Sorting by

×

மும்பை மாநகராட்சி தேர்தலில் தனித்து பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று மேயர் பதவியை பிடிக்க வேண்டும் என்று பா.ஜ.க கணக்கு போட்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி இருந்தது. சமீபத்தில் நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 227 வார்டுகளில் 89 வார்டுகளில் மட்டுமே பா.ஜ.க வெற்றி பெற்றது. மேயர் தேர்தலில் வெற்றி பெற 114 கவுன்சிலர்களின் ஆதரவு தேவையாகும். ஆனால் அந்த அளவுக்கு பா.ஜ.கவிடம் கவுன்சிலர்கள் இல்லை. இதையடுத்து கூட்டணி கட்சியான சிவசேனா(ஷிண்டே)வின் ஆதரவை பெற வேண்டிய நிலைக்கு பா.ஜ.க தள்ளப்பட்டுள்ளது.

சிவசேனா(ஷிண்டே) மும்பை மாநகராட்சி தேர்தலில் 29 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. இரண்டு கட்சி கவுன்சிலர்களையும் சேர்த்தால் 118 பேரின் ஆதரவு கிடைக்கிறது. இது தவிர தனித்து போட்டியிட்ட அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் சில இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது.

பட்னாவிஸ்

தற்போது தங்களது துணை இல்லாமல் மேயர் பதவியை பா.ஜ.கவால் பிடிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்ட ஏக்நாத் ஷிண்டே, தங்களது கட்சிக்கு 2.5 ஆண்டுக்காலம் மேயர் பதவியை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதுவும் முதல் 2.5 ஆண்டுகள் தங்களுக்கு வேண்டும் என்றும், அடுத்த 2.5 ஆண்டுகளை பா.ஜ.க எடுத்துக்கொள்ளட்டும் என்று ஏக்நாத் ஷிண்டே பா.ஜ.கவிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது கட்சி கவுன்சிலர்கள் அடியோடு பா.ஜ.கவில் சேர்ந்துவிடக்கூடும் என்று என்ற அச்சத்தில் அனைத்து கவுன்சிலர்களையும் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஏக்நாத் ஷிண்டே தங்க வைத்துள்ளார். அவர்களை ஹோட்டலில் தங்க வைத்த பிறகுதான் ஏக்நாத் ஷிண்டே பா.ஜ.கவிடம் பேரம் பேச ஆரம்பித்து இருக்கிறார். ஆனால் கட்சி கவுன்சிலர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக அவர்களுக்கு மூன்று நாள் பயிற்சி கொடுக்கப்படுவதாகவும், அதற்காகத்தான் அவர்கள் ஹோட்டலில் தங்கி இருப்பதாக ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா தெரிவித்துள்ளது.

இது குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், ”சிவசேனா கவுன்சிலர்களை எங்கள் பக்கம் இழுக்கும் பேச்சுக்கே இடமில்லை. நான் எங்களது கட்சியின் புனே கவுன்சிலர்களை சந்தித்து பேசியது போல் ஏக்நாத் ஷிண்டே தனது கட்சி கவுன்சிலர்களை சந்தித்து பேசி இருக்கலாம். மும்பையில் எங்களது கூட்டணியான மஹாயுதியை சேர்ந்த மேயர் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார். இவ்விவகாரத்தில் நான், ஏக்நாத் ஷிண்டே மற்றும் இரு கட்சி தலைவர்கள் அமர்ந்து பேசி முடிவு எடுக்கப்படும்.

இதில் எங்களுக்குள் எந்த வித கருத்து வேறுபாடும் இல்லை”என்று தெரிவித்தார். இது குறித்து சிவசேனா நிர்வாகி ஒருவர் கூறுகையில், ”மேயரின் பதவிக் காலத்தை 2.5 வருடங்கள் எங்களுக்கு கேட்கிறோம். இது முதல் 2.5 வருடங்களாக இருக்க வேண்டும். பாஜக இரண்டாவது 2.5 வருடங்களை எடுத்துக் கொள்ளலாம். பா.ஜ.க சொந்தமாக மேயர் பதவியை பிடிக்கும் அளவுக்கு இடங்களைப் பெறவில்லை, எனவே அவர்கள் பதவியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். நிலைக்குழுத் தலைவர் பதவி மற்றும் இதர குழுக்களின் தலைவர் பதவிகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் டாவோஸ் நகரில் நடக்கும் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக புறப்பட்டு சென்றுள்ளார். அவர் வந்த பிறகு அடுத்த வாரம் தான் மேயர் பதவி தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வரும் 28ம் தேதி மேயர் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையில் முதல் முறையாக 10 நியமன கவுன்சிலர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர். கட்சிகளிடம் இருக்கும் கவுன்சிலர்களின் எண்ணிக்கைக்கு தக்கபடி நியமன கவுன்சிலர்களை நியமித்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும். பா.ஜ.கவிற்கு 89 கவுன்சிலர்கள் இருப்பதால் அக்கட்சிக்கு அதிகபட்சமாக 4 நியமனக்கவுன்சிலர்கள் கிடைப்பார்கள்

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *