதுவாக அவர் பேசிவிட, அதில் கொஞ்சம் பன்ச் மிஸ் ஆவதை கவனித்த சசியின் உதவியாளர்கள், ‘நம்ம சேனல வரை வைக்குறோம். ரெண்டு மூணு பிட்டு சேர்த்து போடுங்க’ என பசும்பொன் பாண்டியனின் காதில் கிசுகிசுத்தனர். அதுக்கென்ன சிறப்பா செய்திடுவோம்…என இலை மைக்கைப் பிடித்த பசும்பொன் பாண்டியன், ‘கொஞ்ச நாளைக்கு முன்னாடி எங்க அம்மா இறந்துட்டாங்க. நான் எத்தனையோ அரசியல்வாதிங்க கூட பழகிருக்கேன். ஆனா, சின்னம்மாதான் எனக்கு உடனே போன் போட்டாங்க. ‘கவலைப்படாதீங்க பாண்டியன். அரசியல் சூழல் பரபரப்பா இருக்கு. நானும் பிஸியா இருக்கேன். இல்லன்னா நேர்ல வந்திருப்பேன். நீங்க குடும்பத்தோட சென்னைக்கு நேர்ல வாங்க.

சசிகலா ஆதரவாளர்கள்
சசிகலா ஆதரவாளர்கள்

நான் ஆறுதல் சொல்றேன் என்றார்’ என பாண்டியன் எமோஷனல் ஆக, நமக்கு ஆஹா இது அதுல்ல… என பனையூர் தலைவரின் ரெசார்ட் ஆறுதல் நியாபகம் வந்தது. ‘ஆறுதல் பெற்றுவிட்டு அரசியல் பேசினோம்’ என்றவர். ‘சின்னம்மா கை காட்டுற்வர்தான் சி.எம். டிடிவியெல்லாம் ஒரு துரோகிங்க. அதிமுகவை அழிக்கலாம்னு பாஜக நினைக்குது. சின்னம்மா இருக்குற வரைக்கும் அது முடியாது. டெல்லி ஏகாதிபத்தியத்துக்கு புரட்சித் தாய் பாடம் புகட்டுவார்’ என எக்கச்சக்க பிட்டுகளை சேர்த்துப் போட சசியின் ஆதரவாளர்களே கொஞ்சம் வெடவெடத்து விட்டனர்.

சசியின் சந்திப்பு நடந்த இல்லத்துக்குள் செல்ல இரண்டே இரண்டு பாஸ்தான். ஒன்று இலை டிவியாக இருக்க வேண்டும் அல்லது வெள்ளைச் சட்டை போட்டிருக்க வேண்டும். ‘அம்மாவுக்காக நான் பாட்டு போட்டிருக்கேன். படம் பண்ணிருக்கேன். அந்த எடப்பாடி என்னயவே போட்டுத் தள்ள பார்க்குறான். அவனுக்கு நான் போட்டியா வந்துடுவன்னு பயம். அவனுக்கு அரசியல்னா என்னன்னு காட்டாம விடமாட்டேன். இதுசம்பந்தமா சின்னம்மாவை சந்திச்சு பேசப்போறேன்’ என ‘தங்கத்தலைவி புரட்சித்தலைவி அம்மா’ என ஒரு பாடலை போனில் நமக்கு போட்டுக்காட்டிவிட்டு சசியை சந்திக்க உள்ளே சென்றார். வெள்ளைச் சட்டை போட்டிருந்ததால் அவரை எந்த கேள்வியும் கேட்காமல் உள்ளே விட்டு விட்டார்கள். நல்லவேளையாக நாம் கலர் சட்டை போட்டிருந்தோம்!

சசிகலா வீடு
சசிகலா வீடு

இன்றும் தன்னுடைய முரட்டு ஆதரவாளர்களின் சந்திப்பை சசிகலா தொடரவிருப்பதாக சொல்கிறார்கள்.

போயஸ்கார்டன் பக்கமாக செல்பவர்கள் வெள்ளைச்சட்டையை தவிர்ப்பது நல்லது!

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *