இன்றோடு விருப்ப மனுக்களை வாங்கி முடிக்கிறது அறிவாலயம். சீட்டுக்காக உடன்பிறப்புகள் முட்டி மோதிக் கொண்டிருக்கும் நிலையில், ‘ஐயா நீங்க சீட்டை கட்சிக்காரன் யாருக்கு வேணா கொடுங்க, ஆனா தொகுதியை மட்டும் கம்யூனிஸ்ட்டுக்கு தூக்கி கொடுத்துடாதீங்க!’ என குமுறுகின்றனர் பவானிசாகர் (தனி) தொகுதி உடன்பிறப்புகள்.

பவானிசாகர் தொகுதிக்காக விருப்பமனுவை தாக்கல் செய்துவிட்டு அறிவாலயத்தை சுற்றிக் கொண்டிருந்த சில உடன்பிறப்புகளிடம் பேச்சுக் கொடுத்தோம். ‘2006 இல் கடைசியாக பவானிசாகர் தொகுதியில் திமுக வென்றது. அதன்பிறகு தொகுதி எங்கள் கைக்கு வரவே இல்லை. 2011 இல் அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இருந்தது. கம்யூக்களுக்கு பவானிசாகர் தொகுதி ஒதுக்கப்பட்டது.
பி.எல்.சுந்தரம் என்பவர் போட்டியிட்டு வென்றார். 2016 இல் கம்யூக்கள் மக்கள் நலக் கூட்டணிக்கு தாவி விட்டார்கள். அப்போதும் பி.எல்.சுந்தரம்தான் போட்டியிட்டார். அதிமுக வேட்பாளர் ஈஸ்வரன் 83,000 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றார். சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சத்யா தோற்றார். பி.எல்.சுந்தரம் மட்டும் 27,000 வாக்குகளை பிரித்து திமுகவின் தோல்விக்கு காரணமாக இருந்தார்.
2021 இல் கம்யூக்கள் திமுக கூட்டணிக்கு வந்துவிட்டனர். அப்போதும் தொகுதி கம்யூக்களுக்கே சென்றது. கடந்த தேர்தல்களில் திமுகவை தோற்கடித்த திமுகவின் தோல்விக்கு காரணமாக இருந்த பி.எல்.சுந்தரம்தான் போட்டியிட்டார். அதிமுக சார்பில் பண்ணாரி என்பவர்தான் போட்டியிட்டார். அந்த கட்சிக்குள்ளேயே பலருக்கும் அவரை யாரென்று தெரியாது. அப்படிப்பட்ட வேட்பாளரிடம் பி.எல்.சுந்தரம் தோற்றுப்போனார்.
தொகுதியில் அருந்ததியர்கள்தான் கணிசமாக இருக்கிறார்கள். அப்படியிருக்க தேவேந்திர குல வேளாளரான சுந்தரத்துக்கு எப்படி மக்கள் ஆதரவு தெரிவிப்பார்கள்? கடந்த காலங்களில் திமுகவினருக்கு எதிராகவே வேலை பார்த்ததால் எங்கள் கட்சிக்குள்ளும் அவருக்கு ஒத்துழைக்க யாரும் தயாராக இல்லை. தொகுதியில் கம்யூக்களுக்கு செல்வாக்கே இல்லை. 2016 இல் மக்கள் நலக்கூட்டணியில் அவர்கள் பெற்ற வாக்குகளில் 20-23 ஆயிரம் வாக்குகள் விஜயகாந்துக்காக விழுந்தது. கம்யூக்களுக்கென 4000-5000 வாக்குகள் மட்டுமே இருக்கும். கம்யூக்களுக்கு தொகுதியை வழங்கி பி.எல்.சுந்தரமே மீண்டும் போட்டியிட்டால், இப்போதே எழுதி வைத்துக் கொள்ளுங்கள் அதிமுகவுடன் மறைமுக கூட்டணி அமைத்து நமக்கு தோல்வியை உறுதி செய்துகொடுப்பார்.
ரங்கசாமி, கணேசன், சிற்றரசு, குணசேகரன், கவின் என கட்சிக்காக வேலை பார்த்த பலரும் விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். உதயசூரிய ந் நின்றால் மட்டுமே பவானிசாகர் தொகுதியை 20 ஆண்டுகள் கழித்து நம்முடையதாக்க முடியும்.’ என்றனர்.
பவானிசாகரில் கட்சியினர் விருப்பப்படி சூரியன் உதிக்குமா? கட்சி முடிவுக்காக காத்திருக்கும் உடன்பிறப்புகள்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
