பிரசாரம், பேரணி, வாக்குசேகரிப்பு எனத் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. களத்தில் நேருக்குநேர் மோதும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யத் தொடங்கிவிட்டார்கள்.
அதன்படி, வேலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் த.வெ.க வேட்பாளர் வினோத் கண்ணன் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.சோனியா ஆகிய இருவரும் நேற்றைய தினம் தங்களின் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.
உறுதிமொழி பத்திரத்துடன் அவர்கள் கணக்கு காட்டியுள்ள சொத்து மதிப்பும், தற்போது வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வினோத் கண்ணன் தேர்தல் களத்துக்கு முதல்முறையாக வந்திருக்கிறார். தனது பெயரில் அசையும் சொத்துகள் ரூ.1,49,29,432 மதிப்பில் இருப்பதாகவும், தனது மனைவி எழிலரசி பெயரில் 54,94,436 ரூபாய் மதிப்பிலும், மகள் ஸ்ரீவித்யா பெயரில் 7,00,400 ரூபாய்க்கு அசையும் சொத்துகள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் வினோத் கண்ணன்.

கையில் ரொக்கமாக தன்னிடம் 1,25,550 ரூபாயும், தன் மனைவியிடம் 10,000 ரூபாய் இருப்பதாகவும், தனது பெயரில் ஒரு மினி டிரக் மற்றும் 7 கார்கள் இருக்கின்றன எனவும் குறிப்பிட்டிருக்கிறார். இவை அனைத்தும், அசையும் சொத்துகள் பட்டியலில் அடக்கமாகிறது.
அதேபோல, அசையா சொத்துகள் தன் பெயரில் ரூ.62,68,000 மதிப்பிலும், தனது மனைவி மற்றும் தனது மகள் பெயரில் அசையா சொத்துகள் எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார். ஆக, அசையும், அசையா சொத்துகள் மொத்தமாக 2,73,92,268 ரூபாய்க்கு இருப்பதாக கணக்குக் காட்டியிருக்கிறார் வினோத் கண்ணன்.
அதேபோல, தனது பெயரிலும் தன் மனைவி பெயரிலும் சேர்த்து தொழில் ரீதியாக 1,12,03,537 ரூபாய் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் வினோத் கண்ணன். இதில், முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில், வினோத் கண்ணனின் பின்னணி க்ளியராக இருக்கிறது.
எந்தவொரு வழக்கு விவகாரங்களிலும் அவரின் பெயர் இதுநாள் வரை பதிவாகவில்லை. `அலமா அபாகஸ்’ கல்வி பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார் வினோத் கண்ணன். அவரின் மனைவி எழிலரசி `ஶ்ரீ மெமென்டோஸ்’ விற்பனையகம் நடத்துகிறார்.
பூர்வீக சொத்து இல்லாமல், படிப்படியாக பிசினஸ் கைகொடுத்ததால் இந்த உயரத்தை எட்டியிருக்கிறார் வினோத் கண்ணன். வேட்பு மனுத் தாக்கல் செய்த கையோடு, வேலூர் தொகுதியில் தீவிர பிரசாரத்தையும் தொடங்கி, வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து வாக்குசேகரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார் வினோத் கண்ணன்.

வேலூர் தொகுதியில் களமிறங்கியிருக்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.சோனியா ஓர் இல்லத்தரசி. அவரின் கணவர் விஜய் வாகன ஓட்டுநராக இருக்கிறார். திருமணத்துக்குப் பிறகு மனைவியை உயர்க்கல்வி படிக்கவைக்க விருப்பப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் பி.ஏ தமிழ் பட்டப்படிப்பில் சேர்த்துவிட்டிருக்கிறார். வரும் 2026-2027 கல்வியாண்டில் மூன்றாம் ஆண்டு செல்லவிருக்கிறார் சோனியா.
இந்த நிலையில், அசையும் சொத்து தனது பெயரில் 8,57,000 ரூபாய் மதிப்பிலும், தன் கணவர் பெயரில் ரூ.20,30,000 மதிப்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
அசையா சொத்துகள் எதுவுமே இல்லை எனவும், தனது வங்கிக் கணக்கில் வெறும் 1,500 ரூபாய் மட்டுமே வைப்புத் தொகையாக இருப்பதாகவும் உறுதியளித்திருக்கிறார் சோனியா.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
