ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி-யாக இருப்பவர், ஸ்வாதி மாலிவால். டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவராகவும் இவர் இருந்தவர். ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் பரபரப்பாக நடைபெற்றுவரும் சூழலில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டார் என்ற விவகாரம் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் மே 13-ம் தேதி தாக்குதல் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஸ்வாதி மாலிவால், ‘முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது, கெஜ்ரிவாலின் செயலாளர் பிபாவ் குமார் தன்னைத் தாக்கினார்’ என்று தெரிவித்திருக்கிறார்.
அப்போது, நேரில் காவல் நிலையம் சென்ற ஸ்வாதி மாலிவால் முறைப்படியான புகார் எதுவும் கொடுக்கவில்லை. ஆனாலும், ஸ்வாதி மாலிவாலைத் தாக்கியதாக, அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளரான பிபாவ் குமார் மீது மே 16-ம் தேதி பல்வேறு ஐ.பி.சி பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.
ஸ்வாதி மாலிவால்
தான் தாக்கப்பட்டது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ஸ்வாதி மாலிவால், ‘எனக்கு நடந்த கொடுமை மோசமானது. நடந்தவற்றை காவல்துறையிடம் தெரிவித்திருக்கிறேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன். கடந்த சில நாள்கள் எனக்கு மிகவும் கடினமான நாள்களாக இருந்தன. இன்னொரு கட்சியின் அறிவுறுத்தலின் படி நான் நடந்துகொள்வதாக சிலர் சொல்கிறார்கள். அவர்களை கடவுள் மகிழ்ச்சியாக வைத்திருக்கட்டும்’ என்று கூறியிருக்கிறார்.
மேலும், `நாட்டில் முக்கியமான தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஸ்வாதி மாலிவாலைவிட நாட்டின் பிரச்னைகள் தான் முக்கியம். இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று பா.ஜ.க-வினரைக் கேட்டுக்கொள்கிறேன்’ என்றும் ஸ்வாதி மாலிவால் கூறியிருக்கிறார்.
ஸ்வாதி மாலிவால்
நடந்த சம்பவம் குறித்து ஸ்வாதி மாலிவாலிடம் ஐந்து மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்ற டெல்லி போலீஸார், அது குறித்து டெல்லி காவல்துறை ஆணையரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
ஸ்வாதி மாலிவால் போலீஸாரிடம், “அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திப்பதற்காக ஓர் அறையில் காத்திருந்தேன். அப்போது, திடீரென அந்த அறைக்குள் பிபாவ் குமார் நுழைந்து, என்னை கண்டபடி திட்ட ஆரம்பித்தார். பிறகு, என் கன்னத்தில் பல தடவை அவர் அறைந்தார். உடனே, கூச்சல் போட்டு நான், அறையிலிருந்து வெளியே போ என்று கத்தினேன். ஆனால், அதன் பிறகும் அவர் தொடர்ந்து என்னைத் தாக்கினார்’ என்று வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
கெஜ்ரிவால்
“ஸ்வாதி மாலிவாலின் முகம், மார்பு, வயிறு ஆகியவற்றில் பிபாவ் குமார் தாக்கியிருக்கிறார்” என்று போலீஸார் கூறுகிறார்கள்.
இதற்கிடையில், ஸ்வாதி மாலிவாலின் முன்னாள் கணவரான நவீன் ஜெய்ஹிந்த், ‘முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதால், கெஜ்ரிவால் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஸ்வாதி மாலிவால் உயிருக்கு ஆபத்து இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார்.
கட்சி மாறி வந்தவர்களில் 106 பேருக்கு சீட் – பாஜக-வின் ‘பலே’ வியூகம் பலன் தருமா?!
இந்த விவகாரம் ஆம் ஆத்மிக்கு தேர்தலில் பின்னடைவு ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்புறது. காரணம் பாஜகவினர், `கெஜ்ரிவால் இந்த விவகாரத்தில் இன்னும் பதில் சொல்லாமல் இருக்கிறார்’ என்றும், `இன்னமும் பிபாவ் குமாரை தன்னுடனே வைத்துகொண்டு செல்கிறார்’ என்றும் குற்றம்சாட்டுகிறார்கள்.
எனினும் இந்த விவகாரம் தேர்தல் களத்தில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்லிவிட முடியாது. ஏனினில், கெஜ்ரிவால் இந்த விவகாரத்தில் நேரடியாக தொடர்புபடுத்தப்படவில்லை. ஆனால், புதிதாக ஒரு சிக்கலை அவர் சந்திக்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மௌனம் காக்கிறார் என்ற விமர்சனம் எழுந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி-யான சஞ்சய் சிங், ‘ஸ்வாதி மாலிவாலிடம் பிபாவ் குமார் தவறாக நடந்துகொண்டார். ஆகவே, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கெஜ்ரிவால் உத்தரவிட்டிருக்கிறார்’ என்றார்.
அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கெஜ்ரிவால், சமீபத்தில்தான் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்தார். வந்த பிறகு, பிரதமர் மோடியையும், பா.ஜ.க-வையும் கடுமையாக விமர்சித்துவருகிறார். தற்போது, உ.பி உள்ளிட்ட பல மாநிலங்களில் தீவிரமாக அவர் தேர்தல் பிரசாரம் செய்துவருகிறார். இந்தச் சூழலில், தற்போது எஃப்.ஐ.ஆர் தகவல்களும் வெளியாகி பரபரப்பை கூட்டியிருக்கிறது. மேலும் டெல்லி காவல்துறை இந்த விவகாரத்தில் கெஜ்ரிவால் வீட்டுக்கே சென்று விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு சோதனையாக ஸ்வாதி மாலிவால் விவகாரம் வந்துசேர்ந்திருக்கிறது.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88
