Sorting by

×

`தமிழ்நாட்டிற்கும், தேசிய ஜனநாயக் கூட்டணிக்கும் இடையேதான் போட்டி’ என்று திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார் திமுக தலைவர் ஸ்டாலின்.

`நடிகர்கள் பின்னால் திரளும் கூட்டம் வாக்குகளாக மாறாது. கூடிக்கலையும் கூட்டம்’ என்று விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் விமர்சனத்திற்கு ஆளாகிறது.

2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில், இந்த இரண்டு கருத்துக்களை மையமாக வைத்தே ஆதரவு, எதிர்ப்பு பரப்புரை யுக்திகள் வகுக்கப்படுகின்றன. இதே போன்றதொரு காட்சிகள் இந்திய விடுதலைக்குப் பின்னர் நடந்த, இரண்டாவது பொதுத்தேர்தலிலும் எதிரொலித்தது. 

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை நோக்கி, “வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது” என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தலை சந்தித்தது திராவிட முன்னேற்றக் கழகம். 

அண்ணா, கருணாநிதி

நாடகம் ஆடி வந்தவர்கள் தேர்தலில் குதித்துள்ளனர். சினிமா படங்களுக்கு வருகின்ற கூட்டத்தை, மக்களின் ஆதரவு அதிகம் இருப்பதாக கருதுகிறார்கள் என்று திமுகவை நோக்கி விமர்சனமாக முன் வைத்தது காங்கிரஸ்.

முதல் பொதுத்தேர்தலில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என்று இருந்த தேர்தல் களம், 1957 தேர்தலில் திமுகவின் அரசியல் வருகையால் சற்றே மாறியிருந்தது. காமராஜர், ராஜாஜி, அண்ணாதுரை யார் முதலமைச்சராக வர வாய்ப்பிருக்கிறது என்று களம் கட்டமைக்கப்பட்டது. 

குலக்கல்வித் திட்டத்திற்கு எழுந்த எதிர்ப்புகள் காரணமாக, ராஜாஜி ராஜினாமா செய்திருந்தார். 1954ஆம் ஆண்டில் காமராஜர் முதலமைச்சர் ஆகியிருந்தார். 

பொதுத்தேர்தலில் பங்கேற்க வேண்டுமென்று, 1956 மே 17ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் நடைபெற்ற, திருச்சி திமுக மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதன் முதலாக திமுக போட்டியில் குதித்தது. 

1957 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 முதல் மார்ச் 1ஆம் தேதி வரை தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலும், இந்திய நாடாளுமன்ற பொதுத்தேர்தலும் ஒன்றாக நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானது. 

மாநில உரிமைகள் முதன்மையான பிரச்சனையாக தேர்தலில் எதிரொலித்தது. ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள், இந்தி எதிர்ப்பு போராட்டங்கள், டால்மியாபுரம் ரயில் மறியல், தமிழகத்தின் எல்லை பிரிப்பு, தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி, உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனார் மரணம், இளைஞர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான மனநிலையை மக்கள் மத்தியில் உருவாக்கியிருந்தது. 

தமிழ்நாட்டிற்கு தேர்தல் பரப்புரைக்காக வந்த பிரதமர் நேரு, ”ஒரு பாகிஸ்தான் உருவானது போதும், என்ன நடந்தாலும் இனி இந்தியா துண்டாடப்படாது. திராவிடப் பிரதேசம் அமைப்பதாக முழக்கமிடும் வகுப்புவாத சக்திகளைப் புறக்கணிப்போம்” என்று திமுகவை நேரடியாகத் தாக்கிப் பேசினார்.

நேரு

அரசியல் ஆடுபுலி ஆட்டத்தில், எந்த காங்கிரஸ் கட்சியை அழிக்க வேண்டும் என்று பெரியார் குரல் கொடுத்தாரோ, அதே காங்கிரஸ் கட்சியை ஆதரித்தார். ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை ரத்து செய்த பச்சைத் தமிழன் காமராஜரை ஆதரிக்கிறேன் என்று பெரியார் பேசினார். காஞ்சிபுரத்தில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அண்ணாதுரைக்கு எதிராக, காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் சீனுவாசய்யரை ஆதரித்தார்.

வெத்து வேட்டு திமுக, அபாயகரமான கம்யூனிஸ்ட் என்று பரப்புரை செய்தார் காமராஜர். 

குடியாத்தம் இடைத்தேர்தலில், “குலக்கொழுந்தே குணாளா” என்று காமராஜரை ஆதரித்த அண்ணா, இப்போது எதிரணியில் இருந்தார். திமுகவோ இளைஞர்கள் மத்தியில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. 

1952ஆம் ஆண்டில் வெளியான பராசக்தி திரைப்படம், செவாலியே சிவாஜிகணேசன் நடிப்பில், கலைஞர் கருணாநிதி வசனத்தில் பெருவெற்றி பெற்றிருந்தது. அப்படத்தின் வசனங்கள் காங்கிரஸ் எதிர்ப்பை, திமுக ஆதரவை விதைத்திருந்தது.

என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்த பணம் என்ற படத்தில் “தீனா மூனா கானா” என்ற பாடல் பிரபலமடைந்து திமுக ஆதரவு நிலைப்பாட்டை உருவாக்கியிருந்தது. அடுத்ததாக, எம்ஜிஆர் நடித்த சக்கரவர்த்தி திருமகள் திரைப்படம் வெளிவந்து மக்களின் ஆதரவைப் பெற்றது. இத்திரைப்படத்தில் உதயசூரியன் என்பது கதாநாயகன் பெயர். இது மட்டுமின்றி கல்வி நிலையங்களின் சிறப்பு பேச்சாளர்களாக திமுகவினர் இருந்தனர். கிராமங்கள் தோறும் நாடகம் போட்டனர். வீதிவீதியாக மேடை போட்டு, தமிழ், தமிழர் நலனுக்கான குரலை உயர்த்தினர். 

1955 ஜனவரியில் சென்னையில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 60வது மாநாடும், அந்த ஆவடி காங்கிரஸ் மாநாட்டில் சோசலிசபாணி சமுதாயத்தை அமைக்க வேண்டுமென நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் காமராஜர் மீதான மதிப்பை அரசியல் வட்டாரத்தில் அதிகரித்திருந்தது.

1956ஆம் ஆண்டில் 29,017 பள்ளிகளில் சுமார் 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காமராஜர் அறிமுகம் செய்த மதிய உணவுத் திட்டம்,  கிராமங்கள் தோறும் தொடக்கப் பள்ளி திட்டம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. 

காமராஜர், அண்ணா

காங்கிரஸ் கட்சியினர் காளைமாடு சின்னத்திற்க்கு ஓட்டு போடச்சொல்லி பணம் கொடுப்பதாக விமர்சித்து, ஒத்த ரூபா தாரேன் என்ற பாவலர் வரதராசன் பாடல்கள் மற்றும் வில்லுப்பாட்டு மூலமாக கம்யூனிஸ்ட் கட்சியினர் பரப்புரை செய்தனர். காஞ்சிபுரத்தில் அண்ணாவையும், சேலத்தில் நெடுஞ்செழியனையும் தோற்கடிக்க கம்யூனிஸ்ட் கட்சி வியூகம் வகுத்தது. 

ஆனால், கள செயல்பாட்டாளர்கள் இல்லாமல் கம்யூனிஸ்ட் தேர்தலை சந்தித்தது. நெல்லை சதி வழக்கு, திருச்சி, சேலம், ராமநாதபுரம் சதி வழக்குகளில் தோழர்கள் பலர் சிறையில் இருந்தனர். கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்களான, பி.ராமமூர்த்தி, பி,சீனிவாசராவ், மணலி கந்தசாமி, கே.பாலதண்டாயுதம் உள்ளிட்டோர் தலைமறைவாக இருந்தனர். 

தேர்தல் முடிவுகள் வெளியானபோது, 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கே.டி.கே. தங்கமணி, பார்வதி கிருஷ்ணன் ஆகியோர் மக்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். திமுகவில் முதன் முறையாக நாமக்கல் ஈ.வி.கே. சம்பத், திருவண்ணாமலை ஆர். தர்மலிங்கம் ஆகியோர் நாடாளுமன்றத் தேர்தலில் வென்றனர். 

சட்டமன்ற தேர்தலில், 204 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 151 இடங்களில் வெற்றி பெற்றதால், காமராஜர் மீண்டும் முதலமைச்சர் ஆனார். சாத்தூர் தொகுதியில் இருந்து காமராஜர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். 

13 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்திருந்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்த முறை 4 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. வாக்கு விழுக்காடும் குறைந்தது.

சட்டமன்றத் தேர்தலை முதன் முறையாக சந்தித்த திமுக, 15 இடங்களில் வென்று தனது தேர்தல் அரசியல் கணக்கைத் தொடங்கியிருந்தது. 

அறிஞர் அண்ணா

காஞ்சிபுரத்தில் அண்ணா, குளித்தலையில் கருணாநிதி, எழும்பூரில் அன்பழகன், திருவண்ணாமலையில் ப.உ.சண்முகம், வி.எஸ்.சந்தானம், ஆயிரம் விளக்கு ஆசைத்தம்பி, பெரம்பூர் சத்தியவாணிமுத்து, போளூர் தொகுதியில் களம்பூர் அண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆனந்தன், கள்ளக்குறிச்சி டி.நடராசன், ஆத்தூர் இருசப்பன், ஆத்தூர் எம்.பி. சுப்பிரமணியம், வளவனூர் ஏ.கோவிந்தசாமி,  வேலூர் எம்.பி.சாரதி, விருத்தாச்சலம் எம்.செல்வராசு ஆகிய 15 பேர் திமுகவில் வெற்றி பெற்று இருந்தாலும், கட்சியின் முக்கியத் தலைவரான நெடுஞ்செழியன் சேலத்தில் கோழி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்திருந்தார்.

இரட்டை உறுப்பினர் தேர்வு இருந்த தேர்தல், அதில் திருவண்ணாமலை, ஆத்தூர், கள்ளக்குறிச்சி இரண்டு உறுப்பினர்களும் திமுகவாக தேர்வாகியிருந்தனர். 

 திமுகவிற்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இல்லை. காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ஆனால், அதிக வாக்குகள் பெற்று, இரண்டாமிடம் பிடித்தது திமுக. தேசிய கட்சிகளுக்கு மாற்றாக உதயசூரியன் உதித்தது 1957 சட்டமன்ற பொதுத் தேர்தலில்தான். திரைக்கவர்ச்சி என்று விமர்சித்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தது திமுகவின் தேசிய அரசியலுக்கு எதிரான தேர்தல் வெற்றி. 

1957 ஏப்ரல் 13 பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சர் ஆனார். முதன் முதலாக சட்டமன்றத்தில் நுழைந்த திமுக 1957 மே 7 அன்று கொண்டு வந்த முதல் தீர்மானம், சென்னை மாநிலம் என்பதை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பதுதான். 15 உறுப்பினர்கள் கொண்ட திமுகவின் தீர்மானத்திற்கு 42 வாக்குகள் கிடைத்தன. 127 வாக்குகள் எதிராக இருந்ததால் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. ஆனால், அங்குதான் திமுகவின் அரசியல் ஆடுபுலி ஆட்டம் அடுத்தகட்டப் பாய்ச்சலைத் தொடங்கியது.!

(ஆடுபுலி ஆட்டம் தொடரும்)

Loading…

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *