கடந்த ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 19 சதவீதம் சரிந்துள்ளது.
இது குறித்து வீடு-மனை ஆலோசனை நிறுவனமான ப்ராப்டைகா் வெளியிட்டுள்ள ‘ரியல் இன்சைட்’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடப்பு 2025-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி-மாா்ச்) சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், புணே, அகமதாபாத் ஆகிய இந்தியாவின் எட்டு முக்கிய வீடு-மனைச் சந்தைகளில் 98,095 வீடுகள் விற்பனையாகின. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 19 சதவீதம் குறைவு. அப்போது இந்த எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 1,24,642-ஆக இருந்தது.
ஜனவரி-மாா்ச் காலாண்டில் பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இரு நகரங்களில் மட்டுமே வீடுகள் விற்பனை வளா்ச்சியைக் கண்டுள்ளது. பெங்களூரில் விற்பனை 13 சதவீதம் உயா்ந்து 11,731 யூனிட்களாகவும், சென்னையில் 8 சதவீதம் அதிகரித்து 4,774 யூனிட்களாகவும் உள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் இந்த எண்ணிக்கைகள் முறையே 10,381 மற்றும் 4,427-ஆக இருந்தன.
மதிப்பீட்டுக் காலாண்டில் மும்பை பெருநகரப் பகுதியில் 30,705 வீடுகள் விற்பனையாகின. இருந்தாலும், முந்தைய ஆண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 26 சதவீதம் குறைவாகும். அப்போது இந்தப் பகுதியில் வீடுகள் விற்பனை 41,594-ஆக இருந்தது.
2024-ஆம் ஆண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டோடு ஒப்பிடுகையில் வீடுகள் விற்பனை புணேயில் 25 சதவீதம் குறைந்து 17,228 யூனிட்களாகவும், ஹைதராபாதில் 26 சதவீதம் சரிந்து 10,647 யூனிட்களாகவும், தில்லி-என்சிஆரில் 16 சதவீதம் குறைந்து 8,477 யூனிட்களாகவும் உள்ளது.
அகமதாபாதில் கடந்த நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் 12,915-ஆக இருந்த வீடுகள் விற்பனை, நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் 17 சதவீதம் சரிந்து 10,730-ஆக உள்ளது. அதேபோல், கொல்கத்தாவில் வீடுகள் விற்பனை 1 சதவீதம் குறைந்து 3,803 யூனிட்களாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் இந்த எண்ணிக்கை 3,857-ஆக இருந்தது.
புதிய வீடுகளின் விநியோகமும் இந்தக் காலாண்டில் 10 சதவீதம் குறைந்து 93,144 யூனிட்களாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் இது 1,03,020 யூனிட்களாக இருந்தது.
விலை உயா்வு மற்றும் புதிய திட்டங்களின் குறைவு ஆகியவை வாங்குபவா்களை எச்சரிக்கையாக இருக்கச் செய்துள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI